Chennai City News

‘புதிய திரைப்பட நகரத்திற்கு கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும்’: இமெயில் பட நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை!

‘புதிய திரைப்பட நகரத்திற்கு கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும்’ இமெயில் பட நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை!

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இதை ஒரு சுமாரான படம் என்று நினைத்து தான் வந்தேன். ஆனால் இங்கே காட்சிகளை பார்த்தபோது ரிச் ஆகவே எடுத்து இருக்கிறார்கள். ஒரு மசாலா படம் குஜாலா இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் இங்கே வரவில்லை. கதாநாயகிகள் படத்தை புரமோஷன் பண்ணுவதற்காக மட்டுமல்ல அவர்களையே புரமோஷன் பண்ணிக் கொள்வதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும். வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் வரவில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம். இருந்தாலும் அவர்களையும் கேட்டு இதுபோன்று தேதிகளை முடிவு செய்ய வேண்டும்.

சமீபகாலமாக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள் பெரிய படங்களாக மாறி இருக்கின்றன. தரமணி திரைப்பட நகரத்தை மூடியபோது சிறிய படங்கள் எல்லாம் பாண்டிச்சேரிக்கும் பெரிய படங்கள் எல்லாம் ஹைதராபாத்திற்கும் கிளம்பி சென்றனர். அதனால் அவற்றை திறக்க வேண்டும் என்று கலைஞரிடமும் கடந்த வருடம் முதல்வர் மு.க ஸ்டாலினிடமும் கோரிக்கை வைத்தேன். சமீபத்தில் நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பூந்தமல்லி அருகில் 140 ஏக்கரில் 500 கோடி செலவில் திரைப்படம் நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு நம்மை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் இதை மனதார வரவேற்கிறோம்.

கடந்த பத்து வருடங்களாகவே தமிழ் சினிமாவில் சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்களுக்கு சோதனைகள், கஷ்டங்கள். வேதனைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த திரைப்பட நகர் உருவாகிவிட்டால் நிச்சயமாக தயாரிப்பு செலவில் ஒரு 40 சதவீதம் மிச்சமாகும். அந்த திரைப்பட நகருக்கு டாக்டர் கலைஞரின் பெயரை வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். விஞ்ஞான வளர்ச்சி வேண்டும். ஆனால் அது உயிரை பறிப்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். இது ஆன்லைன் விளையாட்டில் ஈடுபாடு கொண்டு அந்த மோகத்தில் இருக்கும் நபர்களை நல்வழிப்படுத்தும் படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

Exit mobile version