Chennai City News

ரோஜர் மூர் நினைவு நாள்

ரோஜர் மூர் நினைவு நாள்

கவர்ந்து இழுக்கும் கண்கள்… வேகத்தை காட்டும் நடிப்பு… என ஜேம்ஸ்பாண்ட் உளவாளி கதாபாத்திரத்திற்காகவே உருவெடுத்தவராக திகழ்ந்தவர் ரோஜர் மூர்.

1973 தொடங்கி, 1985 ஆம் ஆண்டு வரை ஜேம்ஸ்பாண்ட் ஆகவே வாழ்ந்தவர். ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்துள்ளார் ரோஜர் மூர்

1972 ஆண்டுவரை ஜேம்ஸ்பாண்டாக நடித்து வந்த சீன் கேனரிக்கு அடுத்து ’ லிவ் அண்ட் லெட் டை’ படத்தில் ஜேம்ஸ்பாண்டாக அவதாரமெடுத்தார் ரோஜர் மூர். தொடர்ந்து 12 ஆண்டுகளாக ‘தி மேன் வித் கோல்டன் கன்’ ,‘ தி ஸ்பை கூ லவ்டு மீ’ ’மூன் ரேக்கர்’, ’பார் யுவர் ஐஸ் ஒன்லி’, ’ஆக்டோபுஷி’, ’எ வியூ டு எ கில்’ ஆகிய படங்களில் ஜேம்ஸ்பாண்டாக வலம் வந்து அசத்தினார் ரோஜர் மூர்.

ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தைப்போலவே நிஜத்திலும் ரொமாண்டிக் ஹீரோதான் ரோஜர் மூர்.

’ஜேம்ஸ் பாண்ட் கேரக்டருக்கு உள்ள பெண் தோழிகளை விட நிஜ வாழ்க்கையில் அதிகம். எத்தனை பேருடன் நான் படுக்கையைப் பகிர்ந்து கொண்டேன் என்பதே எனக்கு நினைவில்லை. அதற்காக என் பெயரை ரோஜர் மூர் என்பதற்குப் பதிலாக ரோஜர் ‘மோர்’ என்று வைத்துக் கொள்ளலாம்’ என அவ்வப்போது வெளிப்படையாகச் சொல்வார் ரோஜர் மூர்.

’ஜேம்ஸ் பாண்ட் கேரக்டருக்கும், எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. திரையில் நான் நடித்தது நிழல் என்றால் நிஜத்தில் உண்மையான ஜேம்ஸ் பாண்ட் நான் தான். என்னை மாற்றிக் கொள்ள நான் முயற்சித்ததே இல்லை. அதற்காக நான் வில்லனும் கிடையாது. பாண்ட் போல நான் வீராதி வீரனும் இல்லை அதற்காக கோழையும் இல்லை’ என பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வெள்ளந்தியாக தன்னிலை விளக்கம் கொடுப்பார் ரோஜர் மூர்.

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என இயங்கி வந்த ரோஜர் மூரை 1991 ஆண்டு யுனிசெப் நிறுவனம் தனது நல்லெண்ணத் தூதுவராக நியமித்தது. 2008 ம் ஆண்டும் பிரான்ஸ் அரசு கலை இலக்கியத்துக்கான நல்லெண்ணத் தூதுவராக அவரை அறிவித்தது. இங்கிலாந்து அரசு சர் பட்டம் வழங்கி அவரை கவுரவித்தது.

லண்டன் ஸ்டாக்வெல்லில் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி பிறந்த அவர் புற்றுநோய் காரணமாக சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் தனது 89 வயதில் சுவிட்சர்லாந்தில் இதே மே 23(2017)ல் காலமானார் ரோஜர் மூர்.

Exit mobile version