Site icon Chennai City News

ஆண்டாள் கோயில் விவகாரம்: ‘சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல’ – இளையராஜா பதிவு!

ஆண்டாள் கோயில் விவகாரம்: ‘சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல’ – இளையராஜா பதிவு!

தன்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருவதாக இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்

சென்னை: மார்கழி மாத பிறப்பையொட்டி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்கு (டிசம்பர் 15) இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்பொழுது, அர்த்த மண்டபத்திற்குள் சென்ற இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற செய்தி பேசுபொருளாக மாறியது.

அதாவது, ஜீயர்களுடன் கருவறை வரை சென்ற இளையராஜா, அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி பரவியது மட்டும் இல்லாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

இதனை தொடர்ந்த, ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்தில் இளையராஜா அனுமதிக்கப்படாதது குறித்து கோயில் நிர்வாகமும், இந்து அறநிலையத்துறையும் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில், இளையராஜா தனது சமூக வலைத்தள வாயிலாக ‘சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல’ என்று குறிப்பிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிகழ்வு தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அர்த்தம் மண்டபத்தையும் கருவறை போன்றே பாவிப்பதாகவும், அதனுள் ஜீயர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லையென்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை, இளையராஜா ஏற்றுக் கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், மடாதிபதிகள், பரிசாரகர் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அர்த்த மண்டபத்தின் வாசலில் நின்று தரிசனம் செய்யலாம் என்று ஜீயர் சொன்னதை இளையராஜா ஏற்றுக் கொண்டார் என்று இந்து அறநிலையத்துறை கூறியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://x.com/ilaiyaraaja/status/1868617199944126695

Exit mobile version