ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த திரைத்துறையினர்

0
5

ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த திரைத்துறையினர்

ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நடிகர் கார்த்தி, நடிகை மற்றும் இயக்குநர் ரோஹினி, தயாரிப்பாளர் தேண்டாண்டாள் முரளி, தயாரிப்பாளர் 2D ராஜசேகர் உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலக்த்தில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021க்கு எதிராக முறையிட்டனர்.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கார்த்தி, “ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக முதலமைச்சரிடம் பேசினோம். இந்த சட்டத்தில் பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் பைரசி கட்டுப்படுத்தப்படும். ஆனால், சென்சார் செய்த படங்களுக்கு மீண்டும் சென்சார் செய்ய முடியும் என்பது மிகப்பெரிய ஆபத்து. இது வரக்கூடிய படங்களுக்கு மட்டுமல்லாமல் ஏற்கெனவே வெளிவந்த படங்களுக்கும் ஆபத்துதான். இதை ஒன்றிய அரசு எப்படி செயல்படுத்தப்போகிறார்கள் எனபது குறித்த எந்த ஷரத்துகளும் அதில் குறிப்பிடவில்லை.

இது கருத்து சுதந்திரம் மட்டுமல்லாமல் வாழ்வாதாரத்தையே பாதிக்கூடியதாக இருக்கிறது. இதை அடுத்தகட்டமாக சட்டப்படிதான் கொண்டு செல்ல இருக்கிறோம். தற்போது தமிழ்நாடு அரசை அணுகியிருக்கிறோம். அரசும் உதவுவதாக தெரிவித்துள்ளது. இதேபோன்று அனைத்து மாநில அரசுகளும் திரைத்துறைக்கு உதவும் என நம்புகிறோம். ஏனென்றால் இந்த சட்டத்தால் வாழ்வாதாரமே கேள்விக்குறி ஆகிறது.” எனத் தெரிவித்தார்.

இதனிடையே பேசிய நடிகை ரோகினி “கலைப்படைப்பு என்ற ஒன்று இருக்கு. அது மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்றால், மக்களின் வாழ்க்கையை பற்றி பேச வேண்டும். கருத்துக்களை பேச விடக்கூடாது என குரல்வளையை பிடித்து நெறிக்கும் செயலாக இச்சட்டம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் என்ற ஒன்று இருக்கும். அதற்கு பாதுகாப்பு இல்லாத வண்ணம் கொண்டு செல்கின்றனர். ஒரு திரைப்படத்தை எடுத்து, ரிலீஸ் செய்ததற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பெறலாம் என கூறுகிறார்கள். இதுபோன்ற பாதுகாப்பின்மை எவ்வளவு பேருடைய வாழ்வாதாரத்தை பாதிக்கப்போகிறது என்பதை எடுத்து சொல்கிறோம்” என்றார்.