Chennai City News

தமிழக சட்டசபை தேர்தல் 2021: “முதல்வர் நட்ட அடிக்கலில் கட்டடமே கட்டலாம்” – முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் பேச்சு

தமிழக சட்டசபை தேர்தல் 2021: “முதல்வர் நட்ட அடிக்கலில் கட்டடமே கட்டலாம்” – முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் பேச்சு

புதுக்கோட்டை, தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய நிதிமந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து ஆலங்குடியில் ப.சிதம்பரம் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய ப.சிதம்பரம், முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டிய செங்கல்களை வைத்து ஒரு பெரிய கட்டிடமே கட்டி இருக்கலாம் என்றார். மேலும், கூவத்தூர் செல்லும்வரை பழனிசாமி என்று ஒரு அமைச்சர் இருப்பதே தமக்கு தெரியாது என்றார். ஆலங்குடி தொகுதியில் 60 நாட்களுக்கு முன் மாற்றுக்கட்சியில் இருந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்து அதிமுகவினருக்கு அக்கட்சி துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் சாடினார்.

ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக தர்ம தங்கவேல் போட்டியிருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version