EMI (மாதத்தவணை) சினிமா விமர்சனம் : இஎம்ஐ (மாதத்தவணை) அனைத்து தரப்பினரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் | ரேட்டிங்: 3/5
நடிகர்கள் : சதாசிவம் சின்னராஜ் (சிவா), சாய் தான்யா (ரோஸி), பேரரசு, பிளாக் பாண்டி (பாலா), சன் டிவி ஆதவன், OAK சுந்தர், லொள்ளு சபா மனோகர், டிகேஎஸ், செந்திகுமாரி (லக்ஷ்மி).
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இசை – ஸ்ரீநாத் பிச்சை
ஒளிப்பதிவு – பிரான்சிஸ்
பாடல்கள் – பேரரசு, விவேக்
எடிட்டர் – ஆர். ராமர்
நடனம் – தீனா, சுரேஷ் சித்
ஸ்டண்ட் – மிராக்கில் மைக்கேல்
தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி
படநிறுவனம் : சபரி புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பு – மல்லையன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சதாசிவம் சின்னராஜ்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
நாயகன் சிவா (சதாசிவம் சின்னராஜ்) மாம்பழ தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அங்கு சக ஊழியரான ரோஸியை (சாய் தான்யா) கண்டதும் காதல் கொள்கிறார். ரோஸியை கவர மாத தவணையில் விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கி அவரை சுற்றி வருகிறார். பின்னர் இருவரும் காதலர்களாக வலம் வந்து, திருமணத்தில் முடிகிறது. திருமணம் நாளன்று காதல் மனைவிக்கு மாத தவணையில் கார் ஒன்றை வாங்கி திருமண பரிசாக அளிக்கிறார். கார் மற்றும் பைக் மாதத் தவணையில் வாங்க சிவாவின் நெருங்கிய நண்பர்கள் பிளாக் பாண்டி மற்றும் டிகேஎஸ் உத்தரவாத கையெழுத்து போடுகிறார்கள். தம்பதிகள் இல்லற வாழ்க்கையை நல்லபடியாக நடத்தி வருகிறார்கள். இப்படி வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருக்கும்போது சிவா வேலையை இழக்கிறார். இதனால் பண நெருக்கடியில் சிக்குகிறார். பைக் மற்றும் காருக்கான இஎம்ஐ -யை செலுத்த முடியாமல், சிவா சிக்கலில் மாட்டுகிறார். அதே போல் உத்தரவாத கையெழுத்து போட்ட அவரது நண்பர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நண்பர்கள் இருவரும் சிவாவுடன் நட்பை முறிக்கிறார்கள். கடன் வழங்கியவர்கள் மூலம் பல அவமானங்களை சந்திக்கும் சிவா எப்படி கடன் தொல்லையில் இருந்து மீண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
சதாசிவம் சின்னராஜ் நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டு வேலைகளை செய்துள்ளார். மாதத் தவணைகளில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் நடுத்தர வர்க்க குடும்ப தலைவனாக சிவா கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார்.
ரோஸி வேடத்தில் சாய் தான்யா சிறப்பாக நடித்துள்ளார், மேலும் திரைக்கதையில் ஆழத்தையும் உணர்ச்சியையும் சேர்க்கிறார்.
நண்பர்களாக பிளாக் பாண்டி, டிகேஎஸ் மற்றும் மாத தவணை வசூலிப்பவராக நடித்திருக்கும் ஆதவன் ஆகியோர் தோன்றும் காட்சிகளில் பார்வையாளர்களை கலகலப்பாக வைத்துள்ளனர்.
ரோஸியின் தந்தையாக பேரரசுவின் நடிப்பு பெரிய அளவில் எடுபடவில்லை.
சிவாவின் அம்மா லக்ஷ்மியாக செந்தி குமாரி, OAK சுந்தர், லொள்ளு சபா மனோகர், உட்பட அனைவரும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பால் தருணங்களை மேம்படுத்தி திரைக்கதையின் இயக்கத்திற்கு வலுவாக பங்களிக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் பிரான்சிஸின் யதார்த்தமான காட்சி கோணங்கள், இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையின் இசை மற்றும் பின்னணி இசை, மற்றும் எடிட்டர் ஆர். ராமரின் படத்தொகுப்பு ஆகியவை கதையின் உணர்ச்சித் தாக்கத்தை அதிகரிப்பதிலும் திரைக்கதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கடன்களால் போராடும் உலகில் தனி நபர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளை இந்தப் படம் ஆராய்கிறது. இந்தச் சுமைகளின் உணர்ச்சி மற்றும் சமூக தாக்கத்தை இது எடுத்துக் காட்டுகிறது. தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்கள், மாதாந்திர தவணைகள் மூலம் பல வசதிகளை அனுபவிக்க கடன் வாங்குகிறார்கள், அதன் விளைவாக, திட்டமிடல் இல்லாததால், அவர்கள் சிக்கலில் சிக்கி, வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகள் நிறைந்த திரைக்கதை மூலம், நிஜ வாழ்க்கையில் நிதி நெருக்கடி மற்றும் கடன் வழங்குபவர்களின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் மக்களின் போராட்டங்களை இயக்குனர் சதாசிவம் சின்னராஜ் கச்சிதமாகச் சொல்லியுள்ளார்.
மொத்தத்தில் சபரி புரொடக்ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரித்திருக்கும் இஎம்ஐ (மாதத்தவணை) அனைத்து தரப்பினரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.