Chennai City News

உலகின் மிகப்பெரிய விமானம் ரஷியாவால் தகர்ப்பு!

உலகின் மிகப்பெரிய விமானம் ரஷியாவால் தகர்ப்பு!

கீவ், இன்று 5-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகின. கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர்.

உக்ரைன்- ரஷிய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கொரானா தொற்றின் நெருக்கடியான காலங்களில் உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை எடுத்து சென்ற நம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் “மிரியா”, இந்த விமானம் நடைபெற்று வரும் போரில் கியேவுக்கு வெளியே ரஷ்ய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது.

இதுகுறித்து உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா டுவிட்டரில், “ரஷியா நமது ‘மிரியா’வை அழித்திருக்கலாம். ஆனால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய அரசு என்ற நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாம் வெல்வோம்” என பதிவிட்டுள்ளார்.

மிரியா விமானம் உக்ரைனின் அன்டோனோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. மிரியா என்றால் உக்ரைன் மொழியில் கனவு என்று அர்த்தம்.

இந்த விமானம் கடந்த 1985-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 30 சக்கரங்கள், 6 எஞ்சின்கள், 290 அடி இருக்கைகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் என்ற சிறப்பை பெற்றது.

இந்த விமானத்தால் 4,500 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். கொரோனா கால கட்டத்தில் உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை மிரியா விமானம் எடுத்துச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version