Site icon Chennai City News

திருவண்ணாமலை கிரிவலம் : ‘பாதைகள் போர்கால அடிப்படையில் சரி செய்யப்படும்’ – அமைச்சர் சேகர்பாபு!

திருவண்ணாமலை கிரிவலம் : ‘பாதைகள் போர்கால அடிப்படையில் சரி செய்யப்படும்’ – அமைச்சர் சேகர்பாபு!

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட நியூ ஆவடி சாலை, காந்தி நகரில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் வருகை தந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் ஏற்கனவே உள்ள சமுதாய நலக்கூடம் இடித்து சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட உள்ள புதிய சமுதாய நலக்கூடத்திற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, பின்னர் ஜார்ஜ் டவுன் பி.ஆர்.என். கார்டன் பகுதியில் கட்டப்பட உள்ள வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியது வருமாறு :

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் 7 இடங்களில் புதிதாக மற்றும் ஏற்கனவே உள்ள சமுதாய நலக்கூடங்களை திருமண மண்டமாக மாற்றி கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இராயப்புரத்தில் முதலாவதாக தொடங்கப்பட்டுள்ளது.‌ அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு அடுத்த வருட இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

நமது முதலமைச்சர் பணியை மக்கள் பாராட்டி வருகிறார்கள். மழை, வெள்ள பாதிப்பில் முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், திமுகவினர் என அனைவரும் களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர்.

மழை அறிவிப்பு வெளியான உடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல் அரசு திமுக அரசு. எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சியாக இருக்கக் கூடாது. விமர்சனங்களை கண்டு ஓடி ஒளிபவர் அல்ல எங்கள் முதல்வர். உங்கள் கருத்துக்களை கேட்டு அதற்கான நடவடிக்கைகளை எங்கள் முதல்வர் மேற்கொள்வார்.

போர்கால அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை தீபத்திற்கு கிரிவலப் பாதையில் பிரச்னைகள் ஏற்பட்டால் போர்கால அடிப்படையில் சரி செய்யப்படும். எவ்வளவு மக்கள் கூட்டம் வந்தாலும் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிஜ ஹீரோவே தவிர, நிழல் ஹீரோ அல்ல.” என்றார்.

Exit mobile version