Chennai City News

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்: நினைவிடத்தில் மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின்.. நலதிட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்:

நினைவிடத்தில் மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின்.. நலதிட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

சென்னை, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதலமைச்சர் இன்று துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் ‘போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்’ என அலங்கரிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர் பாலு, அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, கனிமொழி, சேகர் பாபு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செய்தனர்.

அதனை தொடர்ந்து கருணாநிதியின் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.

தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியான ரூ.2,000 இரண்டாவது தவணை வழங்கலை தொடங்கி வைப்பது, மாவட்டத்துக்கு 1,000 மரக்கன்றுகள் என 38,000 மரங்கள் நடும் திட்டம், ரேஷன் கடைகளில் 14 மளிகை பொருள்கள் இலவசமாக வழங்கும் திட்டம், கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உள்ளிட்ட 18 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version