Chennai City News

ஓடிடியில் வெளியிடுவது நல்லது கிடையாது – திரையரங்கு உரிமையாளர்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஓடிடியில் வெளியிடுவது நல்லது கிடையாது – திரையரங்கு உரிமையாளர்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘திமுக செட்அப் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. திமுக பிரச்சாரம் ரீலாக இருக்கிறது. அதிமுக பிரச்சாரம் ரியலாக இருக்கிறது. திமுக தற்பொழுது ரிமோட் கண்ட்ரோலில் இயங்குகிறது. தனியார் கார்பரேட் கம்பெனியின் கீழ் திமுக இயங்கி வருகிறது. அதிமுகவை யாரும் இயக்கவில்லை, சுயமாக செயல்படுகிறோம். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுகிறோம். அதிமுகவை பா.ஜ.கவின் அடிமை, பா.ஜ.க இயக்குகிறது என்று கூறிய மு.க.ஸ்டாலின் தான் ஒரு கம்பெனி கீழ் இயக்குகிறார்.

ஒரு கம்பெனி இயக்குகின்ற கட்சி தேவையா என்று மக்கள் நினைக்க தொடக்கியுள்ளனர். மு.க.ஸ்டாலின் இனி ஒரு முறை பிரச்சாரம் மேற்கொண்டால் அதிமுகவிற்கு 10 சதவீதம் வாக்கு அதிகரிக்கும். 125 இடங்களில் அதிமுக வெற்றி பெறும் என்று கருத்துகணிப்பு வெளியாகி உள்ளது. நாள்கள் செல்ல செல்ல அதிகரிக்கும். தனிபெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.

திரையரங்குகளில் படம் ஓடும் போது ஓடிடியில் திரைப்படத்தினை வெளியிட மாட்டோம் என்று கடிதம் கொடுத்தால் தான் திரைப்படங்களை வெளியிடுவோம் என்று கூறும் திரையரங்கு உரிமையாளர்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. கொரோனா ஊரடங்கு காலத்தில் சில திரைப்படங்கள் ஓ.டி.டியில் வெளியிடப்பட்டன. இதனை தற்காலிக ஏற்பாடாக வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன்.

திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர். 3 பேரும் இப்பிரச்சினை தொடர்பாக அமர்ந்து பேச வேண்டும். நகரத்தில் உள்ள மக்களுக்கு ஓடிடியில் பார்க்கும் வசதி இருக்கும். கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு அந்த வசதி கிடையாது. ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவது நல்லது கிடையாது. திரையரங்குகளில் ஓடிய பின்னர் ஓடிடியில் வெளியிடலாம். முதல் ரீலிஸ் திரையரங்குகளிலும், 2வது ரீலிஸ் ஓடிடியிலும் வெளியிடலாம். ஒரு காலக்கெடு நிர்ணயம் செய்து ஓடிடியில் வெளியிட வேண்டும். துரைமுருகனுக்கு திமுகவில் மரியாதை இல்லை.

திமுக குடும்ப கட்சியாக உள்ளது. சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் சொல்வதை கூட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்க மாட்டார்கள். தேர்தல் பயத்தில் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வன்முறைக்கு அஞ்சபவர்கள் அதிமுகவினர் கிடையாது. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’ என்று தெரிவித்தார்.

Exit mobile version