லாக்கர் விமர்சனம் : லாக்கர் விறுவிறுப்பான ராபரி திரில்லர் | ரேட்டிங்: 3.5/5
நாராயணன் செல்வம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் லாக்கர் படத்தை ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து இயக்கி உள்ளார்கள்.
இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம், அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன், சுப்ரமணியன் மாதவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்ய அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா, விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கணபார்த்தி. மக்கள் தொடர்பு சக்தி சரவணன். ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில் ஜெனீஸ் வெளியிடுகிறார்.
நாயகன் விக்னேஷ் சண்முகம், மற்றும் இரு நண்பர்கள் ஊரில் உள்ளவர்களை நூதன முறையில் மோசடி செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பிறகு அவர்கள் ஷேர் மார்க்கெட் பிசினசில் தங்களது மோசடி வேலையை தொடர்கிறார்கள். இந்நிலையில், நாயகி நிரஞ்சனி அசோகன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கையில் பணம் இல்லாததால் அப்போது ஓட்டலுக்கு நண்பனுடன் வரும் நாயகனுடன் ஏற்கனவே அறிமுகமானவர் போல் பேசி தன் பில்லுக்கு பணம் கொடுக்க வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறார். நாயகன் விக்னேஷ் சண்முகம் அவரது அழகில் மயங்கி ஒருதலைப்பட்சமாக காதலிக்கத் தொடங்குகிறார். நாளடைவில் நடைபெறும் பல எதிர்பாராத சந்திப்புகள் இருவரும் காதலர்களாகின்றனர். ஷேர் மார்க்கெட் பிசினஸ் தொடர்பாக சுப்ரமணியன் மாதவனிடம் நூதன முறையில் கொள்ளையடித்த பணத்தை வீட்டில் வைக்கின்றனர். வீட்டில் விக்னேஷ் சண்முகத்தை சந்திக்க வரும் நாயகி அப்போது வீட்டில் உள்ள பணத்தை பார்த்ததும் விக்னேஷ் சண்முகம் ஒரு மோசடி பேர்வழி என்று தெரிந்ததும் அவரை விட்டுப் பிரிகிறார். தன் காதலுக்காக திருந்த நினைத்த விக்னேஷ் சண்முகம், சுப்ரமணியன் மாதவனிடம் மோசடி பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறார். மீண்டும் அவரை ஏற்றுக் கொள்ளும் நாயகி நிரஞ்சனி தன்னையும் தன் குடும்பத்தினரிடமிருந்து சொத்துக்களை ஒரு பெரிய தொழிலதிபர் தாதாவுமான நிவாஸ் ஆதித்தன் ஏமாற்றி பறித்து விட்டார் என்று கூறுகிறார். அதனால் அதே வழியில் நிவாஸ் ஆதித்தனை ஏமாற்றி பணம் சம்பாதிக்க நாயகனை தூண்டுகிறாள்.அந்த தாதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளை அடிக்கச் அதற்கான ஸ்கெட்ச் போட்டு அதை செயல்படுத்தவும் செய்கிறார்கள்.அதன் பின் என்ன என்ன சம்பவங்கள் நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விக்னேஷ் சண்முகம் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பை தந்துள்ளார். கோலிவுட்டில் நாயகனாக நிச்சயம் ஒரு ரவுண்ட் வலம் வருவார் என்பது உறுதி.
நாயகியாக நிரஞ்சனி அசோகன் படத்தில் அழகாகவும் இருப்பதுடன், அசத்தலான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
வில்லனாக நிவாஸ் ஆதித்தன், சுப்ரமணியன் மாதவன், நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என அனைவரும் நேர்த்தியான நடிப்பு தந்திருக்கிறார்கள். நண்பனாக நடித்திருக்கும் தாஜ் பாபு அவ்வப்போது அனைவரையும் கலகலப்பாக வைத்துள்ளார்.
இரட்டை இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் இணைந்து வழக்கமான கதைகளத்தில் கமர்ஷியல் விஷயங்களை புகுத்தி திடீர் திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார்கள்.
மொத்தத்தில் நாராயணன் செல்வம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் லாக்கர் விறுவிறுப்பான ராபரி திரில்லர்.