கட்டாகுஸ்தி விமர்சனம்: கட்டா குஸ்தி உங்கள் குடும்பத்துடன் ரசிக்க சரியான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் | ரேட்டிங்: 4.5/5
நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ‘ஆர்டி டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி. கதாநாயகனாக விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, முனீஸ்காந்த், கருணாஸ், கார்த்திக் சுப்புராஜின் தந்தையான கஜராஜ், காளி வெங்கட் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
எடிட்டிங் : பிரசன்னா ஜி கே
கலை : உமேஷ்
ஆக்ஷன் : அன்பறிவு சகோதரர்கள்
இயக்கம் : செல்லா அய்யாவு
மக்கள் தொடர்பு : ஏய்ம் சதீஷ்
மலையாளக் குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தி (ஐஸ்வர்யா லட்சுமி) சிறுவயதிலிருந்தே மல்யுத்தத்தை விரும்பி தனது சித்தப்பாவுடன் (முனீஷ்காந்த்) சென்று மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொள்கிறார். அதன் விளைவாக இறுதியில் அவர் மாநில மல்யுத்த சாம்பியன்ஷிப்பை வெல்கிறார். கட்டா குஸ்தி போட்டியில் கலந்து பதக்கங்களை வெல்ல வேண்டும் என்கிற கனவை சுமந்து இருக்கும் அவருக்கு, அவள் ஒரு குஸ்தி வீராங்கனை என்பதால் மாப்பிள்ளை கிடைக்காமல் திணறி கொண்டிருக்கிறது கீர்த்தியின் குடும்பம். அதே நேரத்தில் வீட்டில் திருமண அழுத்தமும் அதிகரிக்கிறது. மகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற மாயையில் அவளது தந்தைக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. கீர்த்தியின் பெற்றோர் அவளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள். பிறகு அவள் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். அதோ போல், சிறுவயதிலேயே அப்பா அம்மாவை இழந்த வீராவுக்கு (விஷ்ணுவிஷால்) ஊர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் கருணாஸும், அவர் சந்திக்கும் பிரச்னைகளும்தான் உலகம். அடிப்படையிலேயே பெண் என்பவள் ஆணுக்கு கீழ்தான், அவள் எப்போதும் ஆணுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற மனநிலையோடு இருக்கும் கருணாஸ், அதை வீராவுக்கும் அவ்வவ்போது புகுத்துகிறார். மாமாவோடு ஊர் சுற்றி வலம் வரும் வீரா அவ்வப்போது கபடி விளையாடுவார். இந்த நிலையில்தான் தனக்கு வரும் பெண் தன்னை விட அதிகம் படித்திருக்க கூடாது. முடி நீளமாக இருக்க வேண்டும் என பல கண்டிஷன்களோடு வீராவுக்கு பெண் தேடும் படலம் நடக்கிறது. இந்த நிலையில் கீர்த்தியின் சித்தப்பா (முனீஷ்காந்த்) தன் நண்பன் கருணாஸை யதார்த்தமாக சந்திக்கும் போது வீராவுக்கு பெண் பார்ப்பது பற்றி தெரிய அவர்களிடம் ஒரு சில பொய்களை சொல்லி வீராவுக்கு கீர்த்தியை மண முடித்து வைக்கிறார். திருமணம் முடிந்து சில நாட்கள் நன்றாக இருப்பார்கள். இதற்கிடையே பிரச்னை ஒன்றின் வாயிலாக, கீர்த்தி தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தி கணவனை காப்பாற்றுகிறாள். பின்னர் கீர்த்தி பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. அவள் ஒரு மல்யுத்தப் வீரங்கணை, நன்றாகப் படித்தவள், தலைமுடி உயரம் இல்லாதவள் என்பது வீராவுக்குத் தெரிய வருகிறது. அந்த நேரத்தில் முனீஷ்காந்த் சொன்ன பொய்கள் வீராவுக்கு தெரிய வருகிறது. இந்த விஷயம் மாமன் கருணாஸுக்கு தெரிய வர, கீர்த்தியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடும் போது கீர்த்தி கருணாஸை அரைந்து விடுகிறார். கணவன் மனைவி இருவரும் பிரிந்து விடுகிறார்கள். அதன் பின்னர் என்ன நடக்கிறது? கீர்த்தியின் கட்டா குஸ்தி கனவு பலித்ததா? இருவரும் இணைந்து வாழ்ந்தார்களா? கருணாஸை கீர்த்தி ஏன் அறைந்தார்? வீரா ஏன் தனது மனைவியுடன் போட்டிகளில் மல்யுத்தம் செய்ய விரும்புகிறார்? இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்களா? மனைவியின் ஆசையை வீரா நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை.
வீராவின் மாமாவாக ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் கருணாஸ், கீர்த்தியின் சித்தப்பாவாக முனிஷ்காந்த் மற்றும் காளிவெங்கட் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி தங்களுக்கு கிடைத்த இடங்களில் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்து அனைவரின் கவனத்தை பெறுகிறார்கள். விஷ்ணு விஷால், கருணாஸ், காளி வெங்கட் வரும் காட்சிகள் காமெடிக்கு நிச்சயம் கேரண்டி.
தொழில்நுட்ப விஷயங்களைப் பொறுத்த வரை ஜஸ்டின் பிரபாகரனின் இசை மற்றும் பின்னணி இசையும், ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு, எடிட்டிங் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்.
மொத்தத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ‘ஆர்டி டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள நிறைய சிரிக்கும் தருணங்களைக் கொண்ட கட்டா குஸ்தி உங்கள் குடும்பத்துடன் ரசிக்க சரியான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்.