Chennai City News

துக்ளக் தர்பார் விமர்சனம்

துக்ளக் தர்பார் விமர்சனம்

அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் துக்ளக் தர்பார்.
வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

வெளியீடு: சன் டிவி, நெட்ஃப்ளிக்ஸ்.

ஒரு அரசியல் பேரணியின் போது பிறந்த சிங்கம் (விஜய் சேதுபதி) சிறுவயதில் தாய், தந்தையை இழந்து தனது தங்கை மஞ்சிமா மோகனுடன் வாழ்ந்து வருகிறார். ஜே.கே. நகரின் அரசியல் பெரும்புள்ளியாக இருக்கிறார் பார்த்திபன். அரசியலில் ஆர்வம் கொண்ட விஜய் சேதுபதி, பார்த்திபன் இருக்கும் கட்சியில் தொண்டனாக நுழைகிறார். பின்னர் சூழ்ச்சி செய்து கவுன்சிலர் வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெறுகிறார். மேலும் தான் வெற்றி பெற்ற தொகுதியை பார்த்திபன் மூலம் ரூ.50 கோடிக்கு கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்று விடுகிறார். இதற்கிடையில் ஒரு சண்டையில் விஜய் சேதுபதிக்கு மண்டையில் அடிப்பட்டு வித்தியாசமாக நடந்து கொள்கிறார். இதனால் விஜய் சேதுபதி வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுகிறது. அதேசமயம் நில விவகாரம் தொடர்பான ஆவணங்களை யாரோ ஊடகங்களுக்கு கொடுத்து விடுகிறார்கள், ரூ 50 கோடி பணமும் காணாமல் போகிறது. இதனால் கோபமடையும் பார்த்திபன், விஜய் சேதுபதியை பழிவாங்க நினைக்கிறார். இறுதியில் ரூ.50 கோடி கிடைத்ததா? யார் கொள்ளை அடித்தது? விஜய் சேதுபதி வித்தியாசமாக நடந்து கொள்ள காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

அரசியல் நெடியுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் அரசியல்வாதிகளாக ஒருவருக்கொருவர் குழி பறித்துக் கொள்ளும் கேரக்டரில் போட்டி போட்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கருணாகரனின் சிறப்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

கதாநாயகியாக வரும் ராஷி கண்ணா, தங்கை கதாபாத்திரத்தில் மஞ்சிமா மோகன், பகவதி பெருமாள், கதைக்கு ஏற்ற தேர்வு.

கதை ஓட்டத்திற்கு பைனல் டச் சத்யராஜ், சிறப்பு.

துக்ளக் தர்பாரில் ஒரு கட்சி இடத்தைப் பெற எதையும் செய்யும் ஒரு ஆர்வமுள்ள அரசியல்வாதியின் அரசியல் பின்னணி கொண்ட படமாக சுவராஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

மொத்தத்தில் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் துக்ளக் தர்பார்; காமெடி எண்டர்டெயினர்.

Exit mobile version