மையல் சினிமா விமர்சனம் : மையல் பார்வையாளர்கள் மனதை ஈர்க்க தடுமாறுகிறது | ரேட்டிங்: 2.5/5

0
185

மையல் சினிமா விமர்சனம் : மையல் பார்வையாளர்கள் மனதை ஈர்க்க தடுமாறுகிறது | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள் : சேது, சம்ரித்தி தாரா, பி.எல். தேனப்பன், மறைந்த சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா, சி.எம். பாலா மற்றும் பலர்.

படக்குழுவினர் :
இயக்குனர் – ஏபிஜி. ஏழுமலை​
தயாரிப்பு – ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி
தயாரிப்பாளர்கள் – அனுபமா விக்ரம் சிங் மற்றும் வேணுகோபால்.ஆர்
கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் – ஜெயமோகன்
இசை-அமர்கீத். எஸ்
ஒளிப்பதிவு – பாலா பழனியப்பன்
எடிட்டர் -வெற்றி சண்முகம்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர்

ஒரு கிராமத்தில் இரவு நேரத்தில் வாரிசு இல்லாத ஒரு முதியவரையும் அவரது மனைவியையும் மர்ம மனிதர்கள் இரண்டு பேர் கொலை செய்கிறார்கள். அடுத்த நாள் விஷயம் அறிந்து அந்த கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் சி.எம்.பாலா விசாரிக்கிறார். அன்று இரவு ஆடு திருடும் மத்தசாமி (சேது) இந்த கிராமத்தில் ஆட்டை திருடும் போது கிராம மக்கள் துரத்துகின்றனர். இருட்டில் பொதுமக்களிடம் இருந்து தப்பித்து பயந்து ஓடும் போது எதிர்பாராதவிதமாக ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள கிணற்றுக்குள் விழுந்து விடுகிறார். விடிந்ததும் கிராம மக்களால் ஒதுக்கப்பட்டு ஊரின் ஒதுக்குப்புறத்தில் வாழும் சூனியக் கிழவி ரத்தின கலாவின் பேத்தி அல்லி ( சம்ரிதி தாரா) கிணற்றிலிருந்து மாடசாமியை காப்பாற்றி, அவருக்கு வைத்தியம் செய்கிறார். முதல் பார்வையிலேயே மத்தசாமியை கண்டதும் அல்லி காதல் வயப்படுகிறார். ஊர் மக்கள் திருடன் மத்தசாமியைத் தேடும் நிலையில் அவரை காப்பாற்றவும், காயத்திற்கு வைத்தியம் பார்ப்பதற்கும் மத்தசாமி அங்கு ஊர் மக்களுக்கு தெரியாமல் தங்க வைக்கப்படுகிறார். மத்தசாமி அங்கு தங்கி சிகிச்சை பெறும் போது அல்லி காட்டிய அன்பால் மல்லி மீது இவரும் காதல் கொண்ட அவளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். இருவரின் காதலுக்கு அவரது பாட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார். மத்தசாமி குணமடைந்து திருமண ஏற்பாடு செய்ய அவரது ஊருக்கு திரும்புகிறார். கொலை செய்யப்பட்ட வாரிசு இல்லாத வயதான தம்பதியர்கள் அந்த ஊர் பெரிய மனுஷன் பி.எல்.தேனப்பனின் சித்தப்பா ஆவார். சொத்துக்கு ஆசைப்பட்டு போலீஸ் உதவியுடன் பி.எல்.தேனப்பன் தான் ஆட்களை ஏவி கொலை செய்தவர். இந்த கொலை கேஸ் முடிவுக்கு கொண்டு வர இன்ஸ்பெக்டர் சி.எம்.பாலாவுக்கு பணம் கொடுத்து அந்த கொலையை செய்த தன் அடியாட்களில் ஒருவரை என்கவுண்டர் செய்ய சொல்கிறார் ஊர் பெரிய மனுஷன் தேனப்பன். மத்தசாமி திருமணத்திற்கு தேவையான தாலி, நகை மற்றும் புடவையுடன் அன்று இரவு அல்லியை சந்திக்க கிராமத்துக்கு வருகிறார். இந்நிலையில் அந்த நேரத்தில் அங்கு கொலையாளி ஒருவனை என்கவுண்டர் செய்த போலீசார், அங்கிருந்து தப்பி ஓடிய மற்றொரு கொலையாளியை தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது போலீசை பார்த்ததும் ஓட முயன்ற மத்தசாமியை இன்ஸ்பெக்டர் சி.எம்.பாலா போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு ஏற்கனவே திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட மத்தசாமியை கொலை குற்றவாளியாக்க இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? துன்பங்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த வாழ்க்கையை விரும்பும் மத்தசாமி-அல்லி காதல் சமூகத் தடைகளைத் தாண்டி திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மைனா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக மிரட்டலான நடிப்பு தந்த சேது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மையல் படத்தில் சேது ரீ-என்ட்ரி கொடுத்து கதையின் நாயகன் மத்தசாமி கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்.

பாவாடை, தாவணியில் அழகிய நாயகி சம்ரித்தி தாரா அல்லி கதாபாத்திரத்தில் அப்பாவிதனம், கண்டதும் காதல், ஏக்கம் என அனைத்து முகபாவனைகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

வில்லன்களாக பி.எல்.தேனப்பன், இன்ஸ்பெக்டராக சி.எம்.பாலா, சூனியக் கிழவியாக ரத்னகலா, போலீஸ் ஏட்டாக மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணி உட்பட அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள கதைக்கு ஒளிப்பதிவாளர் பாலா பழனியப்பன் ஒவ்வொரு ஃபிரேமும் அழகாக கைப்பற்றியுள்ளார்.

இசையமைப்பாளர் அமர்கீத். எஸ் இசை கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதையோடு பயணிக்க வைக்கிறது.

எடிட்டர் – வெற்றி சண்முகம் படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சமூகப் பிரச்சனையை சொல்லும் வகையில் மண் சார்ந்த வலுவான கிராமத்து பின்னணியில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்களுடன் கதை, திரைக்கதை எழுதி உள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

ஒரு சாதாரண அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலை நிறுத்தவும் பாதுகாக்கவும் சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவால் அவரது உண்மையான காதல் சிதைவடைவதை கதைக்களமாக எடுத்து சொல்லும் போது திரைக்கதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும். இயக்குனர் ஏபிஜி ஏழுமலை திரைக்கதையில் இவை அனைத்திலும் கூடுதலாக கவனம் செலுத்தி காட்சிப்படுத்தி இருந்தால் நிச்சயம் மையல் மற்றொரு மைனாவாக பேசப்பட்டு இருக்கும்.

மொத்தத்தில் ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி சார்பில் அனுபமா விக்ரம் சிங் மற்றும் வேணுகோபால்.ஆர் இணைந்து தயாரித்திருக்கும் மையல் பார்வையாளர்கள் மனதை ஈர்க்க தடுமாறுகிறது.