ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’
வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..
இந்தப்படம் எடுத்து முடித்த பிறகு தான் என்னைப் பாடல் எழுதக் கூப்பிட்டார்கள், காளி வெங்கட் நாயகன் என்றார்கள் அவர் எந்தப்படத்திலிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். இந்தப்படம் பார்க்கப் போகும் போது வியாபாரத்திற்கு ஏதாவது இருக்க வேண்டுமே என நினைத்தேன் ஆனால் அதையெல்லாம் படம் மறக்கடித்துவிட்டது. அதன் பிறகு தான் இந்தப்பாடல் எழுதினேன். வடிவேலு பாடிய அந்தப்பாடலை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள். இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் பாலசாரங்கன் இருவருக்கும் நன்றிகள். இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. காளி வெங்கட் பசிக்கும் இன்னும் நிறையத் தீனி வேண்டும். இந்தப்படம் அதில் ஒன்றாக இருக்கும் வாழ்த்துக்கள். ரொம்ப சின்ன படம் ஆனால் ரொம்ப வலிமையான படம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி
ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜி. கே. பேசியதாவது..
ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிக்கையாளனாகத் தொடங்கிய பயணம், 15 வருடங்கள். இங்கு இருக்க ஒளிப்பதிவாளராக ஆனதற்குக் காரணமான, இப்படத்தின் வாய்ப்பைத் தந்த கார்த்திகேயன் அண்ணாவிற்கு நன்றி. இப்படம் கார்த்திக் உடன் இணைந்து 3 வருடங்கள் முன்பு தொடங்கியது. இப்படம் உருவாகத் தயாரிப்பில் உறுதுணையாக இருந்த மோனிகா, ஷான், வீரமணி, ஆகியோருக்கு நன்றி. மெட்ராஸ் மேட்னி வாழ்க்கையை உண்மையாகச் சொல்லும் படம், நீங்கள் கவனிக்க மறந்த, தவறவிட்ட தருணங்களை உங்களுக்கு இப்படம் ஞாபகப்படுத்தும். அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் பாலசாரங்கன் பேசியதாவது…
இயக்குநர் கார்த்திகேயன் அண்ணாவுடன் மூன்று வருடம் முன்பு ஒரு குறும்படத்தில் ஆரம்பித்த பயணம், அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் இந்தப்படம். முதல் படத்திலேயே வடிவேலு முதல் பல ஜாம்பவான்களுடன் பணியாற்றும் வாய்ப்பு. நான் கேட்ட அனைத்தையும் தந்தார்கள். இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நிர்வாகத் தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் பேசியதாவது…
இந்தப்படம் செய்யக்காரணமான வாய்ப்புத் தந்த கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி, தயாரிப்பாளராக அவர் எனக்கு பெரும் சுதந்திரம் தந்தார், அவர் இயக்குநராகத் தான் செயல்பட்டார், படம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தை எங்கு கோண்டு செல்வது என்று யோசித்த போது தான் ட்ரீம் வாரியர்ஸ் வந்தார்கள் அவர்களுக்கு நன்றி அனைவருக்கும் நன்றி.
எடிட்டர் சதீஷ்குமார் பேசியதாவது…
இந்தப்படம் செய்தது மிக மகிழ்ச்சி.குழந்தை பிறக்கும் முதல் தடவை ஒரு பெண் குழந்தையாக இருந்தால் எவ்வளவு சந்தோசமோ அவ்வளவு சந்தோசம். படம் திரையிட்ட இடங்களிலிருந்து நல்ல பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி.
நடிகர் சாம்ஸ் பேசியதாவது…
சின்னப்படம் பெரியபடம் என்பதெல்லாம் மக்கள் தீர்மானிப்பது தான். 20 கோடியில் எடுத்து வசூலில் மிரட்டும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் தான் பெரிய படம். ஒரு சில படங்களில் தான் நாம் நடிக்கும் பாத்திரம் நமக்குத் திருப்தி தரும். அந்த வகையில் இந்தப்படம் மிகுந்த திருப்தி தந்த படம். ஊறுகாய் விற்கும் என் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு மெனக்கெட்டார்கள், அது எனக்கு மிகவும் பிடித்தது. இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு என எல்லோரும் வந்தது மிகப்பெரிய விசயம். சத்யராஜ் படம் பார்த்து உள்ளே வந்துள்ளார். வடிவேலு சார் வரக்காரணம் மோனிகா மேடம் தான். நாம் ஆசைப்பட்டால் கேட்டுவிட வேண்டும். கேட்டால் ஆமாம் இல்லை ஆனால் கேட்காதவர்களுக்கு இல்லை மட்டும் தான். கார்த்திகேயன் இதில் ஆசைப்பட்டதெல்லாம் நடந்துள்ளது. படத்தை நம்பி ட்ரீம் வாரியர்ஸ் வந்தது பட வெற்றிக்குப் பிறகு வார்னர் பிரதர்ஸ் வரட்டும். காளி வெங்கட் நான் பொறாமைப்படும் நடிகர், அவருடன் நடிக்கும் போது, அவர் நடிப்பதே தெரியாது, அவர் தொட வேண்டிய உயரம் இன்னும் அதிகம் உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகை கீதா கைலாசம் பேசியதாவது…
என்னை இதற்கு முன் எமகாதகி பிரஸ்மீட்டில் கோடம்பாக்கத்து அம்மாவாக அழகாக கொண்டாடுனீர்கள், ஆனால் அப்போது நான் உங்களிடம் வித்தியாசமான கதாப்பாத்திரம் செய்ய ஆசை என சொல்லியிருந்தேன் . இப்படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது, இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த கார்த்திகேயன் மணிக்கு நன்றி. ரொம்ப சின்ன பாத்திரம் தான் என்றாலும் மிக நிறைவான பாத்திரம், இப்படத்தில் நடித்த அனுபவம் மிகச்சிறப்பாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
நடிகர் விஷ்வா பேசியதாவது…
நடிகை ஷெல்லி பேசியதாவது…
நான் மலையாளி எனக்குத் தெரிந்த தமிழில் பேசுகிறேன். இந்தப்படம் மிக சிறந்த அனுபவம், இப்படத்தில் எல்லோரும் சமமாக நடத்தப்பட்டார்கள் அது சினிமாவில் அரிதான விசயம், அதற்காக இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு நன்றி. அவர் மிக அமைதியாக, பொறுமையாக அனைவரையும் பார்த்துக்கொண்டார். அவரது எழுத்துக்கு நன்றி. இந்தப்படத்தில் காளி வெங்கட் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரும் நானும் இந்த படக் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளோம். இந்த புரடக்சன் சினிமாவுக்கு புதுசு, எல்லோரும் ஐடி வேலை பார்த்தவர்கள் யாருக்கும் சினிமா தெரியாது ஆனால் மிகச்சிறப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்கள், ரோஷினி, விஷ்வா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இது நிஜமான வாழக்கையை சொல்லும் படம், கண்டிப்பாக இந்தப்படம் உங்களை மகிழ்விக்கும், இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் கலையரசன் பேசியதாவது…

டூரிஸ்ட் ஃபேமிலி பட சக்சஸ் மீட்டுக்கு வரவில்லை, அதற்குக் காரணம் காளி வெங்கட் தான் அவருடன் தான் ஷீட்டில் தான் இருந்தேன், நீங்கள் தந்த பாராட்டுக்கள் என் 15 வருட சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிதாக இருந்தது. இந்த மேடையைக் காளி வெங்கட் எனக்குத் தந்திருக்கிறார் நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் அதற்கு நான் மூன்று காரணங்கள் சொல்கிறேன் முதலி எஸ் ஆர் பிரபு சார் இந்தப்படத்தை வாங்கியுள்ளார், இரண்டாவது டிரெய்லரும் பாடலும் அவ்வளவு நன்றாக உள்ளது, மூன்றாவது ஒரு படம் முடித்துவிட்டு டப்பிங்க் எல்லாம் முடித்து படம் நன்றாக வந்திருந்தால் அது நம் நடவடிக்கையில் தெரிந்து விடும், காளி வெங்கட் அண்ணாவுடன் தான் மூன்று மாதமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன் ஆணவத்தின் உச்சக்கட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார் அப்படியெனில் கண்டிப்பாகப் படம் ப்ளாக்பஸ்டர் தான். இவர் வாழும் இந்த நாட்டில் நானும் வாழ்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ப்ளாக் அன் ஒயிட் காலத்திலிருந்து, டிஜிட்டல் வரை, சினிமாவில் எல்லா அறிவுரைகளும் எங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் காளி வெங்கட் அவர்களுக்கு நன்றி. நான் இது மூலமா ஐநா சபைக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த வருஷத்துக்கான நோபல் பிரைஸ் காளி அண்ணாவிற்குக் கொடுத்தே ஆகவேண்டும். உங்கள் குழுவிற்கு மிகப்பெரிய வாழ்த்துக்களும் நன்றிகளும். அனைவருக்கும் நன்றி.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது…
எல்லாருக்கும் வணக்கம். மெட் ராஸ் மேட்னி படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமா வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைக்கு மொத்த இந்திய சினிமாவும் ஒரு முக்கியமான ஒரு காலகட்டத்தில இருக்குன்னு நினைக்கிறேன். சினிமாவின் மார்க்கெட் முழுக்க மாறியிருக்கு, கடைசி ஒரு வருடத்தில் என்ன படம் செய்வது என்பதில் எல்லோரிடமும் குழப்பம் இருக்கிறது, ஆனால் மக்கள் இன்னும் தியேட்டருக்கு நிறைய வந்து படம் பார்க்கறாங்க. நல்ல படங்களை சப்போர்ட் பண்றாங்க. எல்லாரும் ஒரு படம் ஆரம்பிக்கிறப்போ, இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறணும். நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கணும். நம்முடைய கனவு நிறைவேறணும். நிறைய பணம் சம்பாதிக்கணும். பேர சம்பாதிக்கணும் இந்த மாதிரி நிறைய ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான விஷயத்தோட ரொம்ப பாசிட்டிவாதான் ஆரம்பிக்கிறோம். ஆனால் ஆரம்பிக்கிற எல்லா படங்களும் அதே மாதிரியான அவுட்புட்டோட வந்து முழுமை பெறறது இல்ல. அது ரொம்ப சிக்கலான ஒரு விஷயம். நிறைய வெவ்வேறு விதமான கலைஞர்களுடைய பணிகள் ஒரு படத்துக்கு தேவைப்படுது அது அழகா அமைஞ்ச் படமா மெட்ராஸ் மேட்னி படத்தைப் பார்க்கிறேன். சின்ன படம் பெரிய படம் அப்படின்னு எப்பவுமே நம்மளே வகைப்படுத்திட்டே இருக்கோம். சின்ன படம் பெரிய படம் அப்படின்னு, எப்பவுமே நம்மளே வகைப்படுத்திட்டே இருக்கோம். அப்படி இல்லாம பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒரு மிடில் கிளாஸ் லைஃபை, ரொம்ப எதார்த்தமா அதே நேரத்துல ரசிக்கும்படியா இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டர்ஸும் நம்ம வாழ்க்கையில நம்ம பார்த்த கேரக்டர்ஸ திரும்பி பார்க்கிற மாதிரி இருந்தது. ஒரு மிடில் கிளாஸ் லைஃப் மேட்னி ஷோவா பாக்குற மாதிரியான ஒரு அனுபவம்தான் இந்தப்படம். நிறைய விஷயங்கள் ரொம்ப நாஸ்டாலஜிக்கா இருந்தது. கார்த்திகேயன்மணி மிகச்சிறப்பாக படத்தை தந்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் சினிமாவில் முக்கியமான ஆளாக வருவார், எல்லா நடிகர்களும் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள். இசையமைப்பாளர் பாலசாரங்கன் இசை மிகச்சிறப்பாக இருந்தது. காளி வெங்கட்டை வைத்து ஒரு ஆக்சன் படமே எடுக்கலாம் அவர் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இருந்தது. இப்படத்தை ஒரு மாஸ் கமர்ஷியல் சினிமாவாகத்தான் நான் பார்க்கிறேன் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை ரோஷினி பேசியதாவது…
ஆனந்த சார் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு வந்தது அவருக்கு நன்றி, நாங்க எந்த ஒரு இடத்திலும் மேக்கப் போடாம அவ்வளவு அழகா நான் இருக்கிறேன் என்பதை இவரோடு பிரேம்ல தான் பார்த்து தெரிந்துகொண்டேன். நன்றி ஆனந்த் சார். கார்த்திக் சார் கதை சொன்னபோதே என் வீட்டு ஞாபகங்கள் வந்தது, படம் பார்க்கும் போது உங்கள் எல்லோருக்கும் உங்கள் வீட்டுச் சம்பவங்கள் ஞாபகம் வரும். எனக்கு வயதானால் கூட இப்படி ஒரு படம் நான் நடித்திருக்கிறேன் எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன், அந்தளவு மனதுக்கு நெருக்கமான படம் இது. காளி வெங்கட் சாருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம், அவர் நடிப்பு பயங்கர அமேசிங்கா இருக்கும். ஸ்விட்ச் போட்ட மாதிரி ஒரு கேரக்டர்ல இருந்து வேற கேரக்டர்ல அவ்ளோ அழகா பண்ணுவார், இந்தப்படத்தில் அவர் தான் எனக்கு அப்பா. இந்த படத்தில் ஒரு அப்பாவுக்கும் ஒரு பொண்ணுக்கமான ரிலேஷன்ஷிப் தான் படம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஷெல்லி மேடம் மிக அழகா நடித்திருக்கிறார்கள். படத்தில் எல்லோரும் மிகச்சிறப்பா வேலை பார்த்திருக்கிறார்கள், இந்தப்படம் பார்க்கும் போது உங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வரும். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசியதாவது…
என் அம்மா நிறைய இலக்கிய வட்டம் போவார்கள். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி நிறைய சொல்லுவார்கள், உண்மையிலேயே தமிழ் எவ்வளவு பழமை வாய்ந்தது என்ற கேள்வி எனக்குள் வந்தது, அதன் பிறகு நிறையப் புத்தகங்கள் படித்தேன். நம்மளோட வரலாறு இப்ப இருக்கங்களுக்கு யாருக்குமே தெரியலைன்றது எனக்கு மிகப்பெரிய வருத்தமா இருந்தது, ஒரு சில கவிதைகள வச்சே நாலு படம் எடுக்கலாம் கிட்டத்தட்ட புறநானூறே 400 கவிதை இருக்கிறது. 300ன்னு ஒரு படம் வந்திருக்கும். நீங்க எல்லாம் பார்த்திருப்பீர்கள் ரொம்ப பிரபலமான படம். எனக்கு தெரிஞ்சு அந்த படம் தமிழ் படமாகத்தான் எடுத்திருக்கவேண்டும். ஏன்னா அந்த மாதிரி கதை இங்க எவ்வளவோ இருக்கிறது. அந்த மாதிரி கதைகள் நமக்கே தெரியவில்லை. அது வந்து உண்மையிலேயே வருத்தத்துக்கு ஒரு விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன், ஏன் மத்தவங்க எடுக்கலன்றத கேக்குறத விட்டுட்டு, நான் ஏதாச்சும் பண்ணனும்னு தான் இந்தப்படம் எடுக்க முயற்சி செய்தேன். நான் ஐடில இருந்தாலும் எனக்கு வந்து சினிமா மேல பயங்கரமான பேஷன் உண்டு. அதன் தொடக்கமாகத் தான் இந்தக்கதை எழுதினேன், நான் வாழ்க்கையில் சந்தித்த, பார்த்த அனுபவங்கள் தான் இந்தப்படம், ஒரு அப்பா பசங்களுக்காக நாய் மாதிரி ஓடுறாரு. திடீரென்று பார்த்தா பசங்களுக்கும் அவருக்கும் ஒரு கேப் இருக்கு. அந்த அப்பாவிற்கு எவ்வளவு வலிக்கும். இந்தக் கதையை நான் எழுதி முடித்த பிறகு, ஒரு நல்ல அப்பா கிடைக்கவேண்டுமென்று நான் வலைவீசி தேடிட்டு இருந்தேன். சரியான அப்பா கிடைக்கலைனா இந்தப்படம் எடுக்க வேண்டாமென்று முடிவு செய்திருந்தேன் அப்போதுதான் காளி சார் இந்த கதைக்கு ஓகே சொன்னார், காளி வெங்கட் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை, காளி வெங்கட் சாரோட நடிப்பு எல்லாமே ரொம்ப உண்மையா இருந்தது, ஷெல்லி, விஷ்வா, ரோஷினி எல்லோரும் உங்க வாழ்க்கையைப் பார்ப்பது போலவே நடிப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் சார் கேரக்டர் இந்த டிரெய்லர்ல மிடில் கிளாஸ் லைஃப்ல என்ன இருக்கும் நோ ஆக்ஷன், நோ அட்வென்சர், நோ ரொமான்ஸ், சோ சேட், அப்படின்னு சொல்லுவார். ஆனால் இதில் எல்லாமே இருக்கும். அது உங்க லைஃப்லயும் இருக்கு. இந்த படம் மூலமா உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை ஞாபகம் வரும். எடிட்டர் சதீஷ், ஹரிகிருஷ்ணன் இல்லையென்றால் இந்தப் படம் நடந்திருக்காது இருவருக்கும் நன்றி. எங்களை நம்பி இந்தப்படத்தை எடுத்துக்கொண்ட ட்ரீம் வாரியர்ஸ் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி. இப்படம் ஜூன் 6 ஆம் தேதி வருகிறது, எல்லோரும் ஆதரவு தாருங்கள், நன்றி
காளி வெங்கட் பேசியதாவது…
முதலில் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி, ஒரு படம் எப்படிப்பட்ட படம் என்பது நீங்கள் வாங்கும்போது தெரிந்துவிடும், அதற்காக அவருக்கு நன்றி, சத்யராஜ் சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. படம் முடியற ஸ்டேஜ்லதான் இயக்குநர் அவரை அணுகினார் ஆனால், எந்த தயக்கமும் இல்லாமல் படம் செய்து தந்தற்கு நன்றி. வடிவேல் சாருக்கு மிக்க நன்றி. அபிஷேக் மூலம் தான் இயக்குநரைச் சந்தித்தேன், வீட்டுக்கு கூப்பிட்டு கதை சொன்னார், அதுவே எனக்குப் புதிதாக இருந்தது, இந்தக்கதை சொன்னவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் எல்லா அப்பாவும் தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள், நான் அதிகம் சொல்லவில்லை படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள். ஆனந்த் கேமரா ஒர்க் மிகச்சிறப்பாக இருந்தது.ஷெல்லி உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது, மிகச் சிறப்பாக நடித்துள்ளார். விஷ்வா, ரோஷினி எல்லோருக்கும் நன்றி. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை, ஒரு மாறுபட்ட தளத்தில், அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொடுள்ளது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.