Chennai City News

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் துவக்க விழா!

நடிகர் கிருஷ்ணாவின் 23 வது படம்! – பூஜையுடன் இன்று தொடங்கியது!

’அலிபாபா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான கிருஷ்ணா, தொடர்ந்து ’கற்றது களவு’, ‘கழுகு’, ‘வன்மம்’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து வந்தவர் தனுஷின் ‘மாரி 2’ உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு வேடங்களில் நடித்து வருக் கிருஷ்ணாவின் 23 வது படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் அப்பாதுரை பாரதிராஜா இயக்குகிறார். டான் கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கிருஷ்ணா நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக வர்ஷா விஷ்வநாத் நடிக்கிறார்.

நாகர்ஜூன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். பாப்ப நாடு சி.உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்ற, வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்கிறார். மேலாளராக துரை சண்முகம் பணியாற்ற, மக்கள் தொடர்பாளராக குணா பணியாற்றுகிறார்.

கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் மற்றும் கமர்ஷியல் திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், ‘கழுகு’ இயக்குநர் சத்யசிவா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார்.

திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட இருக்கும் இப்படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘கிருஷ்ணா 23’ என்று வைக்கப்பட்டுள்ளது.

படம் குறித்து நடிகர் கிருஷ்ணா கூறுகையில், “என்னுடைய ஒவ்வொரு படங்களுக்கு இடைவெளி இருப்பதற்கு காரணம், நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பது தான். என்னிடம் பலர் கதை சொல்வார்கள், பல தயாரிப்பாளர்கள் கூட படம் பண்ணலாம் என்று வருவார்கள். ஆனால், அந்த கதை எனக்கு திருப்தியாக இல்லை என்றால், நானே வேண்டாம் சார் போட்ட பணம் வீணாகிவிடும், என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பியிருக்கிறேன். அதன்படி, இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும் என்பதால் ஒப்புக்கொண்டேன். இயக்குநர் படத்திற்கான நிறைய தலைப்புகளை தேர்வு செய்து வைத்திருக்கிறார், ஆனால் அதில் எதை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம், அதனால் தான் தலைப்பு அறிவிக்கவில்லை. விரைவில் படத்தின் தலைப்பை வெளியிடுவோம்.” என்றார்.

இயக்குநர் அப்பாதுரை பாராதிராஜா படம் குறித்து கூறுகையில், “இப்போது படம் பற்றி எதுவும் சொல்ல முடியாது. இது தான் ஆரம்ப நிலை, விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்க இருக்கிறோம். அதன் பிறகு படம் எந்த மாதிரியானது உள்ளிட்ட தகவல்களை தெரிவிப்போம். தற்போது இதுவே போதும் என்று நினைக்கிறேன். எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Exit mobile version