நிழற்குடை சினிமா விமர்சனம் : நிழற்குடை கூட்டுக் குடும்ப உறவுகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது | ரேட்டிங்: 3.5/5
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரித்திருக்கும் படம் நிழற்குடை. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார்.
நடிகர்கள் : தேவயானி, விஜித், கண்மணி, இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமாஇசை, தர்ஷன் சிவா, குழந்தைகள் நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
வசனம் – ஹிமேஷ்பாலா
இசை – நரேன் பாலகுமார்
கலை இயக்கம் – விஜய் ஆனந்த்
படத்தொகுப்பு – ரோலக்ஸ்
ஒளிப்பதிவு – ஆர் பி குருதேவ்
மக்கள் தொடர்பு – ஏ.ஜான்
ஐ.டி.கம்பெனியில் பணியாற்றும் லான்சி (கண்மணி) மற்றும் நிரஞ்சன் (விஜித்) குடும்பத்தை எதிர்த்து மதம் மீறிய காதல் திருமணம் செய்த தம்பதிகள் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரே லட்சியத்தில் இருக்கிறார்கள். அவர்களின் ஒரே மகள் நிலா, பெரும்பாலும் பராமரிப்பாளர் உடன் விடப்படுகிறார். குழந்தை நிலா அதிகமாக அழுதால் வலிப்பு ஏற்படும், அதனால் அவளை அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் அறிவத்துகிறார். நிலாவின் பராமரிப்பாளரின் மோசமான செயலால் நிறுத்தப்படுகிறார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள சரியான ஆள் கிடைக்காமல் தம்பதிகள் இருக்கிறார்கள். தம்பதி ஒரு காப்பகத்திற்கு தங்களது குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக வருகிறார்கள். அங்கு ஈழ இன அழிப்பு போரில், தனது மூன்று வயது குழந்தை மற்றும் குடும்பத்தினரை பறிகொடுத்து அகதியாக இந்தியா வந்து சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் வேலை செய்து வரும் இலங்கைத் தமிழரான ஜோதியை (தேவ்யானி) பார்க்கிறார்கள். ஜோதி அங்கு இருக்கும் பெரியவர்களை, முடிந்த வரை அவர்கள் பிள்ளைகளிடம் குடும்ப உறவின் முக்கியத்துவம் பற்றி பேசி அவர்களை குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார். தங்களின் குழந்தையை கவனித்துக் கொள்ள சரியான ஆள் ஜோதி தான் என்று முடிவு செய்து அவர்கள் தேவயானியை தங்கள் குழந்தையை கவனிக்க வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர். ஜோதி, நிலாவிடம் விரைவாக ஒரு ஆழமான, தாய்வழி பிணைப்பை உருவாக்குகிறார், பெற்றோர் இருவரும் தங்கள் தொழில் மற்றும் விசா விண்ணப்பங்கள் என்று வேலையில் முழ்கிவிட குழந்தை நிலாவின் முதன்மை பராமரிப்பாளராக ஜோதி மாறுகிறார். இதனிடையே லான்சி மற்றும் நிரஞ்சன் தம்பதிக்கு அமெரிக்கா செல்ல விசா கிடைக்கிறது. இதனால், குழந்தையை பிரிவதை நினைத்து ஜோதி வருத்தம் அடைகிறார். குழந்தை நிலாவும் அவருடன் இருக்க நினைக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா செல்லும் முன் தங்களுடைய நண்பர்களுக்கு லான்சி மற்றும் நிரஞ்சன் தம்பதி பார்ட்டி கொடுக்கின்றனர். அந்த பார்ட்டியில் திடீரென குழந்தை நிலா காணாமல் போகிறாள். உடனே போலீசில் புகார் கொடுக்கின்றனர். போலீசார் பலரை விசாரித்துவிட்டு ஜோதி மீது சந்தேகம் பட்டு அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
தேவயானி அமைதியான, அழுத்தமான உணர்ச்சிமிக்க ஜோதி கதாபாத்திரத்தில் தேவையான அவரது முக பாவங்களும், உடல் மொழியும் குழந்தையின் மீது அவர் பொழியும் பாசம், அவர் ஒரு உண்மையான தாயாக பார்வையாளர்கள் உணர்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு கம் பேக் கொடுத்துள்ள தேவயானி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் வெள்ளித்திரையில் ஜொலிக்கிறார்.
ஐ.டி. காதல் தம்பதிகளாக வரும் விஜித் – கண்மணி இருவருமே இன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டு மோகம், பணம் சம்பாதிப்பது, வசதியாக வாழ்வது மட்டுமே வாழ்க்கை என்று இருக்கும் பெரும்பாலான இளம் தம்பதிகளை பிரதிபலிப்பதன் மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
குழந்தை நட்சத்திரங்கள் அஹானா, நிஹாரிக்கா இருவரும் கச்சிதமாக பொருந்தி உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஆர் பி குருதேவ், வசனகர்த்தா ஹிமேஷ்பாலா, இசைமைப்பாளர் நரேன் பாலகுமார், கலை இயக்குனர் விஜய் ஆனந்த், படத்தொகுப்பாளர் ரோலக்ஸ் ஆகியோர் தொழில் நுட்ப ரீதியாக அசத்தியுள்ளார்.
மொத்தத்தில் தர்ஷன் பிலிம்ஸ் ஜோதிசிவா தயாரித்துள்ள நிழற்குடை கூட்டுக் குடும்ப உறவுகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.