சென்னை உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது!
சென்னையில் இயங்கி வந்த புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்று தான் உதயம் தியேட்டர். 1983-ஆம் ஆண்டு அசோக் நகரில் தொடங்கப்பட்டு உதயம் திரையரங்கம், சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்று. கட்டப்பட்டபோது உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று திரைகளை கொண்டிருந்தது. பின்னாட்களில் சொத்துப் பிரச்சினை காரணமாக உதயம் திரையரங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு, மினி உதயம் என்ற பெயரில் கூடுதலாக ஒரு திரை சேர்க்கப்பட்டது.
மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் பெரியளவில் கால் பதிக்காத காலக்கட்டத்தில் சென்னை ரசிகர்களின் ஆதர்ச திரையரங்கங்களில் ஒன்றாக ‘உதயம்’ திகழ்ந்தது.
90-களுக்குப் பிறகு இந்த திரையரங்கம் விஜய், அஜித் ரசிகர்களின் கோட்டையாக மாறியது. பல படங்கள் இங்கு வெள்ளி விழா கண்டன. அதேபோல சென்னையில் நல்ல வசூல் ஆவர்த்தனம் நடக்கும் திரையரங்குகளில் ஒன்றாகவும் உதயம் விளங்கியது. சென்னையில் மல்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் தலைதூக்கிய பிறகு மெல்ல உதயம் போன்ற திரையரங்கங்களின் மவுசு குறையத் தொடங்கியது. அத்துடன் எப்போது போட்டா போட்டிக்கொண்டு ஓடிடி தளங்கள் வந்தோ அன்று முதல் தியேட்டர்களுக்கு பொதுமக்கள் வருகை மிகவும் குறைந்தது. அதுவும் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் படம் என்றால் ஒரு வாரத்திற்கு தியேட்டர்களில் கூட்டம் இருக்கும். அடுத்த சில நாட்களில் தியேட்டர்களில் ஆளில்லாம் காற்று வாங்கும் சூழல் தான் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக பழமையான தியேட்டர்களுக்கு செல்வதை விட மக்கள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு செல்லவே அதிகளவில் ஆர்வம் காட்டி வந்தனர்.
40 ஆண்டுகளுக்கு முன்னர், திருநெல்வேலி மாவட்டம் உதயத்தூரில் இருந்து சென்னைக்கு வந்த பரமசிவம் பிள்ளை, கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 5 சகோதரர்கள் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி தியேட்டர் கட்ட முடிவெடுத்தனர்.
40 ஆண்டுகளாக சினிமா ரசிகர்களின் கோட்டையாக விளங்கி வந்த உதயம் தியேட்டரில், தங்களது அபிமான நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது பால் அபிஷேகம் செய்து திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் தியேட்டரும் காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை செய்யாமல் அப்படியே திரையிட்டு வந்தனர். இதனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்தது. இதன் காரணமாக வேறுவழியில்லாமல் அந்த தியேட்டர் உரிமையாளர் அதை விற்பனை செய்ய முடிவு செய்தார்.
அதன் படி திரையங்கு நிரந்தரமாக மூடப்பட்டதாகவும் இந்த இடத்தை பிரபல முன்னணி நிறுவனமாக காசாகிராண்ட் வாங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
40 வருடங்களாக இயங்கி வந்த உதயம் திரையரங்கம் மூடப்படுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.