Chennai City News

கர்ப்பிணிகளை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் – டிடிவி தினகரன்

கர்ப்பிணிகளை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் – டிடிவி தினகரன்

அனுப்பானடி சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தவர் சண்முகப்பிரியா. 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால், நுரையீரலில் 90 சதவிகிதம் அளவுக்கு தொற்று ஏற்பட்டதால், சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் சண்முகப்பிரியா மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், கொரோனா தடுப்புப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்த செய்தி பெரும் வேதனை அளிக்கிறது.

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version