கேளிக்கை வரி குறைப்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்த திரைப்படத்துறையினர்!
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று திரைப்பட துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்தது தமிழக அரசு. இதன்பின், திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கு திரைப்படத்துறையினர், தயாரிப்பாளர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி
இந்நிலையில், இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக, தலைவர் என். ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக, தலைவர் திரு.என். ராமசாமி மற்றும் நிர்வாகிகள் சார்பில் தமிழ் திரைப்பட தரப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உள்ளூர் சேவை வரி சம்பந்தமாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற FICCI Media & Entertainment Retail விழாவில் கலந்து கொண்ட உலகநாயகன் திரு. கமலஹாசன் அவர்களும், மாண்புமிகு. துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் உள்ளூர் சேவை வரி (Localbody Tax) குறித்து கோரிக்கை வைத்தார். அதற்கு உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மாண்புமிகு. துணை முதலமைச்சர் உறுதி அளித்தார்.
மேற்படி கோரிக்கைகளை தாயுள்ளத்துடன் பரிசீலனை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சினிமாவை வாழவைத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி ஏற்கனவே இருந்த 8 சதவிகித வரியை தற்போது 4 சதவிகிதமாக குறைத்து அரசாணையை பிறப்பித்துள்ளார்.
மேலும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணாயால் சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் மீண்டும் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு ஊக்குவிக்கும் விதமாக நம்பிக்கை வளர்த்துள்ளார்.
மேலும் தயாரிப்பாளர்களின் வாழ்வாதார மேம்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அரசாணை பிறப்பித்துள்ளது தயாரிப்பாளர்களிடம் அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்ததியுள்ளது.
மேற்படி அரசாணை பிறப்பிக்க பெரிதும் உறுதுணையாக இருந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மற்றும் திரை உலகின் சார்பாக குரல் கொடுத்த உலகநாயகன் திரு. கமலஹாசன் அவர்களுக்கும் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாகவும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.