நல்ல மனம் படைத்த சிலம்பரசன் நண்பராக கிடைத்ததற்கு இறைவனுக்குத்தான் நான் நன்றியை சொல்ல வேண்டும் – மனம் திறந்து பேசிய சந்தானம்

0
258

‘ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..!’ – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை வெளிப்படுத்திய சந்தானம்!

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் நடைபெற்ற வெளியீட்டிற்கு முன் நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், நடிகர் சந்தானம் பேசுகையில், ”தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டி டி ரிட்டர்ன்ஸ் என அனைத்து படங்களுக்கும் எழுத்து வடிவில் எங்களுக்கு உதவிய எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இருந்தாலும் அவருடைய ஆன்மா எங்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் என நம்புகிறேன்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள எஸ் டி ஆர் அவர்களுக்கு நன்றி. அவரைப் பற்றி நான் பல மேடைகளிலும், பல இன்டர்வியூக்களிலும் சொல்லியிருக்கிறேன், அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று. அவர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி , உயரத்திற்கு அழைத்துச் சென்றார்.  ‘காதல் அழிவதில்லை’ படத்தில் துணை நடிகராக நடித்திருக்கிறேன். அதனை பார்த்து தான் ‘மன்மதன்’ படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார் சிலம்பரசன்.

படப்பிடிப்பு தளத்தில் எனக்கான அறிமுகக் காட்சி பற்றிய விவாதம் நடைபெற்றது. “நீ லொள்ளு சபாவில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறாய். உன்னுடைய அறிமுகக் காட்சியில் ரசிகர்களிடத்தில் கைதட்டல் வரவேண்டும். அதற்காக எப்படி உன்னை அறிமுகப்படுத்துவது” என விவாதித்து கொண்டிருக்கிறோம் என்றார். அந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு என்னுடைய யோசனையையும் சொன்னேன்.‌ அதன் பிறகு அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதை ஏன் நான் இப்போது இங்கு சொல்கிறேன் என்றால், அன்றைய தினம் சினிமாவில் திரையில் நான் தோன்றும்போது கைத்தட்டல் இருக்க வேண்டும் என்று எனக்காக எடுத்த அக்கறையும், அன்பும்  இன்று வரை குறையாமல் தொடர்கிறது. இது போன்றதொரு நல்ல மனம் படைத்த சிலம்பரசன் நண்பராக கிடைத்ததற்கு இறைவனுக்குத்தான் நான் நன்றியை சொல்ல வேண்டும்.  சிம்பு ஐ லவ் யூ. எப்போதும் அவருக்கு பின்னால் நான் இருப்பேன். எஸ் டி ஆர் 49லும் என்னுடைய பங்களிப்பை வழங்குவேன். என்னுடைய பெற்றோர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

அடுத்ததாக என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான ஆர்யா.  ஆர்யாவை மட்டும் தான் எனக்குத் தெரியும். ஆர்யா தான் நிஹாரிகா என்டர்டெய்ன்மென்டை சார்ந்த கிஷோரை அறிமுகப்படுத்தினார்.  அவரை நான் ‘கிளாரிட்டி ‘கிஷோர் என்று தான் அழைப்பேன்.  அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்யா என் உயிர் நண்பர். ‘கல்லூரியின் கதை’ படத்தில் தான் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் நடித்த அழகான பெண்களை கவர்வதற்காக ஆர்யா என்னை காமெடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டார். அந்த அழகான பெண்கள் சற்று சந்தேகத்துடன் என்னை  பார்த்தார்கள். நண்பர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அவர்கள் முன்னால் நானும் சில காமெடியை பேசி நடித்து காட்டினேன். இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும் கவனித்து விட்டு, எங்களிடம் கேட்டனர், பிறகு சமாளித்தோம். ஆனால் ஆர்யா காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விடவில்லை. ‘சேட்டை’ படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என டைட்டிலில் இடம் பெற வைத்தார். ‘லிங்கா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் போது அவர் என்னிடம் நீங்கள் காமெடி சூப்பர் ஸ்டாரா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே என் நண்பர் ஆர்யா செய்த வேலை அது என விளக்கம் அளித்தேன்.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ஆனந்த் ஆர்யாவிடம் விவரித்தார் அவருக்கும் பிடித்து விட்டது. படத்தின் பணிகள் தொடங்கின. இந்த தருணத்தில் நான் சென்னையின் புறநகர் பகுதியில் வீடு ஒன்றினை வாங்கி, அதனை சீரமைத்து அங்கு குடும்பத்தினருடன் சென்று வசிக்கலாம் என திட்டமிட்டேன். இதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் என்னுடைய மனைவியும், அம்மாவும் அந்த வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வருவார்கள். இந்தத் தருணத்தில் ஒரு முறை ஆர்யா எனக்கு போன் செய்த போது வீட்டை புதுப்பிக்கும் பணியில் இருக்கிறேன் என்று சொன்னேன் உடனடியாக அவர் அந்த வீட்டிற்கு வந்தார். வீட்டை முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டு என்று சொல்லிவிட்டார். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்க, ஆர்யா அவரது நண்பருக்கு போன் செய்து வீட்டை இடிக்கும் பணியில் தீவிரம் காட்டி விட்டார். இந்த விஷயத்தை நான் எங்கள் வீட்டில் தெரிவிக்கவில்லை. அடுத்த வாரம் என்னுடைய அம்மாவும், மனைவியும் அந்த வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு வீடு இல்லாததை கண்டு திகைத்து விட்டார்கள். அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டை காணவில்லை என்று சொன்னார்கள். அதன் பிறகு அவர்களிடம் நடந்ததை சொன்னேன். ஆர்யா சொன்னால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் சொன்னேன். அப்போது என்னுடைய அம்மா நீங்கள் இருவரும் படத்தில்தான் இப்படி நடிப்பீர்கள். நிஜத்திலுமா இப்படி இருப்பீர்கள் எனக் கேட்டார். இந்த லெவலில் தான் எங்களுடைய பிரண்ட்ஷிப் இருக்கிறது.

‘கல்லூரியின் கதை’ படத்தில் தொடங்கிய எங்கள் நட்பில் நாங்கள் இருவரும் எதற்காகவும் பயந்ததில்லை. எதுவாக இருந்தாலும் தைரியமாக செய்வோம். வாழும் வரை சந்தோஷமாக வாழ்வோம். எது வந்தாலும் அதனை எதிர்கொள்வோம் என்பார். அந்த ஒரு சக்தி தான் அவரை இங்கு தயாரிப்பாளராக நிற்க வைத்து இருக்கிறது. என்னையும் நாயகனாக உயர்த்தி இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிக்கும் போது வேறு எந்த படத்திலும் நடிக்காதே உன் அனைத்து பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆர்யா நம்பிக்கை கொடுத்தார். படத்தை வெற்றி பெற செய்வது மட்டும்தான் உன் வேலை என்றார் அதற்காக இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆர்யாவுக்கு தருவேன் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநரான பிரேம் ஆனந்தை நான் தமிழ் சினிமாவின் கிறிஸ்டோபர் நோலன் என்று தான் சொல்வேன். ஒரு கதையை சொன்னால் அதனை பல லேயர்களில் சொல்வார். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் ஒரு ஹாரர் படம் என்றாலும் அதில் ஒரு கேம் ஷோ இருக்கும். அந்த கேமிற்குள் ஒரு திருட்டு கும்பலின் அட்வென்ச்சர் இருக்கும். இப்படி மல்டி லேயரில் ஒரு கதையை கச்சிதமாக உருவாக்குவார். அதேபோல் தான் இந்தப் படத்தின் கதையையும் அவர் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் தெளிவாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார். அந்த வகையில் ஆனந்த்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்திற்காக பணியாற்றிய முருகன், சேது உள்ளிட்ட என்னுடைய குழுவினருக்கும், இந்த படத்தில் என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் மாறனுக்கு டிவி காமெடி இருக்கிறது. ரெடின் கிங்ஸ்லிக்கு தலைகீழாக நடக்கும் காமெடி இருக்கிறது. மொட்டை ராஜேந்திரனுக்கு ஒரு எலி காமெடி இருக்கிறது. நிழல்கள் ரவி சாருக்கு ஒரு டாய்லெட் காமெடி இருக்கிறது. யாஷிகா ஆனந்திற்கு ஒரு பாட்டில் காமெடி இருக்கிறது. கஸ்தூரி மேடத்திற்கு ஒரு புக் காமெடி இருக்கிறது. இதற்கெல்லாம் திரையரங்கத்தில் கைத்தட்டல் கிடைக்கும். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நகைச்சுவை காட்சிகளில் பங்களிப்பு இருக்கிறது.

ஒரு படத்திற்கு மிகப்பெரிய பலமே இசைதான். இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கின்றன. படத்தைப் பார்க்கும்போது பின்னணி இசைக்காகவும் நீங்கள் கைதட்டுவீர்கள். குறிப்பாக மொட்டை ராஜேந்திரனுக்காக இவர் வாசித்திருக்கும் பின்னணி இசை ரசிகர்களை கவரும். இதற்காக ஆஃப்ரோவுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் ஹீரோயின் கீதிகா வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்த திரைப்படத்தில் புதிதாக என்ன இருக்கிறது என்றால், ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் கௌதம் வாசுதேவ் மேனனும், செல்வராகவனும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

ஒருவர் மிகுந்த உயரத்திற்கு செல்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டும் காரணம் அல்ல. உதாரணத்திற்கு ராமாயணத்தில் அனைவரும் ராமரை புகழ்கிறார்கள் என்றால்.. அவருடன் இருந்த சீதை, லட்சுமணன், விபீஷணன், பரதன், ராவணன் என எல்லா கேரக்டரும் சேர்ந்தது தான் ராமர் எனும் வெளிப்பாடு. அந்த வகையில் ஒருவர் உயரத்திற்கு செல்கிறார் என்றால் அவருடைய தனித்திறமை மட்டும் அதற்கு காரணம் அல்ல. அவரை சுற்றி  இருப்பவர்களும் தான் காரணம் என்பேன். இங்கு நான் உயர்வதற்கு சிலம்பரசன், ஆர்யா என பலரும் காரணமாக உள்ளார்கள்.

மே 16ம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் காமெடியை இடம்பெறச் செய்திருக்கிறோம். டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை விட மும்மடங்கு காமெடியுடன் கூடிய விருந்து இருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள்,” என்றார்.