நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம் – மனம் திறந்து பேசிய சூரி
நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் ,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய் மாமன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார்.
எதிர்வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், நடிகர் சூரி பேசுகையில், ” இப்படத்தில் பணிகள் நிறைவடைந்த உடன் 20 நிமிட காட்சிகளை பார்த்துவிட்டு இப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்வதற்கான உரிமையை பெற்ற விநியோகஸ்தர் சிதம்பரம் அவர்களை முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவிற்கு வருகை தந்த சிறுத்தை சிவா, பாண்டிராஜ், லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் என அனைத்து இயக்குநர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். இவர்கள் என் மீது செலுத்தும் அன்பின் காரணமாக நிறைய நம்பிக்கை கிடைத்திருக்கிறது. டி சிவா, அருண் விஷ்வா என இங்கு வருகை தந்த தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாண்டிராஜ் படத்தில் இடம்பெறும் வசனத்தை போல் இந்த படத்திலும் இடம்பெற வேண்டும் என இயக்குநர் பிரசாந்திடம் சொல்லி இருக்கிறேன்.
ராஜ் கிரண் அப்பா இந்தப் படத்திற்காக நடிக்க ஒப்புக் கொண்டது எங்களுக்கெல்லாம் பெருமை. இந்தப் படத்தின் கதையை கேட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னதுடன் நடிக்கவும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து எங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியதற்கு நன்றி. கலைத்தாய் உங்களை நீடித்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பை தமிழ் திரையுலகம் சார்பில் வரவேற்கிறேன். இதற்கு முன் நீங்கள் இசை அமைத்த ஒன்ஸ்மோர் படத்தின் பாடல்களும் ஹிட் .இந்த படத்தின் பாடல்களும் ஹிட். படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது.. பாடல்களைக் கேட்டு எங்கள் குழுவினர் கொடுத்த நெருக்கடிகளுக்கும் , தொல்லைகளுக்கும் இந்த தருணத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூரி மீது இருக்கும் அன்பின் காரணமாகவும் , இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டதாலும் இப்படத்திற்கு பாடல்களை எழுதுவதற்கு சம்பளம் எதுவும் வேண்டாம் என்று சொன்ன பாடலாசிரியர் விவேக்கிற்கு என்னுடைய நன்றி. அவர் மாமன் படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு பெருமை. நாங்கள் நினைத்ததை விட இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. அதிலும் மண் சார்ந்த உறவுகளுக்கு உங்களுடைய வரிகள் நெருக்கமாக இருக்கிறது. இதற்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘ சீம ராஜா ‘படத்திற்காக இயக்குநர் பொன்ராம் என்னை சிக்ஸ் பேக் வைத்துக்கொள் என்றார் .இதற்காக ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன். என்னுடைய மனைவியும் உதவி செய்தார். இந்தப் படத்தை திரையரங்கத்தில் பார்ப்பதற்காக ஆவலுடன் குடும்பத்துடன் சென்றேன். ஆனால் அந்த சிக்ஸ் பேக் திரையில் 59 வினாடிகள் தான் இடம்பெற்றது. சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் அதுதான் என்னை இந்த அளவிற்கு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது. அன்று அது போன்றதொரு வாய்ப்பை நீங்கள் எனக்கு வழங்கவில்லை என்றால்.. தற்போது என் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை இருந்திருக்காது. அதனால் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தை இயக்குநர் ரவிக்குமார் பார்த்து விட்டார். அவர் இங்கு வருகை தந்து படத்தைப் பற்றிய விமர்சனத்தை பதிவு செய்ததற்கு நன்றி.
நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம். இந்தப் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது ‘சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா.. பொண்டாட்டி தான் சாமி’. இது என்னை மிகவும் நெகிழ வைத்தது. அதேபோல் எனக்கு சாமிக்கு அடுத்து குடும்பம் இல்லை குடும்பம் தான் சாமி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தது குடும்பம் தான். இந்தப் படத்தின் கதை உருவானதும் இங்கிருந்து தான். நான் இந்த படத்திற்காக கதையை யோசித்து எழுதவில்லை. எங்கள் குடும்ப உறவுகளில் நடைபெற்ற சம்பவங்களை தான் சொல்லி இருக்கிறேன்.
உங்கள் குடும்பத்தை மே 16ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு சென்று பார்க்க போகிறீர்கள். பல குடும்பங்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் நடக்கும். ” என்றார்.