‘தரையில் எண்ணெய் ஊற்றி அப்பாவை சிம்பு போல ஆட வைத்தோம்’ ; உமாபதி ராமையா
மிக மிக அவசரம், மாநாடு படங்களின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதாயின் நாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இயக்குனர் மூர்த்தி பேசும்போது, “இந்த படம் 2கே கிட்ஸ்-இன் ரத்தக்கண்ணீர் என சொல்லலாம். இது ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல். படம் எடுப்பதற்கு நல்ல ரசனை வேண்டும். அந்த வகையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழ் சினிமாவில் புதிய ஒரு அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். மலையாளத்தில் நடிகர் சீனிவாசனுக்கு இருக்கும் இடம் போல இங்கே தமிழ் சினிமாவில் ஒரு இடம் காலியாகவே இருக்கிறது. இந்த இடத்தை தம்பி ராமையா மூலமாக நீங்கள் தொடங்கி வைத்துள்ளீர்கள். எப்படி சீனிவாசனின் மகன் வினீத் சீனிவாசன் பெரிய இடத்தில் இருக்கிறாரோ அதேபோல உமாபதி ராமையாவும் அந்த இடத்திற்கு நிச்சயம் வருவார். தம்பி ராமையாவும் சமுத்திரக்கனியும் இணைந்தாலே அது அதிர்வு ஏற்படுத்தக்கூடிய ஒரு கூட்டணியாக இருக்கும். சமுத்திரக்கனி ஒரு நடமாடும் டிரான்ஸ்பார்மர். எப்போது எல்லாம் நமக்கு சார்ஜ் குறைகிறதோ அவரிடம் சென்று ஒரு மணி நேரம் பேசி விட்டு வந்தால் அது கூடிவிடும். இந்த படத்தில் நான் கேடுகெட்ட ஒரு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நாட்டாமையில் வரும் மிக்சர் பார்ட்டி கேரக்டரை இன்னும் கொஞ்சம் நீட்டித்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு கதாபாத்திரம். ஊருக்கு பத்து பேர் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள்.. ஆனால் அதையும் நீங்கள் ரசித்துப் பார்க்க முடியும்” என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் பேசும்போது, “சமூக நோக்கம் இல்லாதவர்கள் படைப்பாளிகளாக இருக்க முடியாது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை ஏதோ ஒரு வடிவத்தில் மக்களுக்கு கடத்த வேண்டும். அப்படிப்பட்டவர் தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இந்த களத்தில் நிற்பதற்கு கருத்தியல் சார்பாக எத்தனையோ இடையூறுகள் இருந்தாலும் அதில் உறுதியாக நின்று படங்களை தயாரித்து வருகிறார். தம்பி ராமையா அனைவரையும் மனதில் இருந்து வெளிப்படையாக பாராட்டுபவர். பல வழக்குகளை சந்தித்து நீதிபதிகளிடமிருந்து ஜாமீன் கிடைக்காமல் திண்டாட்டினேன்.. ஆனால் இந்த படத்தில் நீயே நீதிபதியாக நடி என்று ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து விட்டார் எனக்கு சாட்டை என்கிற பெயர் கிடைப்பதற்கு முக்கிய காரணமே சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இருவரும் தான். அவர்கள் கூட்டலில் வெளியான சாட்டை படம் பார்த்த பிறகு தான் என்னுடைய யூட்யூப் சேனலுக்கு சாட்டை என பெயர் வைத்தேன். இந்தப்படம் பார்ப்பவர்களின் உடலையும் உள்ளத்தையும் நடுங்க வைக்கும். தமிழ் சமூகத்தில் நிச்சயம் அதிர்வுகளை ஏற்படுத்தும்” என்றார்.
நடிகர் பிரவீன் பேசும்போது, “தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிறுவனத்தில் நான் தயாரிப்பு பணிகளில் பணியாற்றி வந்தேன். அவர் ஒவ்வொரு படத்திற்கும் கதையை தேர்வு செய்யும் விதம் வியப்பாக இருக்கும். இப்படி கமர்சியலாக இல்லாமல் படங்களை தேர்வு செய்கிறாரே என நினைத்தால் அசால்டாக அதை டீல் செய்து விட்டு போவார். அப்படி இந்த நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் எனக்குள்ளும் இருக்கும் நடிப்பு ஆசையை அவரிடம் வெளிப்படுத்த தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அவரே என்னை தம்பி ராமையாவிடம் அனுப்பி வைத்தார். அந்த வகையில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை தம்பி ராமையா கொடுத்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே பயிற்சிக்காக என்னை வரச் சொல்லி விட்டார். எந்த அளவிற்கு மீட்டருக்குள் நடிக்க வேண்டுமோ அந்த நடிப்பை அழகாக சொல்லிக் கொடுத்து பெற்றுக் கொண்டார்கள். சமுத்திரக்கனி அண்ணனை எதிர்த்து ஒரு வசனம் பேச வேண்டி இருந்தது. என் தயக்கத்தை போக்கி என்னை நடிக்க வைத்தார்.. தம்பி ராமையா அண்ணன் இன்னும் கைவசம் நாலு கதைகள் வைத்திருக்கிறார்.. இன்றைய இயக்குனர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்” என்றார்.
நடிகர் வெற்றி குமரன் பேசும்போது, “நாகராஜசோழன் படத்திலிருந்து நானும் சுரேஷ் காமாட்சியும் ஒன்றாக பயணிக்கிறோம். இந்த படத்தின் கதையை எங்கள் இருவரிடமும் தான் தம்பி ராமையா கூறினார். கதையை கேட்டதுமே இந்த படத்தை தயாரிக்கிறேன் என உறுதி கூறிவிட்டார் சுரேஷ் காமாட்சி. ஒரு முறை கும்பகோணத்தில் நண்பர் வீட்டு திருமண விசேஷத்திற்காக சென்றபோது அங்கே தம்பி ராமையா வந்திருந்தார். என்னுடன் வந்திருந்த சினிமா பிடிக்காத நபர்கள் கூட அவர் 20 நிமிடம் சொன்ன இந்த படத்தின் கதையை கேட்டு அப்படியே உறைந்து போய் விட்டார்கள். உமாபதியை பார்க்கும் போதெல்லாம் என் மகனை பார்ப்பது போன்று இருக்கும். படப்பிடிப்பில் ஏதாவது சிறு தவறுகள் செய்தால் கூட தனியாக அழைத்துச் சென்று அதில் திருத்தங்களை கூறுவார். யாரையும் மனம் நோகும்படி பேசாதவர். ராஜா கிளி படம் பார்ப்பவர்கள் படம் முடிந்த பிறகு கனத்த மனதுடன் அதே சமயம் முழு திருப்தியுடன் வெளியே வருவார்கள்” என்று கூறினார்
சமுத்திரக்கனி அண்ணனுக்கும் எனக்கும் இருப்பது ரொம்ப வித்தியாசமான ஒரு பிணைப்பு. என் அப்பா அவரை தம்பி என்று அழைப்பார் நான் அவரை அண்ணன் என்று அழைப்பேன். என் திருமணம் முதற்கொண்டு எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் எனக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். கிளைமாக்ஸ்சில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியை படமாக்கிய போது மீண்டும் ஒரு டேக் எடுக்க கேட்கலாமா என தயங்கினேன். ஆனால் சமுத்திரக்கனி அண்ணன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் அனைவரையும் தயார்படுத்தி அதை காட்சியை அற்புதமாக நடித்துக் கொடுத்தார். மற்ற நடிகர்கள் நடிப்பதற்கான வாய்ப்பை அழகாக ஏற்படுத்திக் கொடுப்பார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே ஒரு புது இயக்குநராக எனக்கு ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இந்த படத்தில் அப்பாவை வித்தியாசமான மனிதராக பார்ப்பீர்கள். எல்லோருக்கும் அப்பாதான் ஹீரோ என்பார்கள். என் படத்திலேயே அப்பாதான் ஹீரோ எனும் போது அவரை வைத்து கொஞ்சம் ஏதாவது புதுசாக செய்ய ஆசைப்படுவது இயல்பு தானே. சின்ன முள்ளு பாடலில் என் தந்தைக்கு ஒஸ்தியில். சிம்பு ஆடிய நடன அசைவுகளை தான் முயற்சி செய்தோம். ஆனால் அவர் புதிதாக ஒன்று செய்தார். காலை விரித்து நடனம் ஆடுவதற்காக தரையில் எண்ணெய் எல்லாம் ஊற்றி அவரை ஆட வைத்தோம். அடுத்து அவரே எங்கே எண்ணெய் கொண்டு வாருங்கள் எனக் கேட்க ஆரம்பித்து விட்டார். நல்ல படம் கொடுத்து இருக்கிறோம். இதயத்தில் இருந்து எடுத்துச் செல்வது போல ஒரு நல்ல கருத்தையும் இதில் சொல்லி இருக்கிறோம்” என்று கூறினார்.
நான் குணச்சித்திர நடிகர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் வினோதய சித்தம் என்கிற படத்தை எனக்காகவே உருவாக்கி, போகிற, வருகிற இடங்களில் எல்லாம் என்னை கொண்டாட வைத்தார். அவர் என்னை வைத்து வினோதய சித்தம் என்கிற படத்தை உருவாக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த ராஜா கிளியை என்னால் உருவாக்கியிருக்க முடியாது. எல்லா நேரத்திலும் பசிக்கு அடுத்தவர்களை எதிர் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா ? நமக்கு தேவையான போது நாமும் சமைக்க வேண்டும் தானே ? அப்படி தான் இந்த கதையை சமைத்தேன்.
உயரத்தில் இருக்கும் பல பேர் இன்று துயரத்தில் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த கதை எதையும் உணர்த்தாது. உணர வைக்க செய்யும். படத்தின் கதையை உருவாக்கியபோது நான் தான் இதை இயக்குவேன் என சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆனால் நானே நடித்துக் கொண்டு இயக்குநராக இருப்பது சரி வருமா என நினைத்து உமாபதியை இந்த படத்தை இயக்கும்படி கூறினேன். ஆனால் அவர் தயங்கினார். உடனே சுரேஷ் காமாட்சி அவரை அழைத்து நீ தான் படத்தை இயக்க வேண்டும் என்று இயக்குநராக கொண்டு வந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா எங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்தது காலம் எங்களுக்கு கொடுத்த கொடை. புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாவிற்கு பிறகு ஆறேழு மொழிகளில் பேசக்கூடிய வல்லமை கொண்டவர் அவர். சீதா பயணம் என்கிற பிரமாண்ட படைப்பை தனது மகளுக்காக அர்ஜுன் சார் எடுத்திருக்கிறார். இந்த ராஜா கிளி திரைப்படம் ஒரு கூண்டுக்கிளியாக இருந்தது. இப்போது வெளியே வந்து பறக்க இருக்கிறது.. சத்யஜோதி தியாகராஜன் சார் சொன்னது போல, அது தங்க கிளியாக வெளிவர பிரார்த்தனை செய்து கொள்கிறேன். எனக்கும் அரவிந்தசாமிக்கும் என்ன பெரிய வயது வித்தியாசம் ? ஆனால் அவருக்கு தந்தையாக நடிக்கும் தன்னம்பிக்கை எனக்கு இருந்தது. அதேபோல இந்த படத்தில் என்னுடன் நடித்த கதாநாயகிகளும் அது போன்ற தன்னம்பிக்கையுடன் தான் நடித்தார்கள்” என்றார்.
இந்த படம் தான் உமாபதிக்கு உச்சம் என சொல்ல மாட்டேன். இதுவும் ஒரு படம். ஆனால் அவரிடம் இன்னும் அதிக படைப்புத்திறமை ஒளிந்திருக்கிறது. அதற்கான படம் நிச்சயமாக அடுத்த அமையும் என நம்புகிறேன். மாநாடு படத்தின் படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்டிடம் உதவியாளராக பணியாற்றிய கேதரின் சுறுசுறுப்பும் திறமையும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. உமாபதியின் வயசுக்கு அவர் சரியாக செட்டாவார் என முடிவு செய்து அவர்கள் இருவரையும் இணைத்து விட்டேன். இயக்குனர் மணிவண்ணன், ராம் ஆகியோருக்கு அடுத்ததாக நான் வியந்தது தம்பி ராமையாவை பார்த்து தான். ஸ்கிரிப்டை கையில் வைத்துக்கொள்ளவே மாட்டார். வசனம் அது பாட்டுக்கு கொட்டும். அது அவரே எழுதியதால் மனதில் ஊறி போய்விட்டது.
மாநாடு சமயத்தில் எனக்கு போன் செய்து வாழ்த்தியது இரண்டு நடிகர்கள் மட்டுமே ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்னொருவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அதன் பிறகு சோசியல் மீடியாக்களில் கூட அவரை சமூக கருத்து சமுத்திரக்கனி என்று சொல்வதை பார்த்திருக்கிறேன் எல்லோராலும் அப்படி கருத்து சொல்லி விட முடியாது. கருத்து சொல்வதற்கு என்று ஒரு தனித்தன்மை வேண்டும். மிஸ்கின் சமுத்திரக்கனி இருவருமே உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. சமீபத்தில் என்னை கவர்ந்த இருவர் இவர்கள்தான். தம்பி ராமையா தான் கதாநாயகன் என தெரிந்தும் நடிக்க ஒப்புக்கொண்ட சுவேதா, சுபா இருவருக்கும் நன்றி. எப்போதும் ஸ்கிரிப்ட்டை தான் நம்பி நடிக்க வேண்டும்.
நம் பக்கத்தில் இருப்பவர்களின் அருமை நமக்கு பெரும்பாலும் தெரியாது. அப்படித்தான் என் அலுவலகத்தில் பணி புரியும் பிரவீன் இவ்வளவு நடிப்பான் என தெரியாது. நம் கூட இருப்பவர்கள் அடுத்த லெவலுக்கு வளரும் போது அதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. என்னுடைய அன்பு தம்பி கிரிஷ்ஷை அருமையான பாடகராக பார்த்திருப்பீர்கள். இந்த படத்தில் ஒரு அற்புதமான நடிகராக மாறி இருக்கிறார். ரகுவரனின் இன்னொரு வெர்ஷனாக அவரை பார்ப்பீர்கள். அவரது மனைவி சங்கீதாவிடம் இவர் சிறப்பாக நடித்திருப்பதாக சொன்னால் நம்பவே மாட்டேன் என்றார். படம் எடுப்பது மட்டுமே எங்களது வேலை. அது நல்ல படமா இல்லையா என்பதை அதன் வெற்றி மட்டும் தான் தீர்மானிக்கிறது. அதன் பட்ஜெட் தீர்மானிக்காது. இந்த படம் ஒரு மனிதனின் வாழ்வியல். இது மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும். இந்த படத்தை நவ-29ல் தான் வெளியிடலாம் என இருந்தோம். ஆனால் புஷ்பா 2 ரிலீஸ் காரணமாக இப்போது டிசம்பர் 13ல் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்றார்.
ஒரு இயக்குனரின் மூன்று படங்களை பார்த்தால் போதும்.. அந்த இயக்குனரின் கேரக்டர் என்னவென்று தெரிந்து விடும் என சொல்வார்கள்.. அது இயக்குனர்களுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்களுக்கும் பொருந்தும் என நான் நினைக்கிறேன். அப்படித்தான் தம்பி சுரேஷ் காமாட்சியை நான் பார்க்கிறேன். அவரது படங்களே சொல்லும் அவர் யார் என்று. இந்த சினிமா இருக்கும் வரை அவரது வி ஹவுஸ் நிறுவனம் இருக்கும். எந்த கதை எழுதினாலும் அண்ணன் தம்பி ராமையாவை வைத்து தான் எழுதுவேன், இப்போது கூட அவரை வைத்து தான் ஒரு கதை எழுதி முடித்து இருக்கிறேன். இருவரும் சந்தித்தால் கதைகள் மட்டும்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில் நமக்கு வாழ்க்கை கொடுத்த இந்த சினிமா மூலமாக இந்த சமூகத்திற்கு ஏதாவது சொல்வோம் இன்று நினைப்போம். எனக்கு அவ்வளவாக தெரியாது என்று சொல்பவன் தப்பித்துக் கொள்வான். எனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்பவன் தான் மாட்டிக் கொள்வான். நான் இப்போது வரை யாராவது என்னை கைப்பிடித்து அழைத்துச் செல்வார்கள் அவர்களுடன் சென்று விடலாம் என்று தான் இருக்கிறேன்.
தம்பி ராமையா அண்ணனிடம் அரசியல், சினிமா, இலக்கியம் என எந்த டாபிக் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவரை ஒரு நூலகமாகத்தான் நான் பார்க்கிறேன். உமாபதியுடன் ஒரு படம் நான் நடித்து இருக்கிறேன். ஒரு காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிக்கிறேன் என்று உமாபதி சொன்னபோது நான் கூட வேண்டாம் என்று சொன்னேன். தன்னம்பிக்கையுடன் நானே நடிக்கிறேன் என நடித்தார். நடிப்பு, பாட்டு, டான்ஸ் என எல்லா தகுதியுமே இருக்கும் அவருக்கு ஒரு சரியான கதவு திறக்கவில்லையே என்று நான் நினைத்தேன். முதல் கதவு அர்ஜுன் சார் மூலமாக திறந்தது. இப்போது இயக்குநராக இரண்டாவது கதவு திறந்துள்ளது. அவரது உழைப்புக்கும் ஒழுக்கத்திற்கும் இன்னும் பெரிய பெரிய தளங்களில் வந்து நிற்பார். கூடவே நானும் நிற்பேன்.
நானும் தம்பி ராமையாவும் பேசிய பல கதைகளில் ஒன்று தான் இந்த ராஜா கிளி. காலம் ஒரு மனிதனை எங்கே எல்லாம் கொண்டு போய் நிறுத்துகிறது. ஆனால் காலத்திடமிருந்து பதில் சொல்லாமல் இந்த உலகத்தில் இருந்து யாரும் தப்பித்துப் போய்விடவே முடியாது. அதனால் முடிந்தவரை உண்மையாக இருங்கள். எளிமையாக இருந்து விடுங்கள். காலம் நம்மை கைபிடித்து தூக்கி செல்லும் என்பது தான் இந்த படத்தின் கதை” என்றார்.