
கரிசல் குயில் கி.ரா இறுதிச்சடங்கு

அரசு மரியாதையுடன் நடைபெறும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சாகித்ய அகாடமி விருதுபெற்ற கி.ராஜநாராயணன் நேற்று காலமானார். வயது 99. புதுச்சேரியில் வசித்து வந்த அவர், மூப்பின் காரணமாக உயிரிழந்தார். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் நாவல்களை எழுதிய கி.ரா., ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை ‘, ‘தமிழின் மகத்தான கதைசொல்லி’ என்று போற்றப்படுகிறார். மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கரிசல் மண்ணின் கதைகளை, அம்மக்களின் வாழ்க்கையை தனது எழுத்துகளில் சிறப்பாகக் கையாண்ட கி.ரா, தனக்கெனத் தனி பாணியைக் கைக்கொண்டு எழுத்துலகில் முக்கிய இடத்தைப் பிடித்தவர்.
மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “கி.ரா என்று என்று எழுத்துலகில் அன்போடு அழைக்கப்பெறும் கி.ராஜநாரயணன் அவர்களது மறைவு கரிசல் மண்ணின் கதைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி. தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான அவரை இழந்து நிற்கிறோம். தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள். யார் ஆறுதல் சொல்வார்? இந்த மண் உள்ளவரை; அதில் கரிசல் இலக்கியம் உள்ளவரை; ஏன், தமிழ் உள்ளவரை நமது உள்ளங்களில் அவரது புகழ் வாழும்!
அந்தோ! அந்தக் கரிசல் குயில் கூவுவதை நிறுத்திக் கொண்டதே!
அவர் மறையவில்லை; எழுத்துகளாய் உயிர் வாழ்கிறார். நம் உயிரில் கலந்து வாழ்கிறார். வாழ்க அவரது புகழ்! அவரது குடும்பத்தினருக்கும், சக படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும், தமிழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
'கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்!
கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்!
அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும்.
குடும்பத்தினர் – வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!
— M.K.Stalin (@mkstalin) May 18, 2021
சாகித்ய அகாடமி விருதுபெற்று தமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய்ப் பெருவாழ்வு வாழ்ந்த கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா. அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.