மாமன் சினிமா விமர்சனம் : மாமன் குடும்ப உறவுகளிடையேயான பாசத்தை அரவணைக்கும் ஒரு ஆழமான குடும்ப நாடகம் | ரேட்டிங்: 4/5
நடிகர்கள் :
தயாரிப்பு லார்க் ஸ்டுடியோஸ்
வெளியீடு – ஸ்ரீ குமரன் பிலிம்ஸ்
தயாரிப்பாளர் – கே. குமார்
நடிகர்கள்:
சூரி – இன்பா
ராஜ்கிரண் – சிங்கராயர்
ஐஸ்வர்யா லெட்சுமி – ரேகா
ஸ்வாசிகா கிரிஜா
பாபா பாஸ்கர் – ரவி
மாஸ்டர். பிரகீத் சிவன் (அறிமுகம்) – நிலன்
பால சரவணன் – பூங்காவனம்
ஜெய பிரகாஷ் – ரேகா அப்பா
விஜி சந்திரசேகர் – பவுன்
கீதா கைலாசம் – இன்பா அம்மா
சாயா தேவி – இன்பா முறைப்பெண்
நிகிலா சங்கர் – அகிலா
படக்குழுவினர் :
எழுத்து – இயக்கம் – பிரசாந்த் பாண்டியராஜ்
கதை – சூரி
ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்
இசை -ஹேஷாம் அப்துல் வஹாப்
படத்தொகுப்பு – கணேஷ் சிவா
கலை – ஜி. துரை ராஜ
சண்டை – மேத்யூ மகேஷ்
நடனம் – பாபா பாஸ்கர்
வரிகள் – விவேக், ஏக்நாத், பெர்னாண்டோ எஸ் மனோகரன்
விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோக்
தயாரிப்பாளர் – கே. குமார்
வெளியீடு – ஸ்ரீ குமரன் பிலிம்ஸ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்திருச்சி மாவட்டத்தில் இனிப்பு பலகார கடை ஒன்றை நடத்தி வருகிறார் இன்பா (சூரி). தந்தையை இழந்த அவருக்கு, தன் அக்கா கிரிஜா (ஸ்வசிகா) தான் உயிர். ரவி (பாபா பாஸ்கர்) என்ற அன்பான மனிதரை மணந்த போதிலும், பத்து வருடங்களாக அவரது சகோதரி கிரிஜாவுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லை. சமூகம் மற்றும் அவர்களது சொந்த குடும்பத்தினரிடமிருந்து பெரும் எதிர்ப்புகளை எதிர் கொண்டு, இருந்த நிலையில் கிரிஜா வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் கர்ப்பமடைகிறாள். இன்பா மற்றும் குடும்பத்தினர் கிரிஜா கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறார்கள். கிரிஜா ஒரு அற்புதமான எதிர்காலத்தை கற்பனை செய்யத் தொடங்குகிறாள். அக்காவுடன் மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் இன்பா அங்கு மகப்பேறு மருத்துவர் ரேகாவை (ஐஸ்வர்யா லெக்ஷ்மி) சந்திக்கிறார். தன்னுடைய அப்பாவை போல பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறாரே என இன்பாவை மருத்துவர் ரேகா காதலிக்கிறார். இந்நிலையில், கிரிஜா ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். இன்பா தனது மருமகனைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறார். நிலன் எனப்படும் லட்டு (பிரகீத் சிவன்) மீது இன்பா மிகுந்த அன்பான மாமாவாக மாறுகிறார். லட்டுக்கு எல்லாம் மாமன் இன்பா தான். இந்த பிணைப்பு லட்டுவின் வாழ்க்கையில் உள்ள மற்ற எல்லா பிணைப்புகளையும் மீறுகிறது, மேலும் 5 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்பா தன் காதலி ரேகாவை திருமணம் செய்து கொள்ளும்போது போது இந்த அதிகப்படியான உணர்ச்சியே இன்பா மற்றும் ரேகா தம்பதியினரிடம் ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகிறது. அந்த பிரச்னை மேலும் விரிவடைந்து கிரிஜாவுடன், குடும்பச் சண்டையாக மாறுகிறது. மாமனும் மருமகனும் பிரிகிறார்கள். அதற்குப் பிறகு அக்காவுக்கும் தம்பிக்கும் மருமகனுக்கும்இடையே நடக்கும் பாசப் போராட்டம்தான் மாமன் படத்தின் மீதிக்கதை.
ஓட்டு மொத்த குடும்பத்தினர் மீது அக்கறை, அக்கா, அக்கா மகன் மீது அதீத பாசம், மனைவி மீதான காதல் எனக் குடும்பங்களின் கதாநாயகனாக பணிவில் வேரூன்றிய அற்புதமான நடிப்பு தேவையான அளவு வழங்கி பார்வையாளர்கள் இதயங்களில் நிரந்தரமான இடத்தை பிடித்து விட்டார் சூரி. காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் காட்சிகளில் கலக்கி உள்ளார். கதையின் நாயகனாக தான் ஒரு அற்புதமான குணசித்திர நடிகர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.
கிரிஜாவாக ஸ்வாசிகா அக்கா-தம்பி-மகன் இடையே உள்ள பாச போராட்டத்தை உணர்ச்சிப்பூர்வமான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார்.
ஐஸ்வர்யா லெட்சுமி கணவனின் அரவணைப்பு க்கு ஏங்கும் காதல் மனைவியாக ரேகா கதாபாத்திரத்தில் காதல், பாதிப்பு, மரியாதை, அவமானம் மற்றும் கோபம் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
சூரி, ஸ்வாசிகா, ஐஸ்வர்யா லெட்சுமி இவர்கள் மூவரும் சேர்ந்து உணர்வுகளும், உணர்ச்சிகளும் கலந்த திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
நிலன் (எ) லட்டுவாக சிறுவன் பிரகீத் சிவன் ஜொலிக்கிறார்.
வயதான குடுமபத்தலைவர் சிங்கராயர் (ராஜ்கிரண்) மற்றும் அவரது மனைவி பவுனு (விஜி சந்திரசேகர்), சூரியின் அம்மாவாக கீதா கைலாசம், மகனிடம் தன் பாசத்தை கொட்ட காத்திருக்கும் அமைதியான அக்கா வீட்டுக்காரர் மாமன் ரவி கதாபாத்திரத்தில் பாபா பாஸ்கர் ஆகியோர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதில் இடம் பிடித்துள்ளனர்.
மேலும், பால சரவணன், ஜெயபிரகாஷ், சாயா தேவி, நிகிலா சங்கர் என அனைவரும் நேர்த்தியான நடிப்பு வழங்கி கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா, கலை இயக்குனர் ஜி. துரை ராஜ், சண்டை – மேத்யூ மகேஷ், நடனம் – பாபா பாஸ்கர், என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அக்கா, அண்ணன், தம்பி, மாமா, மச்சான், அத்தை, அம்மா, பாட்டி, தாத்தா, நண்பன் என பாசம் நிறைந்த கூட்டுக்குடும்பத்தை மையப்படுத்தி ஒருங்கிணைந்த கதை மற்றும் திரைக்கதைக்கு உணர்ச்சிகரமாக உணர்வை ஏற்படுத்தும் விதமாக சிறப்பான பங்களிப்பை வழங்கி படத்தோடு ஒன்ற செய்துள்ளனர்.
குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட உறவுகள் இடையே அக்கா, தம்பி மற்றும் மாமன் என்ற உறவு முறை, பற்றி பாசமும் எமோஷனல் கலந்த திரைக்கதை அமைத்து குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எதார்த்தமான காட்சிகளால் பார்வையாளர்களை கவர்ந்து, கண்கலங்க வைத்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்.
மொத்தத்தில் லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் தயாரித்திருக்கும் மாமன் குடும்ப உறவுகளிடையேயான பாசத்தை அரவணைக்கும் ஒரு ஆழமான குடும்ப நாடகம்.