ஃபெஞ்சல் புயல் : மேலும் 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் : அமைச்சர் செந்தில் பாலாஜி!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.
மேலும் அதை தொடர்ந்து பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.