Site icon Chennai City News

#TNBUDGET2023: ‘மகளிர் உரிமைத்தொகை’ மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும்

#TNBUDGET2023: ‘மகளிர் உரிமைத்தொகை’ மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைநிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். அதன் விவரம் வருமாறு:-

கல்வியில், நிருவாகத்தில், அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் போதெல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம்.

அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது.

ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் – பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version