Chennai City News

லாபம் விமர்சனம்

லாபம் விமர்சனம்

பெருவயல் கிராமத்தில் விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விவசாய சங்கத் தலைவர் ஜெகபதி பாபு, உறுப்பினர்களான வின்சென்ட் அசோகன், சண்முகராஜன், ஓஏகே.சுந்தர் ஆகிய நான்கு பேர் மட்டுமே பணக்காரர்களாக வலம் வருகிறார்கள். ஆறாண்டுகளுக்கு பிறகு வரும் விஜய் சேதுபதி சங்கத் தேர்தலில் பங்கேற்று ஜெயிக்கிறார். அதன் பிறகு விவசாய சங்கத் தலைவராகும் விஜய்சேதுபதி ஏற்படுத்தும் விவசாயத்தில் மாற்றங்கள், ஏற்றங்களை மற்ற நால்வர் எப்படி எதிர் கொள்கிறார்கள்? விஜய் சேதுபதியை எப்படி பழி வாங்கினார்கள்? இவர்களின் சூழ்ச்சியிலிருந்து விஜய் சேதுபதி மீண்டு பெருவயல் கிராமத்தை காப்பாற்றினாரா? என்பதே க்ளைமேக்ஸ்.
இதில் விஜய் சேதுபதி விவசாயியாக பல கருத்துக்களையும், விளக்கங்களையும் தன்னுடைய இயல்பான நடையிலேயே வசனங்களை பேசி அசத்திவிடுகிறார்.
இவருடன் பாட்டு,காதல், வசனம் என்று ஸ்ருதிஹாசன் மற்றும் சிறு வேடத்தில் சாய் தன்ஷிகா முடிந்தவரை பங்களிப்பை கொடுத்து விட்டு போகிறார்கள்.
வில்லன்களாக ஜெகபதி பாபு, வின்சென்ட் அசோகன், சண்முகராஜன், ஓஏகே.சுந்தர் ஆகியோர் திறம்பட எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
விஜய் சேதுபதியின் நண்பர்களாக கலையரசன், டேனியல், ரமேஷ் திலக், பிருத்வி பாண்டியராஜன், நிதீஷ் வீரா ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.மற்றும் டயானா சம்பிகா, ஐ.எஸ். ராஜேஷ், மாரிமுத்து, அழகன் தமிழ்மணி, ஜெய்வர்மன், தமிழ் ஆகியோர் பக்க மேளங்கள்.
டி.இமானின் இசையும், ராம்ஜியின் ஒளிப்பதிவும் படத்தின் பல காட்சிகளுக்கு பலத்தை கொடுத்திருக்கின்றனர்.
என்.கணேஷ் குமார், எஸ்.பி.அஹமது ஆகிய இருவரின் படத்தொகுப்பும், ஆலயமணியின் திரைக்கதையும் படத்திற்கு வலு சேர்கிறது.
கார்பரேட் முதலாலித்துவம் எதிர்ப்பு, உலகமயமாக்கல், விளை பொருட்கள் நிர்ணயம், கூட்டுப் பண்ணை திட்டம் என்று பல முயற்சிகளை கையாண்டு தனக்கே உரித்தான பாணியில் வர்க்கப் பிரச்னை, கொள்கையை மையப்படுத்தி பிரச்சாரப்படமாக சில இடங்களில் சிந்திக்கவும் செய்து கலையும் தொழில்நுட்பமும் கலந்து கொடுத்து சமபந்தி உணவை பரிமாற வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.இறுதிக் காட்சி பலரையும் பதற வைத்து விடுகிறது அதை தவிர்த்து வேறு விதமாக காட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் 7சிஸ் எண்டர்டெயின்மெண்ட்(பி) லிட்,விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆறுமுககுமார் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து தயாரித்திருக்கும் படம் லாபம் சமூக கருத்துக்களை அள்ளி வீசி அனைவரையும் தூண்டில் போடும்.

Exit mobile version