Site icon Chennai City News

‘தி லெஜண்ட்’ மலையாள ட்ரெய்லர் வெளியீடு – தெலுங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பதி பிரசாத்

‘தி லெஜண்ட்’ மலையாள ட்ரெய்லர் வெளியீடு – தெலுங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பதி பிரசாத்

லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மலையாள ட்ரெய்லர்  வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களின் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘தி லெஜண்ட்’. இந்தப் படத்தை லெஜண்ட் சரவணனின், தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடெக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா, மயில்சாமி, விஜயகுமார், சச்சு, லதா, நாசர், பிரபு, ரோபோ சங்கர், யோகி பாபு, பேபி மானஸ்வி கொட்டாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் தமிழ் திரையுலகின் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் மறைந்த விவேக் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில், சென்னையில் பிரம்மாண்டமான அரங்கங்கள் அமைத்து படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பின்னர், கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில், முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ‘மொசலோ மொசலு’ பாடல் 3 மாதங்களில் யூ-ட்யூப் தளத்தில் 14 மில்லியன் பார்வையாளர்களையும், ‘வாடி வாசல்’ பாடல் யூ-ட்யூப் தளத்தில் ஒரு மாதத்திலேயே 19 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து தற்போதும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படத்தின் ட்ரெயிலர் 29 மில்லியன் பார்வையாளர்களை கடந்து முன்னணி நடிகர்களுக்கு இணையாக மாஸ் காட்டி வருகிறது.

இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பும், எஸ்.எஸ். மூர்த்தி கலைப்பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகரன் எழுதியுள்ளார். சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்துள்ளார். வருகிற 28-ம் தேதி இந்தப் படம் தமிழகத்தில் மட்டுமே 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையைக் கோபுரம் ஃபிலிம்ஸின் ஜி.என். அன்புச்செழியன் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் திரையரங்க வெளியீட்டு உரிமையை, பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பதி பிரசாத் கைப்பற்றியுள்ளார். திருப்பதி பிரசாத்தின் ஸ்ரீலஸ் மூவீஸ் சார்பில் வெளியிடப்படுவதால், அதிகளவிலான திரையரங்குகள் ‘தி லெஜண்ட்’ படத்திற்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் ‘தி லெஜண்ட்’ படத்தின் மலையாள டீசரும் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.

https://twitter.com/_TheLegendMovie/status/1547109634225229824

Exit mobile version