Chennai City News

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீர் ஆய்வு

Kamal Haasan, Makkal Needhi Maiam, TN Assembly Election 2021, கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் , தமிழக சட்டசபை தேர்தல் 2021

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீர் ஆய்வு

கோவை: கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவியது.

நேற்று காலை சென்னையில் தனது வாக்கை பதிவு செய்த கமல்ஹாசன், உடனடியாக அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை வந்தார். கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வாக்குப்பதிவு விவரம், எதாவது பிரச்சனைகள் உண்டா? என தேர்தல் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தோல்வி பயத்தில் உள்ளவர்கள் டோக்கன் வழங்கி பணப்பட்டுவாடா செய்வதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து அவர் தேர்தல் அதிகாரி சுப்பிரமணியத்தை நேரில் பார்த்து பணப்பட்டுவாடா குறித்து புகார் தெரிவித்தார்.

அதன்பின் அவர் இரவில் கோவையிலேயே தங்கியிருந்து வாக்குப்பதிவு விவரங்களை உன்னிப்பாக கவனித்தார். இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு காரில் சென்றார்.

மைதானம் வரை காரில் வந்த கமல்ஹாசன் அங்கிருந்து தனது கட்சிக்காரர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்து வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வரை சென்றார்.

பின்னர் கோவை தெற்கு தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கமல்ஹாசன் சென்றார். அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து மற்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்த கமல்ஹாசன் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

Exit mobile version