Site icon Chennai City News

சர் ஜான் மார்ஷலுக்கு திருவுருவச்சிலை… – சிந்துவெளி நாகரிகத்தை கொண்டாடும் தமிழ்நாடு அரசு!

சர் ஜான் மார்ஷலுக்கு திருவுருவச்சிலை… – சிந்துவெளி நாகரிகத்தை கொண்டாடும் தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு 05.01.2025 முதல் 07.01.2025 வரை மூன்று நாட்கள் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 05.01.2025 அன்று காலை 10.00 மணியளவில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த மேனாள் இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் அவர்களின் திருவுருச்சிலைக்கு அடிக்கல் நாட்டியும், சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு என்ற நூலினை வெளியிட்டும் விழாப் பேருரையாற்றவுள்ளார்கள்.

சிந்துவெளி நாகரிகம் முதன்முதலில் 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாளன்று உலகுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை ‘தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்’ (The Illustrated London News) என்ற இதழில் சர் ஜான் மார்ஷல் அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையினை உண்டாக்கியது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகுக்கு அறிவிக்கப்பட்ட சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நமது கடந்த கால வரலாற்றைப் பற்றிய புரிதலை மாற்றியது. இந்தக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்து ஆய்வு மையமும் இணைந்து, மூன்று நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கை ஒருங்கிணைத்து நடத்துகின்றன.

சிந்துவெளி குறித்து ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா, மார்க் கெனோயர், கிரிகோரி போசெல், ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல அறிஞர்கள் ஆராய்ந்து, நமது புரிதலை வலுப்படுத்தி வந்துள்ளனர்.

கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் எண்ணற்ற சிந்துவெளி நாகரிகம் தொடர்பான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையொட்டி சிந்துவெளி சார்ந்த புரிதலை ஆழமாக்க வேண்டியது அறிவுலகின் கடமை. சர் ஜான் மார்ஷல் குறித்தும் அவரது பங்களிப்புகள் குறித்தும் ஆய்வுகள் அதிகம் வெளிவராத நிலையில் அதனை ஆய்தல், சிந்துவெளி எழுத்துகளைப் பற்றியும் அதன் விளக்கங்கள் சார்ந்தும் பல ஆராய்ச்சிகள் செய்தல், பண்டைய மரபார்ந்த அடையாளங்களைக் கொண்டு தனித்துவமான கருத்தாக்கங்களை உண்டாக்குதல், சிந்துவெளியைப் புரிந்துகொள்வதற்கான நவீனத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தல், மரபணு ஆய்வுகளைப் பயன்படுத்துதல், சிந்துவெளியின் பொருள்சார் பண்பாட்டை ஆராய்தல் முதலியவற்றின்மூலம் சிந்துவெளி நாகரிகம் குறித்து இன்னும் தெளிவான புரிதலை உண்டாக்க முடியும். மறுபுறம் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப்பெறும் பானை ஓடுகளில் உள்ள கீறல்கள் சிந்துவெளி வரிவடிவங்களோடு ஒப்பீட்டு அளவில் ஒன்றாக இருக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டும் இந்தக் கருத்தரங்கம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பல்துறைசார்ந்த கண்ணோட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலமும், உரையாடலை வளர்ப்பதன் மூலமும், சிந்துவெளி நாகரிகம் பற்றிய நமது புரிதலையும், சமகாலச் சமூகத்தில் காணப்படும் அதன் நீண்ட தொடர்பையும் தெளிவாக்குவதே இந்தக் கருத்தரங்கின் மைய நோக்கமாகும். மேலும், இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கு அறிஞர்கள், தொல்லியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள், ஆர்வலர்கள் முதலியோரையும் சமீபத்திய அகழாய்வுகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றையும் ஒருங்கிணைத்து, சிந்துவெளிப் பண்பாட்டைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கு இக்கருத்தரங்கம் வழிவகை செய்கிறது.

* இக்கருத்தரங்கில் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Dr. கிரெக் ஜேமிசன் அவர்கள் சிந்துப் பண்பாட்டின் முத்திரைகள்: நடப்பு பார்வைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் என்ற தலைப்பிலும்,

* வரலாற்று எழுத்தாளர் டோனி ஜோசப் அவர்கள் ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிப்பு: நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் நிலவும் சில கேள்விகளும் சிக்கல்களும் என்ற தலைப்பிலும்,

* அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா. நயன்ஜோத் லஹிரி அவர்கள் சிந்துவெளி நாகரிகம்: ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பினைத் திரும்பிப்பார்த்தல் என்ற தலைப்பிலும்,

* தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் மதிப்புறு ஆலோசகர் பேரா. ராஜன் அவர்கள் சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஓர் ஒப்பீட்டு ஆய்வு என்ற தலைப்பிலும்,

* ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மைய ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் சிந்துவெளிப் புதிர்களைப் புரிந்துகொள்ளுதல்: இருமொழி எழுத்துகள் இல்லாத நிலையில் என்ற தலைப்பிலும், ஹரப்பா.காம் நிறுவனர் ஓமர் கான் அவர்கள் ஹரப்பா.காம்@30 என்ற தலைப்பிலும்,

* ஐக்கிய இராச்சியம் (UK), டர்காம் பல்கலைக்கழகத் தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் கிறிஸ்டோபர் டேவிஸ் அவர்கள் மார்ஷல் மீதான புத்தொளி: சர் ஜான் மார்ஷல் அவர்களின் தொல்லியல் அணுகுமுறைகளை ஆராய்தல் என்ற தலைப்பிலும் கருத்துரைகள் வழங்கவுள்ளனர்.

மேலும், மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இக்கருத்தரங்கில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 24 ஆய்வாளர்கள் தொல்லியலாளர்கள் சிந்துவெளி நாகரிகம் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தின் இதர நாகரிகங்கள், பண்பாடுகள் குறித்துப் பல்வேறு தலைப்புகளில் தங்களது ஆய்வுரைகளை வழங்கவுள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் பொதுமக்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் நேரலையில் ஒளிப்பரப்பப்பட உள்ளன.

Exit mobile version