Site icon Chennai City News

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் – திரைத்துறையினர் இரங்கல்

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் – திரைத்துறையினர் இரங்கல்

நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார்.

விஜய் டிவியில் வடிவேல் பாலாஜி கலந்துகொண்ட ‘அது இது எது’, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சின்னத்திரையைத் தொடர்ந்து கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜிக்கு அவருடைய கை, கால்கள் செயலிழந்தன. இதனிடையே பணவசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி மரணமடைந்தார். 42 வயதாகும் அவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். வடிவேல் பாலாஜியின் மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரோபோ சங்கர், வடிவேலு பாலாஜி மரணம் குறித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், “என்னுடன் 19 ஆண்டுகள் பயணித்த கலைஞன். சின்னத்திரையில் முக்கியமான கலைஞன். வடிவேல் பாலாஜி மரணமடைந்த செய்தியைக் கேட்டு எனக்கு பேச்சு வரவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் மேடையில் ஒரே ஆளாக அனைவரையும் கட்டிப்போட்டு சிரிக்க வைக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞன். மரணம் இப்படியெல்லாம் வருமா என்பதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது.

10 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது என் மனைவி உள்ளிட்ட நண்பர்கள் சென்று நலம் விசாரித்து திரும்ப வந்துவிடுவாய் நண்பா என்று கூறிவிட்டு வந்தார்கள். அடுத்த 10 நாட்களில் இப்படி ஒரு செய்தியைக் கேட்கும் போது என்னால் தாங்க முடியவில்லை. இந்த மாதிரி நேரத்தில் தான் கடவுள் மீது கொஞ்சம் வெறுப்பு வருகிறது. நல்ல கலைஞனுக்குக் கூட இப்படி ஒரு சாவைக் கொடுப்பதா என்று. வடிவேல் பாலாஜியின் ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார்.

நகைச்சுவை நடிகை ஆர்த்தி கூறுகையில்,நடிகை ஆர்த்தி வடிவேல் பாலாஜிக்கு ரொம்ப நல்ல குணம். அவருக்கு உதவும் தன்மை இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்வது என்றே புரியவில்லை. அவர் இருக்கிற இடத்தை கலகலவென வைத்திருப்பார். நிறைய திறமைகள் மிக்கவர். அவருக்கு டான்ஸ் வரும் என்பதை நிரூபிப்பதற்காக அவ்வளவு கடுமையாக உழைப்பார் என்று கூறியுள்ளார்.

நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில், “சின்னத் திரையில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.நடிகர் உதயா தனது ட்விட்டர் பதிவில், “நகைச்சுவை நடிகர் மிகவும் திறமையான கலைஞன் வடிவேல் பாலாஜி மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. 15 நாட்களுக்கு முன்பு தன் மகனின் படிப்பு விஷயமாக என்னிடம் பேசினார் தாடி பாலாஜி மூலமாக, இன்று இல்லை என்று நினைக்கும் போது மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மரணமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நாளை மதியம் சேத்துப்பட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.

Exit mobile version