Chennai City News

சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் : தலைமை தேர்தல் கமிஷனர் 2 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து சென்னை வந்தார்

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா

சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் : தலைமை தேர்தல் கமிஷனர் 2 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து சென்னை வந்தார்

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 15-வது சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.

இதேபோல், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் சட்டசபையின் பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைகிறது.

இந்த 5 மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்துக்கு தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் குழு நேரடியாக சென்று, ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (புதன்கிழமை) முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஆய்வு மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், 2 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

இந்த குழுவில், தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா, துணை தேர்தல் கமிஷனர் சந்திரபுஷன்குமார், கூடுதல் இயக்குனர் ஜெனரல் சேபாலி சரண், இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவா, செயலாளர் மலே மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Exit mobile version