என் காதலே சினிமா விமர்சனம் : என் காதலே – உயிரோட்டமான முக்கோண காதல் கதை | ரேட்டிங்: 3/5
நடிகர்கள் : லிங்கேஷ், திவ்யா தாமஸ், லியா, காட்பாடி ராஜன், மாறன், கஞ்சா கருப்பு, மதுசூதனன், தர்ஷன்.
தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு நிறுவனம் – Sky wanders Entertainment
தயாரிப்பாளர் – ஜெயலட்சுமி
நிர்வாக தயாரிப்பாளர் – காட்பாடி ராஜன்
எழுத்து, இயக்கம் – ஜெயலட்சுமி
ஒளிப்பதிவு – மூடர்கூடம் புகழ் டோனி ஜான்
இசை – சாண்டி சாண்டெல்லோ
எடிட்டிங் – தனி ஒருவன் படப்புகழ் கோபி கிருஷ்ணா
பாடல்கள் – கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி
பாடியவர்கள் – ஸ்வேதா மோகன், சைந்தவி, ஸ்ரீதர் சேனா, திலீப் வர்மன் (மலேசியா), அனிதா ஷேக்
மக்கள் தொடர்பு – வேலு
காரைக்கால் பகுதியில் உள்ள ஒரு மீனவ குப்பத்தில் 2004 சுனாமி பேரலையால் தாய்-தந்தையை பறிகொடுத்த லிங்கேஷ், மாமன் மதுசூதனன் அவனை எடுத்து சொந்தப் பிள்ளை போலவே வளர்கிறார். லிங்கேஷ் படித்து, மாமனின் வலது கரமாக இருந்து மீன்பிடி தொழிலில் தனது உயிராக நினைத்து வாழ்ந்து வருகிறார். மாமன் மகள் திவ்யா, சிறுவயதில் இருந்தே மாமா தான் தனது உலகம் என்று லிங்கேஷ் மீது அளவுகடந்த பாசத்தையும், காதலையும் வைத்து அவரையே சுற்றி வருகிறார். மாமன் மதுசூதனனும் லிங்கேஷ் தான் தனது மருமகன் என்று முடிவு செய்துள்ளார். வழக்கம் போல் எதிர் கோஷ்டி ஒன்று சுற்றுவட்டாரத்தில் செல்வாக்குடன் இருக்கும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செல்வாக்கை ஒழிக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, நாயகி லியா உள்ளிட்ட ஒரு குழு அந்த மீனவ குப்பத்துக்கு வருகிறது. அவர்களுக்கு வழிகாட்டியாகவும், தமிழக கலாச்சாரத்தை பற்றி சொல்ல லிங்கேஷ் இவர்களுடன் பயணிக்கிறார். ஆரம்பத்தில் லிங்கேஷின் ஒரு சில செயலால் அவர் மீது வெறுப்பு கொண்டவராக லியா இருக்கிறார். போகப்போக ஊர்மக்களிடம் லிங்கேஷின் அன்பும், பாசமும் பழகும் அவரது நல்ல உள்ளத்தை புரிந்து லிங்கேஷை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். லிங்கேஷுக்கு திவ்யா மீது ஒருபோதும் காதல் வரவில்லை. மாறாக அவளை அவனது தாய் ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறார். விரைவில் மாமனை திருமணம் செய்து சந்தோஷமாக வாழலாம் என்ற கனவில் இருந்த திவ்யாவுக்கு லிங்கேஷ்-லியா காதல் பேரிடியாக இருக்கிறது. விஷயம் கேள்விப்பட்ட மாமன் மதுசூதனன் லிங்கேஷ்-லியா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் காதலை பிரிக்க நடவடிக்கை எடுக்கிறார். எதிர்பாராத பல திருப்பங்களுடன் திவ்யா-லிங்கேஷ்-லியா காதல் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
லிங்கேஷ், மீனவனாக காதல், பாசம், அதிரடி என தான் ஏற்று உள்ள கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
மாமா தான் தனது உலகம் என்று அவரையே சுற்றி வரும் நாயகி திவ்யா உணர்வுபூர்வமாக நடித்துள்ளார்.
தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய வந்து தமிழக கலாச்சாரம் பிடித்து போக நாயகனை காதலிக்கும் காதலியாக லண்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகை லியா அழகு.
மதுசூதனன், காட்பாடி ராஜன், தர்ஷன், மாறன், கஞ்சா கருப்பு என அனைவரும் முக்கோண காதல் கதைக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர் டோனி ஜான், இசையமைப்பாளர் சாண்டி சாண்டெல்லோ, உட்பட அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பும் திரைக்கதைக்கு பெரும் பலமாக இருந்தது.
படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா க்ளைமேக்ஸ் காட்சியை சற்று தடுமாற்றத்துடன், எடிட் செய்திருப்பது நன்றாக தெரிகிறது.
முக்கோண காதல் கதையை வணிகக் கூறுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் பெண் இயக்குனர் ஜெயலட்சுமி. திரைக்கதையில் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் Sky wanders Entertainment சார்பில் ஜெயலட்சுமி தயாரித்திருக்கும் என் காதலே – உயிரோட்டமான முக்கோண காதல் கதை.