ஹரி ஹர வீரமல்லு படத்தின் இசை இந்திய அளவில் பேசப்படும் :
எம்.எம்.கீரவாணி
ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு”. இப்படத்தை இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி டியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கார் விருது பெற்ற எம் .எம். கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் 3-வது பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத் நகரில் நட்சத்திர ஹோட்டலில் நேற்றைய தினம் இந்தியா முழுவதிலும் வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அசுர ஹானம்.. என்ற வரிகளுடன் தொடங்கும் உணர்ச்சிபூர்வமான பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், இயக்குனர் ஏ எம் ஜோதி கிருஷ்ணா, இசையமைப்பாளர் கீரவாணி, நடிகை நிதி அகர்வால், தெலுங்கு நடிகர்கள், மற்றும் டோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குனர் ஏ எம் ஜோதி கிருஷ்ணா பேசுகையில், முதலில் இந்த படத்தில் நான் தயாரிப்பாளராக தான் இருந்தேன். இந்த கதையை முதலில் இயக்குனர் க்ரிஷ் இயக்கி வந்தார். கொரோனோ பிரச்சனையால் ஷூட்டிங் தடைபட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற நடிகர்களின் தேதியை வாங்கிய பிறகு இயக்குனருக்கு வேறு முக்கியமான படம் கிடைத்ததால் அவர் இந்த படத்தை இயக்க முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து நான் இந்த படத்தில் இயக்குனர் பொறுப்பை எடுத்துக் கொண்டேன். அவருடைய கதையுடன் என்னுடைய கதையையும் சேர்த்து, பதினாறாம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தையும் புனைவு கதையையும் சேர்த்து ஹிஸ்டாரிக்கல் பிக்சன் படமாக இயக்கியுள்ளேன்.
16ஆம் நூற்றாண்டில் இந்தியா மீது படை எடுத்த முகலாய பேரரசான ஔரங்க சீப், இங்கு ஏற்படுத்திய பேரழிவை தாங்க முடியாத ஒரு மாவீரன் அவரை எதிர்த்து வீர மல்லுவாக போராடுகிறார். அந்த போராட்டம் எப்படி நடந்தது. எந்தவித அழிவை மொகலாய மன்னர் ஏற்படுத்தினான் போன்ற சுவாரசியமான கதையை பிரம்மாண்ட காட்சிகளோடு கொடுத்துள்ளோம். ஹரி ஹர வீர மல்லு கேரக்டரில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முகலாய பேரரசான ஔரங்க சீப் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். அவர் அனிமல் படத்திற்காக பெரிய தாடியுடன் வெளிவந்த போட்டோவை பார்த்தவுடன் நாங்கள் அவர்தான் எங்கள் கேரக்டருக்கு சரியாக இருப்பார் என முடிவு செய்து அவரை அணுகி இந்த படத்துக்குள் கொண்டு வந்தோம். அவரும் தனது அனுபவ நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியுள்ளார். இவர்களோடு முக்கியமான கேரக்டரில் சத்யராஜ் மற்றும் நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் பல படங்களை தியாகம் செய்துள்ளார். அவருடைய ஈடுபாடு மற்றும் உழைப்பு படம் வெளியான பிறகு இன்னும் பெரிய வெற்றிகள் அவருக்கு கிடைக்கும். பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது மாநில துணை முதல்வராக இருப்பதால் அவருடைய தேதியை எங்களுக்கு பிரித்து பிரித்து வழங்கினார். எப்பொழுதெல்லாம் அவர் ஷூட்டிங் இருக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் 4 முதல் கேமராக்கள் வைத்து, ஒரு கிரிக்கெட் போட்டியை எப்படி படம் பிடிப்பார்களோ, அப்படி நாங்கள் படப்பிடிப்பை நடத்தினோம். காரணம் அவருடைய ஒவ்வொரு அசைவையும் பல கோணங்களில் நாங்கள் படம் பிடித்தது எங்களுக்கு கிராபிக்ஸ் செய்யும்போது பேர் உதவியாக இருந்தது. எல்லா கோணத்திலும் அவருடைய ஆக்சன் இருந்ததால் சிஜி காட்சிகள் மிக நேர்த்தியாக வந்துள்ளது. இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட முன்னணி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யும் நிறுவனங்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். ஆஸ்கார் விருது பெற்ற எம் எம் கீரவாணி அவர்களின் இசை படத்திற்கு மற்றொரு பரிமாணத்தை கொடுத்துள்ளது. கலை இயக்குனர் தோட்டா தரணியில் ஆராய்ச்சி மற்றும் படைப்பு 16-ம் நூற்றாண்டை நம் கண் முன்னே நிறுத்தி உள்ளது. ஒரு வரலாற்றுப் பின்னணியுடன் பக்சன் கலந்து அற்புதமான பான் இந்தியா படைப்பாக ஜூன் 12ஆம் தேதி ஹரி ஹர வீர மல்லு படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகிறது. இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த பாகங்களை தொடர்வது குறித்து முடிவு செய்வோம் என்றார்.
இந்த விழாவில் இசை அமைப்பாளர் கீரவாணி பேசும்போது, ஹரி ஹர வீரமல்லு படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக வந்துள்ளது. இது போன்ற படங்களுக்கு இசையமைக்கும் பொழுது அதிக அளவில் ஆராய்ச்சி செய்து அந்த காலத்தில் பயன்படுத்திய இசை கருவிகள் மூலம் இசையை விளங்கும் பொழுது அது இன்னும் ரசிக்கும்படியாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு பாடலையும் மெனக்கடல் செய்து இசையமைத்துள்ளேன். ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த பாடலும் அதிக அளவில் பார்வையாளர்களை கவரும். அதற்காகத்தான் மேடையில் இந்த படத்தில் பாடிய பாடகர்களை வைத்தே மேடையில் லைவாக இந்த பாடலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளோம். பவர் ஸ்டார் பவன் கல்யாண் இந்த படத்தின் பாடலை எனது ஸ்டுடியோவில் கேட்ட பிறகு என்னை கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். பவர் ஸ்டாரின் அன்பை பார்த்து நான் திகைத்து விட்டேன். நிச்சயம் இந்திய அளவில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வரும் என்றார்.