Chennai City News

உடன்பால் திரைவிமர்சனம் : உடன்பால் அனைவருக்கும் ஒரு பாடம் | ரேட்டிங்: 3/5

உடன்பால் திரைவிமர்சனம் : உடன்பால் அனைவருக்கும் ஒரு பாடம் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்: லிங்கா, அபர்நிதி, விவேக் பிரசன்னா, சார்லி, காயத்ரி, தனம், தீனா, மாஸ்டர் தர்ஷித் சந்தோஷ், எஸ்.மான்யஸ்ரீ, மயில்சாமி
இசை: சக்தி பாலாஜி
ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர்
தயாரிப்பு: கே.வி.துரை
இயக்கம்: கார்த்திக் சீனிவாசன்
பி ஆர் ஒ: சதீஷ் ( ஏய்ம்ஸ்))
ரிலிஸ்: ஆஹா தமிழ் ஒரிஜினல்

கதை:

விநாயகம் (சார்லி) தன் மகன்கள் பரமன் (லிங்கா), தீனா, மகள் கண்மணி (காயத்ரி)  என மூன்று பிள்ளைகள்.
இதில் லிங்கா மனைவி பிரேமா (அபர்ணிதி) குழந்தை மாஸ்டர் தர்ஷித் சந்தோஷ் ஆகியோர் தந்தையுடன் வசித்து வருகி்ன்றனர்.
மகள் காயத்திரி திருமணமாகி வேலையில்லா கணவர் முரளி (விவேக் பிரசன்னா) மற்றும் மகள் நிலாவுடன் (எஸ்.மான்யஸ்ஸ்ரீ) வாழ்ந்து வருகின்றார். சினிமா சிடிக்கள் விற்கும்  தன் தந்தை தொழிலை லிங்கா எடுத்து செய்து வரும் நிலையில் தொழில்நுட்பம்  வளர்ச்சி காரணமாக வியாபாரத்தில் நஷ்டத்தை அடைந்து கடன்காரன் ஆகிறார். மகன்,மகள் இரு குடும்பங்களும் பல்வேறு இன்னல்களுக்கு நடுவில் கடன் பிரச்சனையோடு வாழ்ந்து வருகின்றனர்.  அண்ணன், தங்கை இருவரும் தங்களுடைய கடன் பிரச்சனைகள் தீர அம்மாவின் நினைவு நாளன்று தன் தந்தை சார்லியிடம் வசிக்கும் வீட்டை விற்று பணம் கொடுத்தால், சிரமம் தீர்ந்து விடும் என கேட்கின்றனர். ஆனால் சார்லி தான் வாழும் வீட்டை விற்க விடமாட்டேன் என மறுத்து விட்டு வேலைக்குச் செல்கிறார். அந்த நேரத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கின்றன. அதாவது விநாயகம் வழக்கமாக வேலைக்கு செல்லும் காம்ப்ளக்ஸ் இடிந்து விழுகிறது. அந்த ஈடுபாடுகளில் சிக்கி தன் தந்தை சார்லியும் இறந்து விட்டதாக எண்ணி விடுகின்றனர் லிங்காவும், காயத்ரியும். அந்த சமயம் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக டிவியில் பிளாஷ் நியூஸ் வருகிறது. இதைப் பார்த்த விநாயகத்தின் பிள்ளைகள் இழப்பீட்டு தொகையை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள முடிவெடுக்கின்றனர். அந்த நேரம் பார்த்து சார்லி உயிரோடு வீட்டிற்கு திரும்பி வர அனைவரும அதிர்ச்சியடைகிறார்கள். தந்தை வீட்டுக்கு திரும்பி வந்தவுடன் எதிர்பாராத நிகழ்வு நடக்கின்றது. அது என்ன? வீட்டுக்கு திரும்பி வந்த விநாயகம் என்ன ஆனார்? அண்ணன் – தங்கை பிரச்சனை தீர்ந்ததா? வீடு விற்கப்பட்டதா? என்பதே மீதிக்கதை.

சார்லியின் குணச்சித்திர நடிப்பு அற்புதம். லிங்கா, விவேக் பிரசன்னா, தீனா, காயத்ரி, அபர்ணதி, சார்லியின் அக்காவாக வரும் தனம் ஆகியோர் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள். இவர்கள் ஒவ்வொரு காட்சியையும் நன்றாக உள்வாங்கி அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி இயல்பான நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தியுள்ளனர். அனைவரின் நடிப்பை தனித்தனியே பிரித்து சொல்லமுடியாத அளவிற்கு தங்களுடைய உழைப்பை அளித்துள்ளனர். குபீர் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் விவேக் பிரசன்னா பார்த்துக் கொள்கிறார். மாஸ்டர் தர்ஷித் சந்தோஷ் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

 எஸ்.மான்யஸ்ரீ, சார்லியின் இரண்டாவது மகனாக வரும் தீனா, ஒரு காட்சியில் வந்தாலும் அந்த முக்கிய காட்சியில் வரும் மயில்சாமி ஆகியோர் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

ஒரு சின்ன வீட்டுக்குள் நடக்கும் கதை களத்தை நேர்த்தியான ஒளிப்பதிவு மூலம் மதன் கிறிஸ்டோபர் அசத்தியுள்ளார்.
சக்தி பாலாஜி இசை மற்றும் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

படத்தின் கதைக்களம் சீரியஸ் ஆக இருந்தாலும் நடுத்தர வர்க்கத்தினர்கள் சந்திக்கும் பிரச்னைகளை அப்படியே சொல்ல முயற்சித்து அதில் நகைச்சுவை கலந்து, சிறப்பாக காட்சிப்படுத்தி இயக்கியுள்ளார் கார்த்திக் சீனிவாசன்.

மொத்தத்தில் உடன்பால் அனைவருக்கும் ஒரு பாடம்

 

Exit mobile version