பிளாக் சினிமா விமர்சனம் : பிளாக் அறிவியல் புனைகதை பிரியர்களுக்கு நல்ல விருந்து | ரேட்டிங்: 3/5
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு, பி. கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் தயாரித்திருக்கும் பிளாக் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஜி.பாலசுப்ரமணி.
இதில் ஜீவா – வசந்த், பிரியா பவானி சங்கர் – ஆரண்யா, விவேக் பிரசன்னா – மனோகர், யோகி ஜேபி – சிவராஜ், ஷா ரா – சுரேஷ், ஸ்வயம் சித்தா – பிரபா, சிந்தூரி – லலிதா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – கோகுல் பினோய், படத்தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்குநர் – சதீஷ் குமார், சண்டைப் பயிற்சி – மெட்ரோ மகேஷ், நடனம் – ஷெரிஃப், பாடல்கள் – மதன் கார்க்கி, மக்கள் தொடர்பு – ஜான்சன்.
1964-ல் மனோ (விவேக் பிரசன்னா) தன் நண்பன் மற்றும் அவரின் காதலியுடன் நடு இரவில் தனது கடற்கரை வீட்டிற்கு செல்கிறார். வழியில் கனத்த மழை பெய்த்துக் கொண்டிருக்கும் வேளையில் உடைந்த சிலைகளுடன் ஒரு வண்டியின் வினோதமான சாலைத் தடுப்பை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். மனோ ஏற்கனவே தன் நண்பனின் காதலியை ஒருதலையாக காதலித்து வருகிறான். ஆத்திரத்தை வெளிக்காட்டாமல் மனதில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு உதவுவது போல அவர்களுடன் அந்த கடற்கரை வீட்டிற்கு வருகிறார். அன்று இரவு அவர்களை சுட்டுத் தள்ள நினைக்கும் மனோவுக்கு பயங்கரமான அலறல் சத்தம் கேட்கிறது. சத்தம் கேட்டு வீட்டுக்குள் நுழையும் போது தம்பதிகள் இறந்து கிடப்பதைக் காண்கிறார். கடற்கரை வீட்டில், விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. அதை தொடர்ந்து, 2024 காலவரிசை வசந்த் (ஜீவா) அவரது மனைவி ஆரண்யாவின் (பிரியா பவானி சங்கர்) காணாமல் போனது தொடர்பாக இன்ஸ்பெக்டர் (யோக் ஜேபி) விசாரிக்கப்படுவதில் இருந்து தொடங்குகிறது. வசந்த் காவல் நிலையத்தில் இருக்கும் போது, 48 மணி நேரத்திற்கு முன் என்ன நடந்தது என்பதை கதை நகர்கிறது. வசந்த் மற்றும் ஆரண்யாவின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் பின்வருமாறு…. சென்னை உப்பளப்பாக்கம் பகுதியில் வசந்த், ஆரண்யா காதல் தம்பதியினர் தாங்கள் புதிதாக வாங்கியிருக்கும் கடற்கரை வில்லாவில் விடுமுறையை கழிப்பதற்காக வருகிறார்கள். யாரும் இன்னும் குடி புகாத இந்தத் தொடர் வில்லாவுக்குள் அவர்கள் சென்றதும் பல மர்மமான நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முடிவு செய்தாலும், மீண்டும் அதே இடத்தில் வந்து மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களைப் போலவே ஒரு ஜோடி அங்கு உலாவுவதையும் அவர்கள் பார்க்கிறார்கள். பின்னர், தம்பதியினர் ஏதோ தவறு இருப்பதை கவனிக்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றிய வெவ்வேறு பதிப்புகளைச் சந்தித்து, அது இயற்கைக்கு அப்பாற்பட்டதா அல்லது அறிவியல் விளக்கம் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பல உண்மைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்கள் மற்றொரு வில்லாவில் தங்களைக் காண்கிறார்கள், ஒவ்வொரு முறையும் அவர்கள் ஒரு முழு நிலவின் கீழ் (இருள் நிறைந்த இடம்) இருளுக்குள் செல்லும் போது, அவர்கள் வெவ்வேறு யதார்த்தத்திற்குள் நுழைகிறார்கள், அங்கு காலச் சுழற்சியின் விளைவுகளால் அன்றாட நிகழ்வுகள் புதிய வழிகளில் வெளிப்படுகின்றன. படத்தின் மீதிக்கதை பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் தொடர் நிகழ்வுகளின் மூலம் அடுத்து என்ன நடந்தது என்பதை சொல்கிறது.
ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவருமே தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று குழப்பம் கலந்த பயத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தி தாங்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி, அறிவயல் சார்ந்த ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையை விறுவிறுப்பாக நகர இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலம் சேர்த்துள்ளனர்.
விவேக் பிரசன்னா – மனோகர், யோகி ஜேபி – சிவராஜ், ஷா ரா – சுரேஷ், ஸ்வயம் சித்தா – பிரபா, சிந்தூரி – லலிதா ஆகியோரின் திரை இருப்பு குறைவே என்றாலும் திரைக்கதை நிகழ்வுகளுக்கு தேவையான பங்களிப்பை நிறைவாக வழங்கி உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் அற்புதமான கேமரா கோணங்களுடன் ஒரே புள்ளியில் மூன்று காலவரிசைகளை இணைத்துள்ளார், மேலும் வசந்த் மற்றும் அவரது மனைவி ஆரண்யாவின் வாழ்க்கையை அவரது லென்ஸ் மூலம் பார்க்கிறோம். சாம் சி.எஸ் இசையும் பின்னணி இசையும் மிரட்டுகிறது. படத்தில் இசையும் கேமராவும் பின்னிப் பிணைந்துள்ளது.
ஃபிலோம் ராஜின் படத்தொகுப்பும், சதீஷ் குமாரின் கலையும் அறிவியல் அடிப்படையிலான கதையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் திரில்லர் காட்சிகளுக்கான உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் பலம் சேர்க்கிறது.
மெட்ரோ மகேஷின் சண்டைக் காட்சிகள், இரண்டு வசந்த் கதாபாத்திரங்கள் மோதும் அசத்தலான சண்டைக் காட்சிகள் கூடுதல் மதிப்பைக் கூட்டுகிறது.
2013 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான கோஹரன்ஸின் கதை, எட்டு நண்பர்கள் இரவு விருந்தில் கலந்து கொள்வது மற்றும் ஒரு வால் நட்சத்திரத்தின் தீய சக்தியால் ஒரு அறையில் சிக்கலான நிகழ்வுகளை அனுபவிப்பது போன்றது. இதை அடிப்படையாகக் கொண்டு, தமிழில் பிளாக் என்ற அறிவியல் புனைகதை திரைப்படம், சூப்பர் மூன் இரவு மற்றும் ஒரு வீட்டில் பல கால சூழ்ச்சியின் மூலம் யதார்த்தத்தின் கருத்துக்களை ஆராய்கிறது. சாதாரண மக்களுக்கு சாத்தியமில்லாத விஷயங்கள் நடக்கும் எந்தத் திரைப்படத்திலும், கதையின் பெரும்பகுதி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கும் அவர்களின் முந்தைய யதார்த்தத்தை விட்டுவிடுவதற்கும் செலவிடப்படுகிறது. பிளாக் ஜொலிக்க வைப்பது என்னவென்றால், பாத்திரம் அவர்கள் இருக்கும் சூழ்நிலை உடன் தொடர்பு கொள்ளும் விதம். பிளாக் என்பது வெவ்வேறு தடயங்களை தரும் ஒரு புதிர். உங்களுக்குத் தெரிந்த அனைத்தும் பொய்யாகி விட்டால் எப்படி நடந்து கொள்வார்கள்? அபாரமான திறமையான கலைஞர்கள் மற்றும் வலிமையான தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதையுடன் படம் பார்வையாளர்களை மகிழ்விப்பதால் இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணி அறிவியல் புனைகதை திரில்லரை கவர்ந்துள்ளார்.
மொத்தத்தில் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு, பி. கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் தயாரித்திருக்கும் பிளாக் அறிவியல் புனைகதை பிரியர்களுக்கு நல்ல விருந்து.