Chennai City News

மேதகு 2 விமர்சனம் : இலங்கையில் தமிழீழ மக்களின் உரிமைகளுக்காக நடக்கும் போராட்டக்களத்தில் ஏற்பட்ட துரோகங்கள், சூழ்ச்சிகளை அப்பட்டமாக சொல்லும் மேதகு 2 | ரேட்டிங்: 2.5/5

மேதகு 2 விமர்சனம் : இலங்கையில் தமிழீழ மக்களின் உரிமைகளுக்காக நடக்கும் போராட்டக்களத்தில் ஏற்பட்ட துரோகங்கள், சூழ்ச்சிகளை அப்பட்டமாக சொல்லும் மேதகு 2 | ரேட்டிங்: 2.5/5

தஞ்சை குகன் குமார், அயர்லாந்த் கவிஞர் திருக்குமரன், டென்மார்க் சுமேஷ் குமார், தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா ஆகியோர் தயாரித்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இரா.கோ யோகேந்திரன்.

இதில் கௌரி சங்கர், நாசர் மற்றும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். இசை:பிரவின்குமார், ஒளிப்பதிவு:வினோத் ராஜேந்திரன், பிஆர்ஒ: கே.எஸ்.கே செல்வா.

இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கும் மேதகு 2 இலங்கையில் தமிழீழ மக்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தமிழக கல்லூரி மாணவ-மாணவியர்கள் தமிழீழத்தை பற்றி நன்கு அறிந்த நெறியாளர் நாசர் அவர்களை சந்திக்கின்றனர். அவர்களின் கேள்விகளுக்கு பதிலாக நாசர் ஈழத்தில் நடந்த போர் எதனால் ஏற்பட்டது? அங்கு உண்மையில் நடந்தது என்ன? என்பதை விவரிக்கும் விதமாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலில் பூர்வகுடிகளாக இருக்கும் தமிழர்களை அங்கரீக்காமல் ஆங்கிலேயர்கள் சிங்களவர்களிடம் அதிகாரத்தை கொடுத்ததும், அவர்களின் அதிகார துஷ்பிரயோகங்களால் ஈழ தமிழ் மக்களை ஒடுக்க நினைத்து பல கொடூரமான செயல்கள் அரங்கேறியதும், இதனை கண்டு வெகுண்டெழும் இளைஞர்களில் ஒருவராக பிரபாகரன் மற்றும் அவரது சகாக்கள் வியூகம் அமைத்து எதிரிகளை பந்தாடியதும், பல போலீஸ் நிலையங்களை கொள்ளையடித்து தங்களை தற்காத்து கொள்ள கற்றுக் கொண்டதையும், அதன் பின் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை ஆரம்பித்ததையும், கொரில்லா போர் பற்றியும் விவரமாக சொல்கிறார் நாசர்.

அதன் பின் தமிழகம் கொடுத்த அழுத்தத்தால் தமிழீழ இயக்கங்களுக்கு இந்தியா உதவ முன் வந்ததையும், மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் செய்த பண உதவியையும், அதன் பின் நடந்த அரசியல் சூழ்ச்சியால் தமிழீழ இயக்கங்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டதையும் விரிவாக திரைக்கதையில் கொண்டு வந்து 20 வருட தமிழீழ போராட்டங்களுடன் படம் முடிவுக்கு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகம் வெகு விரைவில் வெளி வரும்.

பிரபாகரனாக நடித்துள்ள கௌரி சங்கர், நாசர் மற்றும் பல புதுமுக நடிகர்கள் படத்திற்கு உறுதுணையாக இருந்து காட்சிகளுக்கு உயிர் நாடியாக திகழ்ந்திருக்கிறார்கள்.

இசை – பிரவின்குமார், ஒளிப்பதிவு – வினோத் ராஜேந்திரன் படத்திற்கு பலமாக இருந்து வலு சேர்த்துள்ளனர்.

சிங்கள அரசால் தமிழ் மக்களின் சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டு, பறிக்கப்பட்டு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி பிரச்சனைகளை சந்தித்து துணிச்சலாக எதிர்கொண்டார்கள் தமிழர்கள் என்பதை மேதகு முதல் பாகத்தில் சொல்லி இரண்டாம் பாகத்தில் அடுத்த 20 ஆண்டுகளில் மக்கள் அனுபவித்த கொடுமைகளையும், துன்பங்களையும் விவரித்து, தமிழீழ இயக்கங்கள்  பலம் பொருந்தி சக்தி வாய்ந்தவைகளாக மாறிய காலங்களும், அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களும், தடங்கல்களையும் நிதர்சனமாக உணர்த்தியுள்ளார் இரா.கோ யோகேந்திரன்.

வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு துவங்கியுள்ளது. தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்சொட் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியும்.

மொத்தத்தில் இலங்கையில் தமிழீழ மக்களின் உரிமைகளுக்காக நடக்கும் போராட்டக்களத்தில் ஏற்பட்ட துரோகங்கள், சூழ்ச்சிகளை அப்பட்டமாக சொல்லும் மேதகு 2

Exit mobile version