Chennai City News

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 20வது முதலமைச்சராக பதவி ஏற்றார் ரங்கசாமி. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ரங்கசாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களில் 16 இடங்களை கைப்பற்றி என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, இரண்டு நாள்களுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்எல்ஏக்கள் துணை நிலை ஆளுநரை சந்தித்து, என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற கட்சி தலைவராக ஏற்று ஆட்சி அமைக்க உரிமை கோரி கூட்டாக கடிதம் அளித்தனர்.

இதையடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ரங்கசாமியை பதவியேற்க அழைப்பு விடுத்தார். அவர் எந்த தேதியில் பதவியேற்க விரும்புகிறாரோ அன்று பதவியேற்று வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஆளுநரை சந்தித்த என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் வெள்ளிகிழமை (07.05.2021) பிற்பகல் 1 மணியளவில், ரங்கசாமி முதலமைச்சராக பதவி ஏற்க விரும்புவதாக கடிதம் அளித்தனர். அதன்படி, இன்று ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடந்தது.

இதில், புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 20வது முதலமைச்சராக பதவி ஏற்றார் ரங்கசாமி. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ரங்கசாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுச்சேரியில் 2001, 2006, 2011 என இதுவரை மூன்று முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தற்போது 4வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார் ரங்கசாமி. இவரை தொடர்ந்து, மற்ற அமைச்சர்கள் அடுத்த 2 தினங்களில் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.

இந்த நிகழ்வில் பாஜகவின் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், புதுச்சேரி பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், திமுக, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள ரங்கசாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. என்.ரங்கசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

அவரது அரசு, புதுச்சேரி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் நல்லரசாக திகழ்ந்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் வழிவகுக்கட்டும்!

என டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Exit mobile version