Site icon Chennai City News

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

திருவள்ளூர், செப். 23–

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.திருவள்ளுர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஜெ.ராதாகிருஷ்ணன், திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநிலத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளுர் மாவட்டத்தில் திருவள்ளுர் பேருந்து நிலையத்தில், பொதுமக்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் ஆகியோர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவௌி முழுமையாக கடைபிடித்து முககவசம் அணிந்து பாதுகாப்பாக செல்ல அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும், முககவசம் அணியாத முதியோர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரிடமும் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என முககவசம் அணிவதன் அவசியத்தை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகவசம் அணியாதவர்களிடம் முககவசம் வழங்கி, கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

திருவள்ளுர் தேரடி பஜார் வீதியில், ஜவுளிகடை, பாத்திரக்கடை, காய்கறி அங்காடி உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கு செல்லும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள சமூக இடைவௌியுடனும், முககவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னர், திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு சிறப்பு சிகிச்சை மையத்திற்கு நேரில் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்து, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டது. அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர்கள் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி, நோயிலிருந்து குணமடைய செய்ய உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மாநிலத்தில் இதுவரை முககவசம் அணியாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50,000-த்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ. ஒரு கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளி கடைபிடிக்காத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ரூ. 5000 முதல் ரூ. 50,000-ம் வரையிலும் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அபராதம் விதிக்கும் நோக்கம் அல்ல, விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கமாகும். மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து 6.5 சதவிகிதம் விழுக்காடுகளுக்கு குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது.

பின்னர், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.. மேலும், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் வழிபாடு செய்யும் இடங்களுக்கு நேரில் சென்று சமூக இடைவௌியுடன், முககவசம் அணிந்து தரிசனம் மேற்கொள்வது தொடர்பாக பக்தர்கள மற்றும் இந்து சமயஅறநெறி அலுவலர்களிடமும் அறிவுறுத்தப்பட்டது.

மலைக்கோயில் அருகில் கடை வைத்துள்ள வியாபாரிகளிடம் வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பொதுதுமக்கள் அர்ச்சனை பொருட்களை வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சமூக இடைவெளியிடன் முககவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அனைத்து வழிபாட்டு தலங்களான கோயில்கள், தேவாலயங்கள் மசூதிகள் மற்றும் பௌத்த மத கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் முழுமையாக சமூக இடைவௌியுடன் முககவசம் அணிந்து வழிபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்வாய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, துணை இயக்குநர்கள் (பொது சுகாதாரம்) ஜவஹர்லால் (திருவள்ளுர்), பிரபாகரன் (பூவிருந்தவல்லி), திருவள்ளுர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவர்த்சவ், மருத்துவர்கள், செவிலியர்கள மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version