Site icon Chennai City News

‘முற்போக்குப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்’ – புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி!

‘முற்போக்குப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்’ – புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் காட்டிய சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என்ற முற்போக்குப் பாதையில் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்களின் கரம் பற்றி நாம் பயணிப்போம் என்கிற உறுதியோடும் நம்பிக்கையோடும் புத்தாண்டை வரவேற்போம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம்! 2024-ஆம் ஆண்டு பல்வேறு புதுமைகளையும் அனுபவங்களையும் நினைவுகளையும் நமக்குத் தந்துவிட்டு விடைபெறுகிறது. 2025-ஆம் ஆண்டு புத்தாண்டில், முக்கடல் கூடும் குமரியில் நம் ‘திராவிட மாடல் அரசு’ நடத்திய ‘திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா’-விலிருந்து தொடங்குகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல் அரசு’ 2024-இல் தமிழ்நாட்டின் ஏற்றத்துக்கும்-வளர்ச்சிக்கும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. 2024-இன் தொடக்கத்திலேயே லட்சோப லட்சம் இளைஞர்கள் பங்கேற்புடன் இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கும் வகையில், மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் கழக இளைஞர் அணியின் மாநில மாநாட்டை நடத்தியதை, இன்று நினைத்துப் பார்க்கிறோம். 2024 -மக்களவைத் தேர்தல் களத்தில், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் பாசிச சக்திகளையும் அடிமைகளையும் வீழ்த்தி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் நம் கழகம் பாதுகாத்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது உத்தரவின் பேரில், தமிழ்நாடெங்கும் துறை ரீதியிலான ஆய்வு, மக்கள் நலத்திட்டங்கள் வழங்குதல் – புயல், மழை நேரத்தில், மக்களுடன் களப்பணியாற்றிய தருணங்கள் என, ஒரு நாளில் 24 மணி நேரம் போதவில்லை என்கிற அளவுக்கு 2024-இல் சுற்றிச்சுழன்று பணியாற்றியிருக்கிறோம்.

கலைஞர் நூற்றாண்டில் கழக இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப் போட்டியை நடத்தி, 182 இளம் பேச்சாளர்களைக் கண்டறிந்து, கழகத் தலைவர் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். 100-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், கலைஞர் நூலகங்களைத் திறந்திருக்கிறோம். இந்தப் பணிகள் அனைத்தும் புதிய உத்வேகத்துடன் பிறக்கும் 2025-ஆம் ஆண்டிலும் தொடரும்! நம் கழகத்தையும் கழக அரசையும் நம் தலைவர் அவர்களையும் தமிழ்நாட்டின் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

இது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உழைப்பால், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் வியர்வையால், தியாகத்தால் உண்டான பந்தம். புழுதிகளால் சூரியனை மறைக்க முடியாது. 2026-இல் நம் கழகக் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் பெறவிருக்கும் மாபெரும் வெற்றிக்கு 2025-ஆம் ஆண்டு நாம் ஆற்றப் போகும் களப்பணி ஆதாரமாக விளங்கட்டும்! தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் – தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் காட்டிய சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என்ற முற்போக்குப் பாதையில் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்களின் கரம் பற்றி நாம் பயணிப்போம் என்கிற உறுதியோடும் நம்பிக்கையோடும் புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! ” என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version