நினைவெல்லாம் நீயடா சினிமா விமர்சனம் : நினைவெல்லாம் நீயடா காதலர்களின் நினைவலைகள் | ரேட்டிங்: 2.5/5

0
217

நினைவெல்லாம் நீயடா சினிமா விமர்சனம் : நினைவெல்லாம் நீயடா காதலர்களின் நினைவலைகள் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்:

பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, கேப்ரில்லா, மனோபாலா, மதுமிதா, ரஞ்சன்குமார், ஸ்ரீ பிரியங்கா, ரெடின் கிங்ஸ்லி, வழக்கு எண் முத்துராமன், ரோஹித், யுவலட்சுமியும், அயலி அபி நட்சத்திரா, யாசர், பி.எல்.தேனப்பன், தண்டபாணி உட்பட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் :

படத்தொகுப்பு பிரபாகர்.
சண்டைக்காட்சிகள் தளபதி தினேஷ்.
பாடல்கள் – பழநிபாரதி, சினேகன்.
நடனம் – பிருந்தா, தீனா.
இசை – இசைஞானி இளையராஜா.
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரித்துள்ளார். சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார்.

நினைவெல்லாம் நீயடா கதை பள்ளி நாட்களில் நடக்கும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் போதே கௌதம் (ரோஹித்+ பிரஜின்) மற்றும் மலர்விழி (யுவலட்சுமி, சினாமிகா) காதலிக்கிறார்கள். முதலில் காதலை சொல்ல தயங்கும் கௌதம் ஒரு கட்டத்தில் தனது காதலை மலர்விழியிடம் கடிதம் மூலம் சொல்கிறார். மலர்விழி திடீரென வெளிநாடு சென்று விடுகிறாள். கௌதம் அவளை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விடுகிறது. வெளிநாடு போகும் போது மலர்விழி காதலனுக்கு தனது எண்ணத்தை கடிதத்துடன் அவருக்கு விருப்பமான இசைக்கருவியுடன் இணைத்து தனது வீட்டு காவலாளியிடம் கொடுத்து கௌதம் வசம் கொடுக்கும் படி கூறுகிறாள். ஆனால் கௌதமுக்கு மலர்விழி கொடுத்து அனுப்பிய இசைக்கருவி மட்டும் பரிசாக கிடைக்கிறது. மலர்விழி தன்னை முழுவதுமாக காதலிக்கிறார் என நினைத்துக் கொள்கிறார் கௌதம். இந்நிலையில் கௌதமை அவரது மாமன் மகள் (மணிஷா யாதவ்) காதலிக்கிறார். கௌதம் அந்த காதலை ஏற்க மறுக்கிறார். ஒரு பக்கம் வீட்டில் உள்ளவர்கள் கௌதமை மாமன் மகளை திருமணம் செய்யும் படி வற்புறுத்துகிறார்கள். ஆனால் கௌதம் தன் காதலி வருவாள் என்று கூறி அவள் வருகைக்காக காத்திருக்கிறான். வெளிநாட்டிற்கு சென்ற மலர்விழி அங்கு யாரையாவது திருமணம் செய்து கொண்டு, கணவன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பார் என்று கௌதமின் நண்பர்களும், பள்ளி தோழர்களும் கூறி,நீயும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி, கௌதமை மாமன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு மலர்விழியை மறக்க முடியாமல் கௌதம் தனது மனைவியை தவிர்க்கிறார். கணவனின் அன்பை பெற பல முயற்சிகளை செய்யும் மனைவிக்கு ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்படுகிறாள். கௌதம் சம்பவங்களை மறக்க குடிக்கிறான். இந்நிலையில் பள்ளி தோழியின் சகோதரி திருமணத்திற்கு கலந்து கொள்ள 15 வருடங்கள் கழித்து தனது காதலன் கௌதமை திருமணம் செய்து கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து மலர்விழி சென்னைக்கு வருகிறார். மலர்விழி மற்றும் கௌதம் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கும் பரபரப்பான சம்பவங்களுடன் நினைவெல்லாம் நீயடா கதை விரிவடைகிறது.

நாயகனாக பிரஜன் காதலியின் வருகைக்காக காத்திருந்து சூழ்நிலை மற்றும் வற்புறுத்தலின் காரணத்தால் மாமன் மகளை மணந்து, வாழப் பிடிக்காமல் காதலியை மறக்க முடியாமல் தவிக்கும் காட்சிகள் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மாமனை காதலித்து, போராடி மணம் முடித்து பின், மணவாழ்க்கையில் மாமனுடைய அன்பு கிடைக்காமல் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அழகான மனிஷா யாதவ் அற்புதமான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார்.

இளம் வயது நாயகன் நாயகியாக நடித்திருக்கும் ரோஹித், யுவலட்சுமியும், அபிநய நட்சத்திரா, தண்டபாணி ஆகியோர் இயல்பான நடிப்பில் பள்ளி மாணவர்களாக வாழ்ந்திருக்கின்றனர்.

15 வருடங்கள் கழித்து தனது காதலன் கௌதமை திருமணம் செய்து கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து வரும் மலர்விழி  கதாபாத்திரத்தில் சினாமிகா தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்துள்ளார்.

பள்ளி நாட்கள் காட்சிகளில் நம்மை கலகலப்பாக மனோபாலா வைத்துள்ளார்.

ஸ்ரீ பிரியங்கா, நண்பனாக ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா, வழக்கு எண் முத்துராமன், அயலி அபி நட்சத்திரா, யாசர், பி.எல்.தேனப்பன் உட்பட அனைவரும் நிறைவான நடிப்பு வழங்கி உள்ளனர்.

பழநிபாரதி, சினேகன் பாடல் வரிகளுக்கு 1980 -யை நினைவூட்டும் வகையில் இசைஞானி இளையராஜா இசை இருந்தது என்றாலும் பின்னணி இசை இசைஞானி இளையராஜா தான் அமைத்தாரா என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரபாகர் மொத்தத்தில் 30 நிமிட காட்சிகளை குறைத்து இருந்தால் படம் நிச்சயம் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
இன்றைய கால கட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே அந்த வயதில் வருவது காதல் அல்ல மாறு பாலின ஈர்ப்பு தான். இதனால் பள்ளி மாணவர்களுக்கு மன கிளர்ச்சி ஏற்பட்டு தடம் மாறி விடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. காதலை சொல்ல ஏன் பள்ளி பருவத்தை மீண்டும் மீண்டும் கதைக்களமாக இயக்குனர்கள் கையாளுகிறார்கள் என்று தெரியவில்லை. அதே தடத்தில் பள்ளி காதலை மையமாக கொண்டு, பள்ளிக்கூட காதலில் சிக்கிய ஒருவரின் எதிர்காலம் எப்படி மாறுகிறது என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆதிராஜன். அழுத்தமான திரைக்கதை அமைந்திருந்தால் ‘நினைவெல்லாம் நீயடடா’ இன்னும் சுவாரஸ்யமாக இருந்து இருக்கும்.

மொத்தத்தில் லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரித்துள்ள நினைவெல்லாம் நீயடா காதலர்களின் நினைவலைகள்.