Chennai City News

காலேஜ் ரோடு விமர்சனம் : காலேஜ் ரோடு கல்வி கடன் பெற்று படிக்கும் மாணவர்களும் கல்விக் கடன் வாங்கி படிக்கலாம் என்று நினைக்கும் மாணவர்களும்  பார்க்க வேண்டிய முக்கியமான படம் | ரேட்டிங்: 3.5/5

காலேஜ் ரோடு விமர்சனம் : காலேஜ் ரோடு கல்வி கடன் பெற்று படிக்கும் மாணவர்களும் கல்விக் கடன் வாங்கி படிக்கலாம் என்று நினைக்கும் மாணவர்களும்  பார்க்க வேண்டிய முக்கியமான படம் | ரேட்டிங்: 3.5/5

MP என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரவீன் மற்றும் சரத், மற்றும் ஜனா துரைராஜ் மனோகர் ஆகியோர் இணைந்து காலேஜ் ரோடு படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் லிங்கேஷ், மோனிகா, ஆனந்த் நாகு, அடாவடி அன்சர், அக்சய் கமல், பொம்மு லஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜெய் அமர்சிங், இசை -ஆப்ரோ, ஒளிப்பதிவு – கார்த்திக் சுப்ரமணியம், படத் தொகுப்பு – அசோக் ஹெச்.அந்தோணி, இணை இயக்கம் – சேகர், சண்டை இயக்கம் – பி.சி., நடன இயக்கம் – விஜி, ஒப்பனை – கார்த்திக் குமார், விளம்பர வடிவமைப்பு – லிங்கம் அழகர், புகைப்படங்கள் – ஆர்.எஸ்.ராஜா. மக்கள் தொடர்பு குணா.
கதை:
காலேஜ் ரோடு என்பது மாணவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் குறைவாக அறியப்பட்ட பிரச்சினையைப் பற்றிய த்ரில்லர்.
சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு பிடித்துள்ள லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. சென்னையில் நடந்த வங்கி கொள்ளையை நேரில் பார்க்கிறார் அஜய். அவர் சாட்சியாக இருப்பதால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. ஒருபுறம் கொள்ளைக்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ்க்கும் வங்கி கொள்ளை சம்பவங்களுக்கான லீட் எப்படி வருகிறது? இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அந்த கல்வி இன்று என்ன நிலையில் இருக்கிறது? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதை படம் பேசுகிறது.

கதைதான் கதாபாத்திரங்களை தீர்மானிக்கிறது, அந்த வகையில் முதன்மை நாயகன் லிங்கேஷ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். அவரின் இயல்பான மற்றும் முதிர்ச்சியான நடிப்பு திரைக்கதைக்கு அழுத்தம் கொடுத்து வலு சேர்க்கிறது.

நாயகி மோனிகா, லிங்கேஷின் கிராம நண்பர்கள், சிறப்பு தோற்றத்தில் நாடோடிகள் பரணி, ஆகியோரின் கதாபாத்திரத்திற்கான வேலை குறைவு என்றாலும் கொடுத்த வேலையை உணர்ச்சிகரமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும், லிங்கேஷின் கல்லூரி நண்பராக வரும் ஆனந்த் நாகு, அடாவடி அன்சர், அக்சய் கமல், பொம்மு லஷ்மி, போலீஸ் அதிகாரியாக மெட்ராஸ் வினோத், ஆகியோர் கதையோடு இணைத்துள்ளனர். காமெடியில் அடாவடி அன்சர் கவனம் ஈர்க்கிறார்.

கார்த்திக் சுப்ரமணியம் ஒளிப்பதிவு, அசோக் ஹெச்.அந்தோணி படத் தொகுப்பு, ஆப்ரோவின் இசை மற்றும் பின்னணி இசை அவர்களின் பக்கபலம் சமூக அக்கறை கொண்ட முழுமையான பவர் பேக்  திரைப்படமாக காலேஜ் ரோடு அமைந்துள்ளது.

பள்ளிப் படிப்பை முடித்த ஏழை, எளிய மாணவர்கள் தங்களின் கல்லூரிப் படிப்புக்கு முதலில் நாடுவது கல்விக் கடன் தான். ஆனால் அனைத்து ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைத்துவிடுவதில்லை. ஏழை மாணவர்களுக்கு கிடைக்காத கல்விக் கடன் பற்றியும் கல்விக் கடன் கொடுக்க வேண்டிய வங்கிகள் கடன் வாங்கிய மாணவர்களை எப்படி நடத்துகிறது என்பதை பற்றியும் வலுவான கதையம்சம் கொண்ட நல்ல கருவை, பரபரப்பான திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து யாரும் எளிதில் யூகிக்க முடியாத ட்விஸ்ட் கொடுத்து சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஜெய் அமர்சிங். முதல் பாதி கல்லூரி ரசனைகள் மற்றும் வேடிக்கை நிறைந்தது. 2வது பாதி வாழ்க்கையின் ரியாலிட்டி உணர்வுகளுடன் மாணவர்களின் கண்களைத் திறக்கும். சமூக அக்கறையுடன் காலேஜ் ரோடு திரைப்படத்தை சிறப்பாக கையாண்ட இயக்குனருக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில்  MP எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள காலேஜ் ரோடு கல்வி கடன் பெற்று படிக்கும் மாணவர்களும் கல்விக் கடன் வாங்கி படிக்கலாம் என்று நினைக்கும் மாணவர்களும்  பார்க்க வேண்டிய முக்கியமான படம்.
Exit mobile version