Chennai City News

பொம்மை நாயகி விமர்சனம் : பொம்மை நாயகி இந்த ஆண்டின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக நிச்சயம் இடம்பிடிக்கும்  | ரேட்டிங்: 3.5/5

பொம்மை நாயகி விமர்சனம் : பொம்மை நாயகி இந்த ஆண்டின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக நிச்சயம் இடம்பிடிக்கும்  | ரேட்டிங்: 3.5/5

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பொம்மை நாயகி’. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை சுபத்ரா, ‘மெட்ராஸ்’ ஹரி கிருஷ்ணன், குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். விக்னேஷ் சுந்தரேசன், வேலன், லெமுவேல் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்கள். மக்கள் தொடர்பு குணா.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அல்லிக்குப்பம் என்ற ஊரில் டீக்கடையில் வேலை பார்த்து வருபவர் வேலு (யோகி பாபு). அவருக்கு மனைவி கயல்விழி (சுபத்ரா), மற்றும் 9வயது பெண் குழந்தை; பொம்மை நாயகி (ஸ்ரீமதி). நுனி நாக்கு ஆங்கிலத்தில் தன் மகள் பேசுவதைக் கண்டு, ‘ஏம்பொண்ணு’ என பெருமை கொள்ளும் தந்தை குடும்பத்துடன் சந்தோஷமாக குறைவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அதே பகுதியில் அவருடைய அண்ணன் செந்தில் (அருள்தாஸ்) குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வேலுவின் தாய் இரண்டாம் தாரம் என்பதால், அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், சொந்த அண்ணனாலும், சொந்த ஊரிலும் வேலு பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார். டீக்கடையை உரிமையாளர் விற்றதால், வேலுவுக்கு வேலை பறிபோகிறது. இந்த நிலையில், சொந்தமாக கடை வாங்கலாம் என எண்ணி பணம் திரட்டி கொண்டிருக்கும் போது, அவரது மகள் பொம்மை நாயகி திடீரென கோவில் திருவிழாவின்போது காணாமல் போகிறார். தன் மகளைத் தேடிக் கண்டு பிடிக்கும் பொழுது மேல் சாதியில் இருக்கும் ஒரு சிலர் அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்வதை பார்க்கிறார். வேலு அவர்களை அடித்துத் துரத்தி அவர்களிடம் தன் குழந்தையை காப்பாற்றுகிறார் வேலு. இந்த விஷயத்தை தன் அண்ணனான செந்திலிடம் கொண்டு செல்கிறார். இந்தக் குற்றத்தை செய்தவர்கள் செந்தில் சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் தவறு செய்தவர்கள் அவருடைய சாதி என்பதால் இதனை தட்டிக் கழிக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய மகளுக்கு நடந்தவற்றை தட்டி கேட்க ஊரில் மக்கள் யாரும் முன் வராத காரணத்தினால் காவல்துறையின் உதவியை நாடுகிறார்? ஆனால் அங்கே புகாரை வாங்க மறுத்ததால் நீதிமன்றத்திற்க்கு சமூக ஆர்வலர் ஹரி கிருஷ்ணன் உதவியுடன் செல்கிறார் வேலு. இப்படி நீதி துறையை நாடும் வேலுவுக்கு நீதி கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையாக சவாலான கதாப்பாத்திரத்தை தாங்கி பிடித்து கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் யோகிபாபு. கனமான கதாபாத்திரங்களையும் நேர்த்தியாகக் கையாள முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் யோகி பாபு நிரூபித்து இருக்கிறார்.அவரின் குணசித்திர நடிப்புத் திறமை பற்றி பேர் சொல்லும் ஒரு சில பட வரிசையில் பொம்மை நாயகி இடம்பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எதார்த்தமான நடிப்பின் மூலம் ஒரு சில இடங்களில் நம்மை கண்கலங்க வைக்கிறார். வாழ்த்துக்கள் யோகிபாபு.

அவரது மனைவியாக சுபத்ரா தன் முழு திறமையையும்  தேர்ந்த நடிப்பையும் வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.

மகளாக வரும் குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி, தேர்ந்த அருமையான நடிப்பை வெளிப்படுத்தி தனித்து ஜொலிக்கிறார். அப்பா மகள் உணர்வுகளை இருவரும் அழகாக கையாண்டு எமோஷனல் டச் கொடுத்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். அவர் வசனம் பேசும் இடங்களும், அதற்கான டைமிங்கும் பார்வையாளர்களுக்கு எமோஷனல் டச். குறிப்பாக ‘நான் எதுவும் தப்பு பண்ணிடேனாப்பா’ என அவர் பேசும் இடம் உருக வைக்கிறார்.

கம்யூனிஸ்ட்டாக  ஹரி (மெட்ராஸ் ஜானி), தந்தை ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, ராக்ஸ்டார் ரமணியம்மாள் யதார்த்த நடிப்பால் கவனம் பெறுகிறார்கள்.

அதிசயராஜ் ஒளிப்பதிவு மற்றும் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும் படத்தை அயற்சி இல்லாமல் பயணிக்க வைக்கிறது.

தாழ்த்தப்பட்டோர் நீதிக்காக போராட வேண்டிய கடினமான மற்றும் முடிவில்லாத போராட்டத்தையும், அந்தச் சுழலில் அவர்கள் சிக்கிக் கொள்ளும் போது அவர்களின் வாழ்க்கை எப்படி அர்த்தமற்றதாகும் என்பதை பொம்மை நாயகி கண்முன் கொண்டு வருகிறார். பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையை மிகுந்த உணர்திறனுடன், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தேவையான பல கேள்விகளை முன் வைத்து இடதுசாரிய சிந்தனையை கருத்தியலாக கொண்டு எங்கேஜிங் திரைக்கதையுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஷான்.

மொத்தத்தில்  நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொம்மை நாயகி இந்த ஆண்டின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக நிச்சயம் இடம்பிடிக்கும்.

Exit mobile version