வல்லமை சினிமா விமர்சனம் : வல்லமை வலி நிறைந்தவள் | ரேட்டிங்: 3/5
நடிகர்கள்:
பிரேம்கி – சரவணன் (தந்தை)
திவதர்ஷினி – பூமிகா (மகள்)
தீபா சங்கர் – (டாக்டர்)
வழக்கு என் முத்துராமன் – (காவல் ஆய்வாளர்)
சி.ஆர்.ரஜித் – சக்கரவர்த்தி (வில்லன்)
சூப்பர்குட் சுப்ரமணி – (போலீஸ் கான்ஸ்டபிள்)
சுப்பிரமணியன் மாதவன் – (வில்லன் டிரைவர்)
விது – பாபு (பெட்ரோல் திருடன்)
போராளி திலீபன் – சிவகுமார் (பள்ளி ப்யூன்)
படக்குழு
தயாரிப்பு பேனர்: பேட்டிலர்ஸ் சினிமா
எழுத்து – பாடல்கள் – தயாரிப்பு – இயக்கம் – கருப்பையா முருகன்
இசையமைப்பாளர்: ஜி.கே.வி
ஒளிப்பதிவு இயக்குனர்: சூரஜ் நல்லுசாமி
எடிட்டர்: சி கணேஷ் குமார்
கலை இயக்குனர்: எஸ்.கே. அஜய்
மக்கள் தொடர்பு : நிகில்முருகன்
விவசாயி சரவணன் (பிரேம்ஜி) தனது காதல் மனைவி ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த சில வருடங்களுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறார். மனைவியின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட அவர், கேட்கும் திறனை இழக்கிறார். அதனால் அவருக்கு ஒரு காது கேட்கும் கருவியை பொருத்தி கொள்கிறார். தனது மகள் பூமிகவை (திவதர்ஷினி) நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக கிராமத்தை விட்டு, சென்னைக்கு வருகிறார். ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் அவர்கள் ஒரு வாடகை வீட்டில் குடியேறுகின்றனர். சென்னையில், சினிமா போஸ்டர்களை ஒட்டி பிழைப்பு நடத்தி தனது அன்பு மகளின் பள்ளிப் படிப்பை ஆதரித்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். இந்நிலையில், வழக்கம் போல் பள்ளியில் இருந்து மகளை வீட்டிற்கு அழைத்து வரும் போது, தனக்கு பிறப்புறுப்பில் ரத்தம் வந்து அந்த இடத்தில் வலி இருப்பதாக தந்தையிடம் கூற, மகளை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் பிரேம்ஜி. மகள் பூப்பெய்து விட்டாள், தன் மகளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவரிடம் (தீபா சங்கர்) ஆலோசனை கேட்கிறார் தந்தை. அங்கு, மகளை சோதித்து பார்த்த மருத்துவர் அந்த குழந்தை அவருக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்து உடைந்து போகிறார் சரவணன். தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று அவள் தன் தந்தையிடம் கூறுகிறாள், எனவே அந்தக் கொடூரமான மனிதனைக் கண்டுபிடித்துத் கொல்வதன் மூலம் மட்டும் தான் தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்பட்ட காயம் ஆறும் என்று அவள் நினைக்கிறாள். அந்த காமக் கொடூரன் யார்? அவனை எப்படிக் கண்டுபிடித்து கொல்கிறார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.
எப்போதும் வழக்கமான ஒரு சலிப்பை ஏற்படுத்தும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரேம்ஜி, இந்த படத்தில் தகப்பனாக மகள் மீதான பாசம், பழிவாங்கும் உணர்வு, அப்பாவித்தனம் என ஒரு உணர்வுபூர்வமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஒரு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்து இருக்கிறார். தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவள் படும் வலியும், வேதனையும், பற்றி தூக்கம் இல்லாமல் கண்கலங்கும் காட்சிகள் அனைவரின் கண்கள் குளமாகின. இப்படிப்பட்ட ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் திரைக்கதைக்கு வலுசேர்த்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தமைக்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.
மகள் பூமிகாவாக திவாதர்ஷி மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பள்ளியில் தான் பங்கேற்கும் நடனத்தை காண அப்பா வருவார் என ஏக்கத்துடன் காத்திருக்கும் காட்சி மற்றும் தந்தை மடியில் மீது படுத்து தனது மன வலியை கூறி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவனை கண்டுபிடிச்சுக் கொல்லணும்ப்பா என்று சொல்லும் காட்கிகளில் ஸ்கோர் செய்துள்ளார்.
மருத்துவராக தீபா சங்கர், காவல் ஆய்வாளராக வழக்கு என் முத்துராமன், வில்லன் சக்கரவர்த்தியாக சி.ஆர்.ரஜித், போலீஸ் கான்ஸ்டபிளாக சூப்பர்குட் சுப்ரமணி, வில்லன் கார் டிரைவராக சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடன் பாபுவாக விது, அரசு பள்ளி பியூனாக போராளி திலீபன் உட்பட அனைத்து துணை கதாபாத்திரங்கள் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதை நகர்வுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.கே.வி, ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி, எடிட்டர் சி கணேஷ் குமார், கலை இயக்குனர் எஸ்.கே. அஜய் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இன்றைய சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளின் வலியை பார்வையாளர்களிடம் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் கருப்பையா முருகன். கதை வரம்புகள் இருந்தபோதிலும், திரைக்கதை மற்றும் காட்சி படுத்ததில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் பேட்டிலர்ஸ் சினிமா சார்பில் கருப்பையா முருகன் தயாரித்திருக்கும் வல்லமை வலி நிறைந்தவள்.