Chennai City News

சாயம் விமர்சனம் : சாயம் கிராமத்து வில்லங்கம்

சாயம் விமர்சனம் : சாயம் கிராமத்து வில்லங்கம்

ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்து விஜய் விஷ்வா, ஷைனி, பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடிக்க  இந்த படத்தை ஆண்டனி சாமி  இயக்கியுள்ளார். நாகா உதயன் இசையமைக்க, கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்க யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.மக்கள் தொடர்பு-கேஎஸ்கே.செல்வா.

ஊர் நாட்டுத்தலைவர், உயர் சாதிக்காரர் பொன்வண்ணன், அவருக்கு உறுதுணையாக இருப்பவர் போஸ்வெங்கட், வேற்றுச்சாதிக்காரர் கணக்குப்பிள்ளை இளவரசு. இவர்களின் நல்ல வழிகாட்டுதலில் ஊர் மக்கள் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்கின்றனர். அதே ஊரில் உயர் சாதிக்காரரான ஆண்டனி சாமி சாதி வெறி பிடித்தவர். பொன்வண்ணனை சாதி சாயம் பூச பல முயற்சிகள் செய்து தோல்வி அடைகிறார். இதனால் கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் பிரச்சினை பெரிதாக்கி சாதி கலவரத்தை தூண்ட ஆண்டனி சாமி முற்படுகிறார். இளவரசு மகனும், பொன்வண்ணன் மகன் அபிசரவணனும் உயிர் நண்பர்கள். இவர்களின் நட்பை முறிக்க ஆண்டனி சாமி சமயம் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். அபிசரவணனுக்கும் அத்தை மகள் ஷைனிக்கும் திருமணம் நிச்சயித்த நிலையில், இளவரசு மகன் ஷைனியை காதலிப்பதாக ஆண்டனி சாமி பொய் சொல்கிறார்.இந்த காதல் விவகாரத்தை வைத்து அபி சரவணனை பகடைக் காயாக பயன்படுத்தி சாதிப் பிரச்சனையை தூண்டி விடுகிறார் வில்லன் ஆண்டனி சாமி. இந்த விவகாரம் கொலையில் முடிய, அபிசரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அதிலிருந்து சாதிவெறி பிடித்தவராக மாறி விடுகிறார் அபிசரவணன். சிறையிலிருந்து வெளியே வந்து சாதி கலவரத்திற்கு காரணமாகிறார். இவரின் மாற்றத்தை பயன்படுத்தி ஆண்டனி சாமி எப்படி சாதி வேற்றுமையை ஊரில் ஏற்படுத்துகிறார்? அதன் பின் என்னவானது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

விஜய் விஷ்வா என்கிற அபிசரவணன், ஷைனி, பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பலர் சிறப்பாக செய்துள்ளனர்.

கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோரின் ஒளிப்பதிவு கிராமத்து காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் திறம்பட கையாண்டுள்ளனர்.

யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் பாடல்களை தன் இசையால் நச்சென கொடுத்துள்ளார் நாகா உதயன்.

சாதிப்பிரச்னையோடு கிராமத்து கதையை இயக்கி, அதனால் கல்லூரி மாணவர்களின் நட்பும், சந்தோஷமும், வாழ்க்கையும் தொலைந்து போய் விடுகிறது என்பதை காதல், பழிவாங்குதல் என்று திரைக்கதையமைத்து மீண்டும் ஒரு சாதிக்கலவரக்கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் ஆண்டனிசாமி. ஹீரோவையே கடைசியில் வில்லனாக மாற்றும்  வல்லமை படைத்த வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பில் ஆண்டனிசாமி அசத்தியுள்ளார்.

மொத்தத்தில் ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் சாயம் கிராமத்து வில்லங்கம்.

Exit mobile version