Chennai City News

13 வருடங்களுக்குப் பிறகு பிரபு தேவா வடிவேலு கூட்டணி..!

13 வருடங்களுக்குப் பிறகு பிரபு தேவா வடிவேலு கூட்டணி..!

13 வருடங்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில், நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா இணைந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமின்றி, குணசித்திர வேடத்திலும் கலக்கி வரும் நடிகர் வடிவேலு, ‘24-ம் புலிகேசி’ படப் பிரச்னையால் சில காலம் நடிக்காமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர், சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வைகை புயல் வடிவேலு நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இந்தப் படத்தில், நடிகர் வடிவேலு பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாட உள்ளார்.

இதனால் அந்தப் பாடலை, படத்தில் மேலும் சிறப்பாக கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் வடிவேலு பாடும் அந்தப் பாடலுக்கு, நடன இயக்குநர் பிரபுதேவா நடனம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். மேலும், இந்தப் பாடலில், நடிகர் வடிவேலுடன், சிறப்பு தோற்றத்தில் பிரபுதேவா தோன்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘மனதை திருடிவிட்டாய்’ படத்திற்குப் பிறகு, நடிகர் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணையவுள்ளது. ‘காதலன்’ திரைப்படத்தில், நடிகர் வடிவேலு மற்றும் பிரபுதேவா இணைந்து ஆடிய ‘பேட்ட ரப்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனதால், இந்தப் பாடலும், அதைப்போல் பிரபலம் அடையும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு ஜோடி 13 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது.

Exit mobile version