Chennai City News

கெழப்பய திரைப்பட விமர்சனம் : கெழப்பய ஒரு நவீன தெனாலி ராமன் | ரேட்டிங்: 3/5

கெழப்பய திரைப்பட விமர்சனம் : கெழப்பய ஒரு நவீன தெனாலி ராமன் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்:
கெழப்பயவாக கதிரேசகுமார், கிருஷ்ணகுமார், விஜய ரண தீரன், கே.என்.ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, விஏஓவாக ‘உறியடி’ ஆனந்தராஜ்

தொழில்நுட்ப கலைஞர்கள் :
சீசன் சினிமா தயாரிப்பு – யாழ் குணசேகரன்
இயக்குனர் – யாழ் குணசேகரன்
ஒளிப்பதிவு – அஜித்குமார்
எடிட்டர் – கே.என்.ராஜேஷ்
இசை – கேபி
பிஆர்ஓ – நிகில் முருகன்

கிராமபுறத்தில் இருக்கும் ஒரு வீட்டிலிருந்து மோரிஸ் காரில் (1950-ல் பணக்காரர்களால் மட்டும் பயன்படுத்தப்பட்ட உயர்தரமான கார்) கர்ப்பிணி பெண்ணுடன் ஐந்து ஆண்கள் புறப்பட்டு ஒரு வாகனம் மட்டுமே செல்ல கிராமப்புற ரோட்டில் பயணிக்கிறார்கள். பயணிக்கும் போது காருக்கு முன்னால் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெரியவர் (கதிரேசகுமார்) சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார். கார் ஓட்டுநர் தொடர்ந்து ஒலி எழுப்பினாலும் செவி சாய்க்காத கதிரேசகுமார் பின்னால் வரும் இந்த காருக்கு தொடர்ந்து வழிவிடாமல் சென்று கொண்டிருக்கிறார். காரில் இருந்தவர்கள்  பல முறை குரல் கொடுத்தும், ஒலி எழுப்பியும் அவர் தொடர்ந்து மெதுவாக வழிவிடாமல் செல்ல, ஒரு கட்டத்தில் காரில் பயணிப்பவர்கள் காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி அவரிடம் வழி விட்டு செல்லுமாறு சொல்கிறார்கள். அப்போதும் வழிவிடாமல் பெரியவர் மௌனமாக தொடர்ந்து சைக்கிளில் பயணிக்க, காரில் இருப்பவர்கள் கோபமடைந்து அவரை அடிக்கிறார்கள். அடி வாங்கியும் அவர் வழிவிடாமல் தன் சைக்கிளை ரோட்டின் குறுக்கே நிறுத்தி கார் முன்நோக்கி செல்ல விடாமல் பாதையை தடுக்கிறார். இந்த செயல் காரில் வந்தவர்களை மேலும் கோபமடைய வைக்கிறது. அதன் விளைவு அவர்கள் சைக்கிளை தூக்கி ஓரமாக வீசுகிறார்கள். இதனால் கோபமடையும் பெரியவர் அவர்கள் காரை நோக்கி சென்று காரில் இருந்து கார் சாவியை எடுத்து வீசி விடுகிறார், மேலும் காரில் இருக்கும் கர்ப்பிணி பெண்னை முறைத்து பார்க்கிறார். மீண்டும் அந்த பெரியவரை அடிக்கிறார்கள். இச்சம்பவம் நடைபெறும் போது அந்த வழியே கிராம நிர்வாக அதிகாரியும் வருகிறார், நடந்தவற்றை அறிந்து அந்த பெரியவரை வழிவிடுமாறு அவர் கூற, அதற்க்கும் பெரியவர் செவி சாய்க்கவில்லை. காரில் வந்தவர்கள் ஊரில் இருக்கும் தங்கள் கூட்டாளிகளிடம் இந்த விஷயத்தை கூற, ஊரிலிருந்து ரவுடிகள் நேரில் வந்து பெரியவரை மிரட்டியும், அடித்தும் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுடைய இந்த அடிக்கும் மிரட்டலுக்கும் பயப்படாமல் தொடர்ந்து  தன் சைக்கிளை ரோட்டின் குறுக்கே நிறுத்தி விடுகிறார். இதனிடையில் அந்த பெரியவர் யாருக்கோ தன் கைபேசியில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புகிறார். அப்போது இரு மோட்டார் சைக்கிளில் 3 நபர்கள் வருகிறார்கள். அவர்கள் வந்த பின் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெறுகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் என்ன? யார் அந்த பெரியவர்? அவர் எதற்காக அந்த காருக்கு வழிவிடாத தடுக்கிறார்? அவருக்கும் அந்த காருக்கும் என்ன சம்பந்தம்? யாருக்கு குறுந்செய்தி அனுப்புகிறார்? அது என்ன குறுந்செய்தி? போன்ற கேள்விகளுக்கு கெழப்பய விடை சொல்லும்.
படத்தின் தயாரிப்பாளரான கதிரேசகுமார், கதையின் நாயகனாக கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து படம் முழுவதும் பேசாமலேயே அழுத்தமான நடிப்பின் மூலம் காட்சியை நகர்த்திச் செல்கிறார். அவருடைய அந்த செயல் அந்த நேரத்தில் எப்படி காரில் வந்தவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தியதே, அது போல் நமக்கும் அந்த நேரத்தில் அவர் மீது எரிச்சல் ஏற்படும் அளவுக்கு அவருடைய நடிப்பு பிரமாதமாக இருந்தது.
கிருஷ்ணகுமார், விஜய ரண தீரன், கே.என்.ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், கர்ப்பிணியாக அனுதியா, விஏஓ வாக ‘உறியடி’ ஆனந்தராஜ் உட்பட அனைத்து நடிகர்களும் அந்த அந்த கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி சிம்பிளான திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கிராமத்தில் நடக்கும் கதை களத்துக்கு அதுவும் ஒரே இடத்தில் நடக்கும் 90 சதவீத காட்சிகள் அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார்.
 காட்சிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரங்களின் உணர்வுகளை நச்சுன்னு எடிட் செய்து சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளார் எடிட்டர் ராஜேஷ்.
அவர்கள் இருவருடன் சேர்ந்து கெபி இசை மற்றும் பின்னணி இசையால் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியது பெரிய பலம்.
வயதான கதாபாத்திரத்தை வைத்து ஒரு ரொம்ப சிம்பிளான கதைகளத்தை சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் யாழ் குணசேகரன். ஒரு சின்ன கரு தான் கதைக்களம், அதனுடைய காட்சி நகர்வை இன்னும் கலகலப்பான காட்சிகளுடன் கூடுதல் நகைச்சுவையோடு திரைக்கதையை அமைத்திருந்தால் படம் வேற மாதிரி இருந்திருக்கும். என்றாலும் முடிந்தவரை கதையோடு ஒன்ற வைத்துள்ளார் இயக்குனர்.
மொத்தத்தில் சீசன் சினிமாஸ் சார்பில் யாழ் குணசேகரன் தயாரித்திருக்கும் கெழப்பய ஒரு நவீன தெனாலி ராமன்.
Exit mobile version