Site icon Chennai City News

ஒரு தலைமுறைக்கே ஊக்கமாக இருந்ததற்கு நன்றி – விராட் கோலிக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய ஹாங்காங் அணி

ஒரு தலைமுறைக்கே ஊக்கமாக இருந்ததற்கு நன்றி – விராட் கோலிக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய ஹாங்காங் அணி

துபாய், 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இந்த நிலையில் நேற்றிரவு துபாயில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா,ஹாங்காங்குடன் மோதியது.டாஸ்’ ஜெயித்த ஹாங்காங் கேப்டன் நிஜாகத்கான் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் (26 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி 59 ரன்களுடனும் (44 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

பின்னர் மெகா இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் 20 ஓவர் முழுமையாக ஆடி அந்த அணி 5 விக்கெட்டுக்கு 152 ரன்களே எடுத்தது.இதனால் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது.

இந்த நிலையில் போட்டி முடிந்ததும் விராட் கோலிக்கு ஹாங்காங் அணி வீரர்கள் தங்களது அணியின் ஜெர்சியை பரிசளித்துள்ளனர். அந்த ஜெர்சியில் ஒரு தலைமுறைக்கே ஊக்கமாக இருந்ததற்கு நன்றி. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் என எழுதி பரிசாக அளித்துள்ளனர்.

இதனை விராட் கோலி, நன்றி ஹாங்காங் இது மிகவும் இனிமையானது என தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version