Chennai City News

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஏற்கனவே விஷால் தலைவராக இருந்தார். அவர் பதவி காலம் முடிந்துள்ளது. சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தயாரிப்பாளர் சங்கத்தில், தற்போது படம் தயாரிப்பவர்கள் என்று பட்டியலிட்டால் சுமார் 200 பேர்தான் இருப்பார்கள். மீதி அனைவருமே படம் எடுத்தவர்கள்தான், ஆனால் இப்போது படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்தச் சங்கம் செயல்பட்டு வருவதாகக் கருதுகிறார்கள். இதனால், தற்போது தொடர்ச்சியாக படம் தயாரிப்பவர்கள் நலனுக்காக இன்னொரு புதிய சங்கம் உருவாகி உள்ளது.

இந்த சங்கத்துக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர். துணைத் தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன் ஆகியோரும் பொதுச்செயலாளராக டி.சிவாவும் பொருளாளராக தியாகராஜனும் இணை செயலாளர்களாக லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சங்கத்தின் ஆதரவு தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, “கொரோனாவால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்யமுடியவில்லை. எனவே அவர்கள் தேவைகளை நிறைவு செய்யவும் படம் எடுப்பவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இந்த சங்கம் பாடுபடும். படம் எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்காகவே இந்த சங்கம் உருவாகிறது. உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இது தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு போட்டியான சங்கம் இல்லை” என்றார்.

தெலுங்கில் தாய்ச் சங்கமாக ஒரு தயாரிப்பாளர் சங்கமும், தற்போது படம் தயாரிப்பவர்கள் ஒரு சங்கமாகவும் செயல்பட்டு வருகிறார்கள். அதன் பாணியிலேயே தமிழ்த் திரையுலகிலும் தயாரிப்பாளர்களுக்கென்று இரு சங்கங்கள் செயல்பட உள்ளன.

Exit mobile version